டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேற்றம்
டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் உரையாற்றி வரும் அவர் நேற்று 10-வது அமர்வில் ‘வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நிதி சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது பேசிய மோடி, தொழில் நுட்ப புரட்சியில் இந்திய தற்போது உலகிற்கே வழிகாட்டியாக உள்ளதாகக் கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி மூலம் பெரிய அளவில் வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதமர், நிதி ஒழுக்கம்- வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை நோக்கி இந்தியா நகர்வதாக தெரிவித்தார். உலக பொருளாதாரத்தின் பிரகாசமான புள்ளியாக இந்தியா திகழ்வதாக கூறிய மோடி, 2021-22-ம் ஆண்டில் இந்தியா அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை பெற்றதாக சுட்டிக்காட்டினார். RUPAY, UPI ஆகியவை குறைந்த விலை மட்டுமின்றி மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பமாக உள்ளதாக தெரிவித்த பிரதமர், இது உலகில் நமது அடையாளமாக உள்ளதாகக் கூறினார். டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேறி வருவதாக சுட்டிக்காட்டிய திரு. மோடி, சுதந்திரத்தின் 75-வது ஆண்டில், இந்தியா யு.பி.ஐ. வழியாக 75 ஆயிரம் கோடி ரூபாயை பரிவர்த்தனை செய்துள்ளதாகக் கூறினார். இது உலகில் இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய அடையாளம் என்று பெருமிதம் கொள்வதாக தெரிவித்த அவர், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கையான வலுவான நிதி அமைப்பு இந்தியாவிடம் உள்ளதாகக் கூறினார்.