கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீதான புகார் மீது மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் விசாரணை நடத்த அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மைசூரு நகர்ப்புர மேம்பாட்டு ஆணைய விவகாரத்தில், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குத் தொடர கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆளுநரின் இந்த உத்தரவுக்கு எதிராக, முதலமைச்சர் சித்தராமையா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த
மனு மீது இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.


அப்போது சித்தராமையா தரப்பில் முத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார். அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநர் விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், எதற்காக இந்த விசாரணை என்பதற்கு ஆளுநர் ஒரு சிறு காரணம் கூட தெரிவிக்க வில்லை என்றும் சித்தராமையா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநில அமைச்சரவையின் முடிவை மீறும் வகையில் ஆளுநர் செயல்பட்டுள்ளதாகவும், மாநில அரசை சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவதாகவும் அபிஷேக் சிங்விகுற்றம்சாட்டினார்.
தனி நபர்கள் புகார் மீது விசாரணைக்கு அனுமதி வழங்கும் போது ஆளுநர் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், மைசூரு நகர்ப்புர மேம்பாட்டு ஆணைய விவகாரத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, முதலமைச்சர் சித்தராமையா மீதான புகார் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.