மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும், கடுமையான போர் சூழல் காரணமாக, பஹ்ரைனில் 18 நாட்களுக்கு மேல், தவித்துக் கொண்டிருந்த, 192 இந்தியர்கள் மீட்கப்பட்டு, சிறப்பு தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்து சேர்ந்தனர்.
பஹ்ரைனில் உள்ள தமிழ் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்து, அங்கு தவித்துக் கொண்டிருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த முதியோர், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் ஆகியோரை முதற்கட்டமாக மீட்டு, சென்னைக்கு அனுப்பி உள்ளனர்.
இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி போர் தொடங்கியதை அடுத்து, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகளின் வான்வழிப் பகுதிகள் மூடப்பட்டன. இதனால் ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகள் போன்றவைகளில் இருந்து விமான சேவைகள் இல்லாத காரணத்தால், பஹ்ரைன் நாட்டில் உள்ள தமிழர்கள் ஏராளமானவர்கள், இந்தியா திரும்ப முடியாமல், பஹ்ரைன் நாட்டில் தவித்துக் கொண்டு இருந்தனர்.

அவ்வாறு பஹ்ரைனில் தவித்துக் கொண்டு இருந்தவர்களில் முதியோர், நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களை தனி சிறப்பு விமானம் மூலம், சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கு, பஹ்ரைன் நாட்டில் உள்ள தமிழ் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.
ஆனால் பஹ்ரைன் நாட்டிலிருந்து, சென்னைக்கு விமான சேவையை நடத்தி வரும் கல்ப் ஏர்வேஸ் விமான நிறுவனம், தற்போதைய சூழ்நிலையில், பஹ்ரைனிலிருந்து விமான சேவை நடத்த முடியாது என்று கூறிவிட்டது. இதை அடுத்து பஹ்ரைன் அருகே உள்ள, சவுதி அரேபியா நாட்டின், தமாம் நகரில் இருந்து சிறப்பு விமானத்தை இயக்குவதற்கு, கல்ஃப் ஏர்வேஸ் விமான நிறுவனம் சம்மதம் தெரிவித்தது.
இதை அடுத்து பஹ்ரைன் தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்கள், அதற்கான ஏற்பாடுகளை செய்தது. 192 பேரை, பஹ்ரைனிலிருந்து சொகுசு பேருந்துகளின் மூலம், சாலை வழியாக தமாம் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தமாம் நகரில் இருந்து, கல்ஃப் ஏர்வேஸ் சிறப்பு விமானம் மூலம், இந்த 192 பேரும், நேற்று நள்ளிரவு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் ஒரு சிலர் விமான டிக்கெட்டிற்கு பணம் இல்லாமல் தவித்தனர். அவர்களுக்கு பஹ்ரைன் தமிழ்ச் சங்கம் மற்றும் தொண்டு நிறுவனத்தினர், உதவியுடன் விமான டிக்கெட்டுகள் எடுத்து, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை அந்த சிறப்பு விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அதில் வந்த 192 பேரும், குடியுரிமை, சுங்கத்துறை, மற்றும் பாதுகாப்பு சோதனைகள் முடித்து வெளியில் வந்தனர். அவர்களை தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்கள், சென்னை விமான நிலையத்தில் வரவேற்று, அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
பஹ்ரைன் நாட்டில் தவித்துக் கொண்டிருந்த 192 தமிழர்கள் முதல் கட்டமாக சென்னை திரும்பி உள்ளனர். அடுத்த கட்டமாக வரும் 21 ஆம் தேதி இரவு, பஹ்ரைனில் புறப்பட்டு, 22 ஆம் தேதி அதிகாலை சென்னை விமான நிலையம் வந்து சேர்வார்கள் என்று, பக்ரைன் தமிழ் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
