புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட புதுநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் கழிவுநீர் வடிகால் உள்ளது.
அப்பகுதியில் வசித்து வந்த மூதாட்டி இன்று காலை வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றபோது கழிவுநீர் வடிகாலிலிருந்து கசிவு வெளியானதன் காரணமாக விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.அவரை காப்பாற்ற சென்ற மூதாட்டியின் மகளும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். மயங்கிய இருவரை கண்ட மூதாட்டியின் பேத்தியும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் மூவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மூதாட்டி செந்தாமரை மற்றும் அவரது மகள் காமாட்சி ஆகியோர் உயிரிழந்த நிலையில் பேத்தி பாக்கியலட்சுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் விஷவாயு புதுநகர் பகுதி முழுவதும் பரவியநிலையில் செல்வராணி என்பவரும் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரையும் மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த செல்வராணியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் விஷவாயு தாக்கும் அபாயம் உள்ளதால் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். விஷவாயு பரவல் தொடர்பாக போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியான கேஸ் வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே வாயு கசிவால் துர்நாற்றம் இருந்து வந்ததாகவும் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வாயு கசிவால் மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாக்கடைக் கால்வாய்களை உடைத்து வாயுவை வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
தற்போது வரை விஷ வாயு தாக்கி உயிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கழிவறைக்கு சென்ற மூவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.