ஆந்திரா வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்து
ஆந்திராவில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின்போது கோயிலில் போடப்பட்டிருந்த நிழற்பந்தல் மின்கசிவின் காரணமாக தீயில் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகு மண்டல் துவா கிராமத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீராம நவமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்காக கோயில் முழுவதும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாத வகையில் பனை ஓலையால் நிழற்பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஸ்ரீராம நவமி பூஜைகள் நடைபெற்று கொண்டு இருந்தது. இதனை காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டு இருந்தனர்.
இந்நிலையில் நிழலுக்காக போடப்பட்டிருந்த பனை ஓலையில் திடீரென மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக கவனித்த பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் அனைவரையும் வெளியேற்றியதால் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. அங்கிருந்த பக்தர்கள் மற்றும் அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் தண்ணீரைக் கொண்டு அனைக்க முயற்சி செய்தனர். தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.