போாின் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழையின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் பொிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த வீழ்ச்சி மிகவும் வேதனையளிக்கிறது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் மகாராஷ்டிரா மாநிலத்தின் வாழை வர்த்தகத்தை புரட்டி போட்டுள்ளது. அங்கு வாழையின் விலை கிலோ ரூ.22-லிருந்து, வெறும் ரூ.2-ஆக குறைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் வாழையை முக்கிய பயிராக கொண்டிருக்கும் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களை என்ன செய்வதென்று தெரியாத சூழலில் தவித்து வருகின்றனா். மகாராஷ்டிராவில் வாழையை முக்கிய பயிராக கொண்ட ஜல்காவ்ன் மற்றும் சோலாப்பூர் போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு, நம்பிக்கையூட்டும் விதமாகத் தொடங்கிய வாழை சீசன், தற்போது ஒரு பொருளாதார நெருக்கடி தரும் சூழலாக மாறியுள்ளது.
வாழைப்பழங்கள் நிரப்பப்பட்ட பல சரக்குக் கொள்கலன்கள் குளிர்பதனக் கிடங்குகளிலேயே தேங்கி உள்ளன. இதனால் ஏற்றுமதி முடங்கி ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் மற்றும் ஈரான் போன்ற சர்வதேசச் சந்தைகளுக்குச் செல்லவிருந்த வாழை பொருட்கள், உள்நாட்டு சந்தைக்கே திருப்பி விடப்படுகின்றன; இதன் காரணமாக வாழை விவசாயிகளுக்கு பெரும் நிதி இழப்பை விளைவித்துள்ள போர் சூழல் காரணமாக தற்போது பல விவசாயிகள் கரும்பு சாகுபடிக்கு மாறலாமா என யோசித்து வருகின்றனர். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் வாழை விவசாயிகள் ஒரு கிலோவிற்கு ரூ.18 முதல் ரூ.22 வரை விலை பெற்று வந்தனர். ஆனால், மார்ச் மாத, இந்த விலை ரூ.8 முதல் ரூ.10 வரை சரிந்தது. ஏப்ரல் மாதத்திலோ, விலை மேலும் குறைந்து வெறும் ரூ.2 முதல் ரூ.3 என்ற நிலையை எட்டி இருக்கிறது.

போர் மூண்டதாலும், ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும், மாநிலம் முழுவதும் அறுவடை செய்யப்பட்ட வாழைப்பழங்கள் உள்நாட்டு சந்தையை நோக்கித் திருப்பி விடப்பட்டதால் இந்த பொருளாதார நெருக்கடி தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக வாழை விவாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே விலை போவதால், தாங்கள் முதலீடு செய்த தொகை கால்வாசி கிடைத்தாலே பெரிய விஷயம் என்று குறிப்பிட்டு உள்ளனர். இந்த நெருக்கடி காரணமாக சமீபத்தில் கர்மாலாவைச் சேர்ந்த ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அறுவடை செய்த வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாமல், அதற்கான பணத்தையும் செலுத்தாததால், தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
