வெறும் 1 மணி நேரத்தில் பெங்களூர்! இந்திய ரயில்வே துறை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடர்ந்து, புல்லட் ரயில்களை (Bullet Trains) இயக்க தயாராகி வருகிறது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில், மும்பை-அகமதாபாத் இடையே இயக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த புல்லட் ரயில், வரும் 2026ம் ஆண்டிற்குள் பயணிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை-அகமதாபாத் தொடர்ந்து, சென்னை-பெங்களூர்-மைசூர் வழித்தடத்தில் மேலும் ஒரு புல்லட் ரயில் இயக்கப்படவுள்ளது.
தென் இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படும் இந்த புல்லட் ரயில் திட்டம் தொடர்பாக தற்போது பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புல்லட் ரயில் திட்டம், 463 கி.மீ நீளத்திற்கு செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது இருக்கும் தண்டவாளங்களில் இந்த புல்லட் ரயிலை இயக்க இயலாது என்பதால் இதற்கென தனியாக பாதை அமைக்கப்படவுள்ளது. மேலும் மேம்பாலங்கள் மற்றும் சுரங்க பாதைகள் உள்ளிட்ட அம்சங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களுக்கு என தனி மேம்பாலங்கள், சுரங்க பாதைகள் வழித்தடம் அமைக்கப்பட்டதை போல் இந்த புல்லட் ரயிலும் தனி வழித்தடத்தில் பயணிக்கும்.
இந்த புல்லட் ரயிலின் வழித்தடம் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களின் வழியாக செல்லும். தமிழ்நாட்டில் 132 கி.மீ, ஆந்திராவில் 73 கி.மீ மற்றும் கர்நாடகாவில் 258 கி.மீ என ஒட்டுமொத்தமாக 463 கி.மீ தொலைவிற்கு இந்த புல்லட் ரயிலுக்கான பாதை அமைக்கப்படவுள்ளது.
இதில் சுரங்கம் அமைக்கப்படவுள்ள தொலைவு சுமார் 30.50 கி.மீ. ஆகும். சென்னையில் 2.50 கி.மீ, சித்தூரில் 12 கி.மீ., பெங்களூர் நகர பகுதியில் 14 கி.மீ.மற்றும் பெங்களூர் ரூரல் பகுதியில் 2 கி. மீ என மொத்தம் 30.50 கி.மீ தொலைவிற்கு சுரங்க ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த புல்லட் ரயில் மொத்தம் 11 இடங்களில் நின்று செல்லும் என கூறப்படுகிறது. அவை சென்னை, பூந்தமல்லி, சித்தூர், கோலார், கோடஹள்ளி, ஒயிட்ஃபீல்டு, பையப்பனஹள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி, கெங்கேரி, மாண்டியா மற்றும் மைசூர் ஆகியவை ஆகும்.
மேட்டூர் அணையிலிருந்து 12000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை
இந்த புல்லட் ரயில் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பயணிக்க கூடிய திறன் கொண்டதாக இருக்கும். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகபட்சமாக மணிக்கு 320 கி.மீ வேகத்தில் மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயில் மூலம் அதிவேகமாக சென்னையில் இருந்து பெங்களூருக்கு சுமார் 1 மணி நேரத்தில் சென்று விடலாம். அதே நேரத்தில் பெங்களூரில் இருந்து மைசூருக்கு வெறும் அரை மணி நேரத்தில் சென்று விடலாம். ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து மைசூர் செல்வதற்கு வெறும் 1.30 மணி நேரம் மட்டுமே ஆகும்.