மேட்டூர் அணையில் இருந்து 12.000 கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்
கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், காவிரி நீரில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை வழங்காமல் நிறுத்தியது. இதனால், ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு, ஜூன் மாதம் முதல் இரண்டு வாரங்களில் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, கடந்த ஆண்டு குறித்த நேரத்தில் திறக்கப்படவில்லை. இதனால், பயிர்கள் கருகி, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டும், ஜூன் 12 அன்று திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. திமுக அரசு, தங்கள் இந்தி கூட்டணி நலனுக்காக, காவிரி தண்ணீரை வழங்கக் கோரி, கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தாமல் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்தது. தற்போது கனமழை காரணமாக, வேறு வழியின்றி, கர்நாடக காங்கிரஸ் அரசு, காவிரி தண்ணீரைத் திறந்து விட்டிருக்கிறது. இதனை அடுத்து, நேற்றைய தினம், அமைச்சர் திரு. நேரு அவர்கள், மேட்டூர் அணையிலிருந்து 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடுவதாக அறிவித்தார்.
ஆனால், தற்போது மேட்டூர் அணையிலிருந்து, 6,276 கன அடி தண்ணீரே திறந்து விடப்பட்டுள்ளது. 12,000 கன அடி தண்ணீர் என்று அறிவித்து விட்டு, அதில் ஏறத்தாழ பாதி அளவு தண்ணீரே திறக்கப்பட்டுள்ளது. இதனால், கடைமடை வரை, தண்ணீர் சென்றடையுமா என்பது கேள்விக்குறி. மேலும், சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு, மேற்கு மற்றும் கிழக்கு கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் பெரிதும் பலனளிக்கும். ஆனால், மேற்கு மற்றும் கிழக்கு கால்வாயில் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.
குறித்த நேரத்தில், குறித்த அளவு தண்ணீரைத் திறந்து விடாமல், அணை நிரம்பியதும் ஒட்டுமொத்தமாகத் திறந்து விடுவதால், விவசாயிகளுக்கு எந்தப் பலனுமின்றி, தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலக்கும். எனவே, அறிவித்தபடி, 12,000 கன அடி தண்ணீரைத் திறந்து விடுவதோடு, மேற்கு மற்றும் கிழக்கு கால்வாயிலும் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.