spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா119 கொடி இந்தியர்களின் விவரங்கள்…காவல்துறைக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை…

119 கொடி இந்தியர்களின் விவரங்கள்…காவல்துறைக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை…

-

- Advertisement -

119 கோடி பேரின் தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) விவரங்களை, Natgrit (National Intelligence Grid) மூலம் காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு முகமைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.119 கொடி இந்தியர்களின் விவரங்கள்…காவல்துறைக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை…

குற்றவாளிகளை விரைவாகக் கண்டறியும் நோக்கில், மத்திய அரசு தேசிய உளவு தகவல் சேகரிப்பு மையமான நேட் கிரிட் (NATGRID) அமைப்பை, தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) தரவுத்தளத்துடன் இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், நாட்டில் உள்ள சுமார் 119 கோடி குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களை காவல்துறையும் மத்திய புலனாய்வு அமைப்புகளும் நேரடியாக அணுக முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

we-r-hiring

இந்த நடவடிக்கையின் பின்னணி 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலாகும். அந்த தாக்குதலில் 166 பேர் உயிரிழந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி மூலம் மும்பை நகரின் முக்கிய பகுதிகளின் வீடியோக்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்கு சென்றதும், அதன் அடிப்படையிலேயே தாக்குதல் திட்டமிடப்பட்டதும் பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம், உளவு தகவல் சேகரிப்பின் அவசியத்தை மத்திய அரசுக்கு உணர்த்தியது.

இதனைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களைச் சார்ந்த முக்கியமான அனைத்து தரவுகளையும் ஒரே இடத்தில் சேகரித்து, தேவையான நேரத்தில் புலனாய்வு அமைப்புகளுக்கு வழங்கும் வகையில் நேட் கிரிட் அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் இந்த அமைப்பு முழுமையாக செயல்பட்டு வருகிறது.

நேட் கிரிட் அமைப்பில், வங்கிப் பரிவர்த்தனைகள், விமானம் மற்றும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் விவரங்கள், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவோர் பற்றிய தகவல்கள், குடியேற்ற பதிவுகள், வரி செலுத்தும் விவரங்கள், கடன் அட்டைப் பயன்பாடு, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தரவுகள் தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தகவல்கள், மாநில காவல்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை, ரா உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில புலனாய்வு முகமைகளுடன் பகிரப்பட்டு வருகின்றன.

குற்ற வழக்குகளில் விரைவான விசாரணை மேற்கொள்ள நேட் கிரிட் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் காவல்துறைகளை ஊக்குவித்து வருகிறது. தற்போது, இந்த தரவுத்தளத்திலிருந்து மாதத்திற்கு சராசரியாக 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகவல்கள் புலனாய்வு அமைப்புகளால் பெறப்படுகின்றன.

இந்த நிலையில், தற்போது தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) நேட் கிரிட் (NATGRID) அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. NPR தரவுத்தளத்தில் குடிமக்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் இடம், பெற்றோர் விவரங்கள், திருமண நிலை, நிரந்தர முகவரி, கல்வித் தகுதி, தொழில் உள்ளிட்ட 21 வகையான தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் முறையாக 2010 ஆம் ஆண்டு NPR உருவாக்கப்பட்ட நிலையில், 2015 ஆம் ஆண்டு வீடு வீடாக சென்று இது புதுப்பிக்கப்பட்டது. இதில் 119 கோடி பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இணைப்பின் மூலம், சந்தேகத்திற்குரிய நபர்கள் தொடர்பான தகவல்களை காவல்துறையும் மத்திய புலனாய்வு அமைப்புகளும் எளிதில் பெற முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யாமலேயே ஒரு குடிமகன் குறித்த முழுமையான விவரங்களை அணுக முடியும் என்பதால், தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான கவலைகளும் எழுந்துள்ளன.

இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு அதிகாரிகள், புலனாய்வு அமைப்புகள் கோரும் தகவல்களின் நோக்கம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும், மூத்த காவல்துறை அதிகாரிகள் அந்தப் பயன்பாட்டை கண்காணிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம், குற்றவாளிகளை விரைவாக அடையாளம் காணவும், தீவிரவாதிகள் அல்லது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்படுவோரின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அறிவிப்பு!

MUST READ