கேரளாவில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கேரளாவில் பொது இடங்களில் முதுகவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஓராண்டாக குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தினசரி தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியதால் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதுடன் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் கேரள மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 210 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு பரவல் அதிகரித்து இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இதுவரை ஏற்படவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட குழுவுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.