மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் மத்தியப் பிரதேசம்- உத்தரப் பிரதேச எல்லையில் நேற்று 70 கிலோமீட்டர் நீளம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரேவா மாவட்டத்தில் உள்ள சக்காட்டில், வாகனங்கள் உத்தரபிரதேசம் நோக்கி 40-50 கி.மீ தூரமும், மத்தியப் பிரதேசம் நோக்கி 20-25 கி.மீ தூரமும் ஊர்ந்து சென்றன.
மாவட்டத்தில் நான்கு இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட போதிலும், இந்த மிகப்பெரிய நெரிசல் தொடர்ந்தது. கட்னி, சட்னா, சியோனி போன்ற அண்டை மாவட்டங்களிலும் நீண்ட வரிசையில் போக்குவரத்து ஏற்பட்டது. மக பூர்ணிமா அன்று புனித நீராடுவதற்காக பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால் இந்த நிலை ஏற்பட்டது. உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் பக்தர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். எல்லையின் இருபுறமும் நீண்ட போக்குவரத்து நெரிசல் இருப்பதாக ரேவா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் தெரிவித்தார். காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீர், உணவு, தங்குமிடம் போன்றவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சில இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு உகந்த நாளாகக் கருதப்படும் மங்கள பூர்ணிமாவின் காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டது. இது பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறுகிறது. சத்னா ரயில் நிலையத்திலும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில், 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் இங்கிருந்து பிரயாக்ராஜுக்கு ரயில்களில் ஏறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சத்னா ஜிஆர்பி காவல் நிலைய பொறுப்பாளர் ராஜேஷ் ராஜ் கூறுகையில், ”எஸ்ஏஎஃப்-ல் இருந்து கூடுதல் பணியாளர்கள் வந்துள்ளனர். இது தவிர கூடுதல் ஆர்பிஎஃப் பணியாளர்கள் உள்ளனர். அருகிலுள்ள ரயில் நிலையங்களில் இருந்து 10 கூடுதல் டிசிஎஸ்-களை ரயில்வே அனுப்பியுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சத்னாவிலிருந்து பிரயாக்ராஜுக்கு கூடுதல் சிறப்பு ரயில் அனுப்பப்பட்டனர்” என அவர் தெரிவித்தார்.
பாஜக எம்எல்ஏ நரேந்திர பிரஜாபதி கூறுகையில், ”போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் வாகனங்கள் மெதுவாகவே நகர்கிறது. உத்தரபிரதேசத்திலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் சில வாகனங்கள் விடுவிக்கப்படுகின்றன. நான் அதிகாரிகளுடன் சக்காட்டையும் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தேன்.கங்காவில் உள்ள ஒரு கல்லூரியில் பக்தர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் தண்ணீர் டேங்கர்கள், உணவு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எந்தவிதமான சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக உள்ளூர் மக்களும், நிர்வாகமும் இணைந்து செயல்படுகின்றன” என அவர் தெரிவித்தார்.