டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து 2 நாட்களில் விலக உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், இதே வழக்கில் ஜூன் 26-ம் தேதி கெஜ்ரிவாலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமின் கிடைத்த நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால்
விடுதலையானார்.
இந்த நிலையில் டெல்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்களிடையே உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து 2 நாட்களில் விலக உள்ளதாக அறிவித்தார். தான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதலமைச்சர் நாற்காலியில் அமரமாட்டேன் என்றும், தான் நேர்மையானவன என்று மக்கள் நினைத்தால் மீண்டும் எனக்கு வாக்களிக்கட்டும் என்றும் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலின் துணிச்சலையும் உடைப்பதுதான் அவர்களின லட்சியமாக இருந்ததாகவும் அதனால் தம்மை சிறைக்கு அனுப்பினார்கள் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தான் சிறை யிலிருந்தபோது, ராஜினாமா செய்யவில்லை என்றும், சிறையில் இருந்தும் ஒரு அரசு இயங்க முடியும் என்பதை உச்சநிதிமன்றம் நிரூபித்துள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.