ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எல்.வி.எம் -3 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளுபேர்ட்-6 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது.


அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில் ’புளுபேர்ட்-6′ என்ற செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள் தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன் அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி எல்.வி.எம் -3 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இதற்கான 24 மணி நேர கவுன்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்.3- ராக்கெட் மூலம் புளுபேர்ட் -6 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 15வது நிமிடம் 52வது வினாடியில் பூமியிலிருந்து 520 கிலோ மீட்டர் உயரத்தில் புவி தாழ்வட்ட சுற்றுபாதையில் புளுபேர்ட் -6 செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.


