கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை ராஜினாமா
கர்நாடகாவில் 130க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
கர்நாடகத்திலும் பாஜக ஆட்சியை இழப்பதால் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சென்ற கார் சிக்கியது. சாலையில் திரண்டு காங்கிரசார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கார் நிறுத்தப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். தவறுகளை திருத்திக் கொண்டு பாஜகவை வலுப்படுத்துவோம். எங்களால் வெற்றியை நெருங்க முடியவில்லை. முடிவுகள் முழுமையாக வெளியானதும் தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும்” எனக் கூறினார்.
முன்னதாக ஷிக்கான் தொகுதியில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமதுகான் பதானைவிட 18,990 வாக்குகள் அதிகம் பெற்று பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றார். இருப்பினும் கர்நாடகா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அதன் கடிதத்தை இன்று ஆளுநரிடம் வழங்க பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார். பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ராஜினாமா கடிதத்தை வழங்க முடிவு செய்துள்ளது.