தமிழகத்திற்கு காவிரியில் 10 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகா முடிவு
தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகா முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு நகரில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் சித்தராமையாவுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய டி.கே.சிவக்குமார், “தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீரை திறந்து விட முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே அதற்கான பணி துவங்கி விட்டது. தமிழகம் தண்ணீருக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. ஏற்கனவே எவ்வளவு தண்ணீர் திறந்து விட முடியுமோ அவ்வளவு தண்ணீரை திறந்து விட உத்தரவு பிறப்பித்துள்ளோம். தற்பொழுது வறட்சி காலத்தில் நம் இரு மாநிலத்தின் இடைய பிரச்சனை வேண்டாம். மழை போதுமான அளவு பெய்தால் தேவையான தண்ணீர் வெளியேற்றப்படும்.
கடந்த வருடம் உபரி நீர் வெளியேற்றி 400 டிஎம்சி தண்ணீர் கடலுக்கு சென்றது. தற்பொழுது தண்ணீர் தேக்கி வைக்க மேகதாது அணை இருந்திருந்தால் அதில் இருந்து மேலும் அதிக தண்ணீர் தமிழகத்திற்கு தற்பொழுது கொடுத்திருக்க முடியும். அதற்கும் நீங்கள் ஒப்புதல் தர மறுக்கிறீர்கள், ஆகையால் நான் உங்களிடம் வேண்டி கேட்டுக்கொள்வது உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட தற்பொழுது ஒப்புக்கொள்ளுங்கள். அதன் மூலம் இவ்வாறான காலகட்டங்களில் தண்ணீர் திறந்து விட முடியும் அதற்கு நீங்கள் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.