
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இன்று (ஜூலை 18) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி!
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) அதிகாலை 04.25 மணியளவில் உயிரிழந்தார்.
முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவுக்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கேரள மக்களுக்கு ஆற்றிய சேவைகளுக்காக உம்மன் சாண்டி என்றும் நினைவுக்கூரப்படுவார்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உம்மன் சாண்டி மிகச் சிறந்த நிர்வாகி; மக்களுடன் நெருங்கி வாழ்ந்தவர். நாங்கள் இருவரும் ஒரே ஆண்டில் தான் சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டோம். மாணவர் பருவத்தில் இருந்து அரசியலுக்கும் இருவரும் ஒன்றாக தான் அடியெடுத்து வைத்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உம்மன் சாண்டிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று (ஜூலை 18) ஒருநாள் அரசு பொதுவிடுமுறை விடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.