
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது, விதிகளை மீறி செம்மண் குவாரி ஒப்பந்தம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் பொன்முடியின் சைதாப்பேட்டையில் உள்ள வீடு, விழுப்புரத்தில் உள்ள வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் அமைச்சரின் மகனும், மக்களவை உறுப்பினருமான கௌதம சிகாமணி வீடு உள்ளிட்ட 9 இடங்களில் நேற்று (ஜூலை 17) காலை 07.00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் என்ன?- விரிவாகப் பார்ப்போம்!
அமலாக்கத்துறையின் சோதனை நடந்த இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம், அமைச்சர் பொன்முடியின் வீடு முன்பு தி.மு.க.வினர் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. சோதனையின் அடுத்தக்கட்டமாக, அமைச்சர் பொன்முடியை நேற்று (ஜூலை 17) இரவு 08.30 மணிக்கு அவரது காரிலே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
அங்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி அமைச்சரிடம் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், கௌதம சிகாமணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமைச்சர் பொன்முடியிடம் சுமார் ஏழு மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அதிகாலை 03.30 மணியளவில் கார் மூலம் தனது இல்லத்திற்கு திரும்பினார் அமைச்சர் பொன்முடி.
இதனிடையே, அதிகாலை 03.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத்துறையின் துணை இயக்குநர், அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி எம்.பி. ஆகியோர் இன்று (ஜூலை 18) மாலை 04.00 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.