மைசூரு நகரில் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தை சந்தித்த பிரதமரின் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினர். சிறிய காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.


பிரதமர் மோடி அவரது சகோதரர் பிரகலாத் மோடி இன்று அவரது மனைவி, மகன் மருமகள் மற்றும் பேர குழந்தைகள் என 6 பேர் மைசூரு நகரில் இருந்து பந்திப்பூர் வனவியல் உயிரியல் பூங்காவிற்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். மைசூர் நகரில் இருந்து முன் மற்றும் பின் இரண்டு பாதுகாப்பு வாகனங்களுடன் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து மதியம் 2.45 மணி அளவில் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதியது.

இதில் கார் முன் பகுதியில் இருந்த ஒரு சக்கரம் முழுவதுமாக சேதம் அடைந்து சாலையின் நடுவே வந்து விழுந்தது. ஓட்டுனரின் அஜாக்கிரதையால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த விபத்தில் பிரதமரின் சகோதரரின் பேரனுக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்ற நபர்களுக்கும் சிறிய அளவில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அனைவருக்கும் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு மாற்று வாகனத்தில் பிரதமரின் சகோதரர் குடும்பத்தினர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்லலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


