திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி கோவில் பிரசாதமான லட்டு தயாரிப்புக்கு விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். இதற்கு அப்போதைய ஆந்திர முதலமைச்சராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மை தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், சிறப்பு விசாரணை குழு அமைக்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்பு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க 5 பேர் கொண்ட புதிய விசாரணைக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிபிஐ அதிகாரிகள் இருவர், மாநில காவல்துறை அதிகாரிகள் இருவர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இருவர் அடங்கிய குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், விசாரணையை சிபிஐ இயக்குநர் கண்காணிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், திருப்பதி லட்டு விவகாரத்தை அரசியல் போர்க்களமாக தொடர அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.