வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ள நிலையில், இதனை சென்னையில் வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோல்கள் ஒரே நேர்கோட்டில் வருவது சந்திர கிரகணமாகும். பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல் விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். இதனை ரத்த நிலவு என்று அழைப்பார்கள். இந்த நிலையில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சந்திர கிரகணம், செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 8.58 மணிக்கு தொடங்கி, மறுநாள் அதிகாலை 2.25 மணி வரை தெரியும். இதனை வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ளவர்கள் வானில் கிழக்கு நோக்கி பார்த்தால் முழு சந்திர கிரகணத்தை தெளிவாக பார்க்கலாம். சந்திர கிரகணத்தை காண தொலைநோக்கியோ அல்லது சிறப்பு கருவிகளே அவசியமில்லை என்றும் கூறியுள்ளனர்.
செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 11.41 மணிக்கு முழுமையான சந்திர கிரகணம் நிகழும். இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 12.22 மணி வரை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி, பெருங்கடல்கள் மற்றும் துருவப் பகுதிகளில் இந்த சந்திர கிரகணம் தெரியும். இதனை தொடர்ந்து, அடுத்த முழு சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் தேதி நிகழ்கிறது. அதன் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் தெரியும். அதனால் அந்த சந்திர கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது.