கேரள மாநிலம் கோட்டயத்தில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு அதற்குள்ளேயே படுத்து உறங்கியதால், பல மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடுரோட்டில் நின்ற கார்
கோட்டயத்தின் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென நடுவழியிலேயே நின்றது. பின்னால வந்த வாகனங்கள் தொடர்ச்சியாக ஒலியெழுப்பியும் கார் நகரவில்லை. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சந்தேகமடைந்த சக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அருகில் சென்று பார்த்தபோது, காரை ஓட்டிவந்த ‘ஜோபின் ஜானி’ என்ற இளைஞர் சீட்டிலேயே அசைவற்றுப் படுத்து உறங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
எழுப்ப முயன்றும் பலனில்லை
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியைத் தட்டியும், சத்தமிட்டும் அந்த இளைஞரை எழுப்பப் தீவிர முயற்சி செய்தனர். ஆனால், “அவன் தூங்கிட்டான் சார்!” என்று சொல்லும் அளவுக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவரை எவ்வளவு முயற்சித்தும் எழுப்ப முடியவில்லை.
போலீஸ் விசாரணை & வழக்குப்பதிவு
இதையடுத்து, பொதுமக்கள் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காரின் கதவைத் திறந்து ஒருவழியாக அந்த இளைஞரை எழுப்பி வெளியே கொண்டு வந்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு காரை ஓட்டி வந்ததும், போதை தலைக்கேறியதால் காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டுத் தூங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து, குடிபோதையில் வாகனம் இயக்கியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோபின் ஜானி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.
