நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது திடீரென்று யாரோ உங்களை அமுக்குவதுபோல் தோன்றுகிறதா?
அப்படி ‘யாரோ என்னை தூக்கத்தில் அமுக்கினார்கள்’ என்று யாரிடமாவது கூறினால், அது பேய் என்றும் உங்கள் வீட்டில் கெட்ட சக்தி உள்ளது என்றும் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி விபூதி அடித்து உட்கார வைப்பார்கள். ஆனால், உண்மையில் அது பேயோ, பிசாசோ இல்லை. இது ஒரு அறிவியல் ரீதியான ஒரு நிகழ்வு தான். அதன் பெயர் Sleeping Paralysis.
நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் நியூரான்ஸ் தான் இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. தூக்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த நியூரான் செல்கள் சரிவர இயங்காமல் போவதனால் ‘Sleeping Paralysis’ நிகழ்கிறது. அதாவது உடல் தூங்கும் நிலையிலும், ஆழ்மனது விழிப்புடன் இருக்கும் நிலை தான் இது. பொதுவாக இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சில சமயங்களில் இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இந்த Sleeping Paralysis 18 வயதிலிருந்து ஆரம்பமாகும். 20 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும்.

அறிகுறிகள்:
Sleeping Paralysis ஏற்படும்போது நம்மா அசையவே முடியாது. அதுமட்டுமல்லாமல் பேசவும் முடியாது. ஏனெனில். அந்த நிலை ஏற்படும்போது, நீங்கள் உங்களின் ஆழ்மனதிற்குள் சென்று விடுவீர்கள். இத்தருணங்களில் படபடப்பாக இருப்பது போலவே உணர்வோம். அதிகமாக வேர்க்க நேரிடும். ஏதோ ஒரு மாயையான உருவம் தெரிவதுபோன்ற பிரமை தோன்றும். இதற்கு பெயர் Hallucinations. உதாரணமாக, நீங்கள் உங்களது அறையில் நாற்காலியின் மேல் துணிமணிகளை மடிக்காமல் கலைத்து போட்டிருப்பீா்கள் அது உங்களுக்கு யாரோ உட்கார்ந்து இருப்பதுபோல் தோன்றும். இது மாயை தான். இதுபோன்ற பிரமை ஏற்பட்டு, தூக்கத்திலிருந்து வெளியே வந்தவுடன் தலைவலி, பய உணர்வு போன்றவை ஏற்படும்.
விளைவுகள்:
இந்த Sleeping Paralysis அடிக்கடி ஏற்பட்டால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எப்போதும் எதையோ இழந்தது போல் சோகம் மற்றும் களைப்பு ஏற்படும். இதற்கு தீா்வு மருத்துவரிடம் செல்வது தான் என்பதில்லை. ஏனெனில் இதற்கான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இந்த நிகழ்வினை அடிக்கடி அனுபவித்தவர்கள் சில டிப்ஸ்களை கூறியுள்ளார்கள். Sleeping Paralysis நிகழும்போது, உடம்புக்கு ஏதோ ஒரு அசைவு கொடுங்கள். விரல்களை அசையுங்கள் அல்லது கால், கைகளை அசையுங்கள்.
தடுக்கும் வழிகள்:
சரியான நேரத்தில் தூங்க வேண்டும்.
மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து படுப்பது நல்லது.
மன அழுத்தம் ஏற்பட்டால் அதற்கான தீர்வினை கண்டுபிடித்து சரி செய்யவும்.
தூங்கும் அறையில் ஊதா நிற லைட்டை தவிர்க்கவும் மற்றும் 8 மணி நேரம் சரியாகத் தூங்கவும்.
படுக்கை அறையை தூங்குவதற்கு ஏதுவாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
பகலில் வெளிச்சமாகவும் இரவில் இருட்டாகவும் வைத்துக்கொள்ளவும். தினமும் யோகா, தியானம் செய்ய நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.


