முசு முசுக்கை கீரைக்கு மொசு மொசுக்கை என்ற பெயரும் உண்டு. இவை கொடி வகைகளைச் சார்ந்தவை. மழைக்காலங்களிலும் பனிக்காலங்களிலும் தானாக முளைத்து படரக்கூடியவை. இந்த முசுமுசுக்கை கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது. மேலும் இதை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இவை சுவாச பிரச்சனை ஆஸ்துமா மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. கண் எரிச்சல், சளி, இருமல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. காச நோயை குணப்படுத்தும் தன்மையும் இந்த முசு முசுக்கை கீரையில் இருக்கிறது.
மழைக்காலங்களிலும் பனிக்காலங்களிலும் ஏற்படும் சளி, இருமல், மூட்டு தோய்வு போன்றவற்றை சரி செய்ய இந்த முசுமுசுக்கை பயன்படுகிறது. புழுங்கல் அரிசியை ஆறு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் முசுமுசுக்கை இலைகளை சேர்த்து, மிளகு, சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாவை உப்பு சேர்த்து புளிக்க வைத்து பின் அதனை தோசை வார்த்து சாப்பிட்டு வரலாம். இவை இருமல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
இந்த முசுமுசுக்கை கீரையை வழக்கமான உணவில் சேர்த்து சாப்பிட்டு வர உடல் பலமாகும். மனதில் ஏற்படும் அமைதியின்மையை சரி செய்து மனநிலையை சீராக்கும்.
தூதுவளைக் கீரை, முசுக்கை கீரை, பரட்டை கீரை ஆகியவற்றை சம அளவில் எடுத்து அதனை உலர்த்தி பொடியாக்கி காலை, மாலை என இருவேளைகளில் சாப்பிட்டு வர மூச்சிரைப்பு பிரச்சனை சரியாகும்.
முசுமுசுக்கை கீரையில் தைலம் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வரலாம். அதே சமயம் உடல் சூட்டை தணித்து கண் எரிச்சலை குணப்படுத்தும்.
இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.