வெயில் காலத்தில் குழந்தைகளை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் காலத்தில் குழந்தைகளை வெளியில் செல்லாமல் இருக்க வைப்பது நல்லது. ஏனென்றால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சூரியனிலிருந்து வெளிப்படும் யுவி கதிர்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் அதிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வெயில் காலத்தில் பொதுவாக நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவது நல்லது. அதன்படி இளநீர், மோர், தர்பூசணி ஆகிவைகளை கொடுக்கலாம். அதாவது ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் குழந்தைகளுக்கு குடிநீர் கொடுக்க வேண்டும்.
அதிகம் நீர் குடிக்காத குழந்தைகளுக்கு சிறிய டம்ளர்களில் கொடுக்கலாம். அப்படி குடிக்கும்போது அவர்கள் தாகம் என்ற உணர்வின்றி குடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மேலும் உடல் வெப்பத்தை தணிக்க குழந்தைகளை அடிக்கடி குளிக்க வைக்க வேண்டும்.
வெளியில் செல்லும்போது முழு கை அணியும் துணிகளை அணிந்து கொள்வது நல்லது. குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றவாறு சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம். மாய்சுரைசர் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
வெயில் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வேர்வையினால் குழந்தைகளுக்கு தோலில் எரிச்சல் ஏற்படக்கூடும். இதற்கு வேப்பங்கொழுந்து நீர் பயன்படுத்தலாம்.
அடுத்தது கோடை காலத்தில் பெரும்பாலும் குழந்தைகள் தூங்குவதற்கு சிரமப்படுவார்கள். எனவே அவர்கள் நன்றாக உறங்கும் சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். சில சமயங்களில் மிதமான குளிர்ச்சி தரும் சிறிய பனித்துண்டுகளை தலைக்கு அருகில் வைப்பது நல்லது. குழந்தைகளை தூங்க செய்வதற்கு முன்னதாக கை, கால்களை குளிர்ந்த நேரில் கழுவுவது நல்ல தூக்கத்திற்கு வழிவகை செய்யும்.
அதிக அளவில் எண்ணெய், காரம், மசாலா சேர்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கெமிக்கல் கலந்த பாக்கெட் ஜூஸ்களை கொடுக்கக் கூடாது.
இதுபோன்ற வழிகளை பின்பற்றினால் கோடை காலத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.