திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் மலையாள மனோரமா ஊடகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நான் கேரளா வந்துள்ளபோதும் தமிழ்நாட்டில் இருப்பதைப்போன்றே உணர்கிறேன்.
பாசிச சக்திகளை விரட்டுவதில் தமிழ்நாடும் கேரளாவும் முன்னணி மாநிலங்களாக இருந்து வருகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் சுயமரியாதை, பகுத்தறிவு சிந்தனைகளை எழுதிக் குவித்ததால் தமிழ்மொழி வளம் பெற்றது. தனித்தமிழ் இயக்கத்தால் தமிழ் வலிமை பெற்றது.
ஒன்றிய அரசு இந்தியை திணிக்க முயற்சித்தபோதெல்லாம் திராவிட இயக்கம்
ஆவேசமாக எதிர்த்துக் களமாடியது. இதன் ஒரு முக்கியமான பலன் தென்னிந்தியா முழுவதற்கும் கிடைத்தது.
இன்று தமிழ் சினிமா உயிர்ப்போடு இருக்கிறது.மலையாள சினிமா, தெலுங்கு சினிமா, கன்னட சினிமா ஆகிய தென்னிந்திய சினிமாக்கள் உயிர்ப்போடு உள்ளன. ஆனால் மராட்டி சினிமா, பிகாரி சினிமா, குஜராத்தி சினிமா,போஜ்புரி சினிமா அனைத்தும்
அழிந்து வருகின்றன.
பல வட மாநிலங்களில் அந்தந்த மாநில சினிமாக்கள் அழிந்தே விட்டன.அங்கெல்லாம் இந்தி சினிமா மட்டுமே இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் சினிமாவும், மொழியும், இலக்கியமும் உயிர்ப்போடு இருக்கக் காரணம் திராவிட இயக்கம்..!
இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய வீரம்செறிந்த போராட்டங்கள் தான் காரணம். தமிழ்நாடு, கேரளா இடையே நீண்ட நெடிய பண்பாட்டு உறவு உள்ளது. இந்த உறவு காலம் காலமாக தொடரவேண்டும் என்று விரும்புகிறேன். அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திராவிட இயக்க சித்தாந்தப் படையணியில் எப்போதும் ஒரு படைவீரனாக நிற்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
மேலும் ஒரு நூற்றாண்டிற்கு முன்பு என்றால் சமஸ்கிருதம் படித்திருந்தால் தான் ஒருவர் மருத்துவம் படிக்க முடியும். மருத்துவத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு என்று கேள்வியை எழுப்பியது திராவிட இயக்க. சட்டப்படி அதை ஒழித்த பின்னர் தான் நம்மவர்கள் மருத்துவம் படிக்க முடிந்தது என்றார்.