மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனை பாண்டி பஜார் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை எங்கே வைத்து விசாரணை நடத்துகிறார்கள் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.
மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் சாதிய அமைப்பு சார்பாக கூட்டம் ஒன்றில் இன்று கலந்து கொள்ள இருந்த நிலையில் சட்டம் ஒழுங்கு காரணமாக ஆதிநாராயணனை ஆவடியில் உள்ள அவரது வீட்டில் தியாகராய நகர் காவல் துணை ஆணையரின் தனிப்படை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணம் காட்டி கைது செய்தனர்.
மருது சேனை அமைப்பின் தலைவரான ஆதிநாராயணனை போலீசார் கைது செய்த நிலையில் அவரது வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தில் ஆயுதம் வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்து கைப்பற்றினர்.
பின்பு கைது செய்யப்பட்ட ஆதிநாராயணனை பாண்டி பஜார் காவல் நிலைய போலீசார் ஆயுதம் வைத்திருந்தது தொடர்பாக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்,கொலை மிரட்டல் விடுத்தல்,ஆயுத தடைச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாண்டி பஜார் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஆதி நாராயணன் மீது மதுரை மாவட்டத்தில் 3கொலை வழக்கு உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ஏ+ கேட்டகரி ரவுடியாகவும், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டதும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார்.
ஆதிநாராயணனின் மகள் லலிதா கைது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார், தனது தந்தை ஆதிநாராயணன் ஏற்கனவே சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் சமுதாய கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள இருந்ததாகவும், காவல்துறை அறிவுறுத்தலின் பெயரில் அவர் கலந்து கொள்ள வில்லை எனவும் இந்த நிலையில் வீட்டில் இருந்த தனது தந்தையை தியாகராய நகர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் காலையில் ஆவடி வீட்டில் இருந்த ஆதிநாராயணன் கைது செய்ததாகவும் கைது செய்த நேரத்தில் இருந்து தற்போது வரை அவர் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது குறித்தான எவ்வித தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை என்றும் மேலும் தனது தந்தை மீது போலீசார் ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு போட்டுள்ளதாகவும் அந்த வழக்கு பொய் வழக்கு என்றும் இது போன்று பல வழக்குகள் அவர் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மேலும் அவர் மீது உள்ள வழக்குகள் தொடர்பாக காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் செல்லும் போதெல்லாம் அவர் காவல்துறைக்கு உரிய ஒத்துழைப்பை அளித்து வந்ததாகவும் அதே போல் தற்பொழுதும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் ஆனால் காவல்துறையினர் அவரை எங்கு வைத்துள்ளார்கள் என்பது குறித்தான எந்தவித தகவலையும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.