37 நாள்களாக நடைபெற்ற ‘சாம்சங்’ தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு வந்ததை அரசுக்கு ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் – தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்குப் பருவ மழையிலிருந்து நம் மக்களைக் காப்பாற்ற – போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை ஆயத்தங்கள்மூலம் அரசு இயந்திரம் விரைந்து செயல்பட முடுக்கிவிட்டார். நமது ‘திராவிட மாடல்‘ முதலமைச்சர்.
துடிப்புமிகு துணை முதலமைச்சரின்
வெள்ள நிவாரணப் பணிகள்!
அதுதான் துடிப்புமிகு துணை முதலமைச்சர் – திராவிட இளைஞர்களின் எழுச்சி நாயகனாகத் திகழும் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், ஆற்றல்மிகு அமைச்சர் பெருமக்களும், கடமை தவறா அதிகாரிகள், மேயர், துணை மேயர் உள்பட ஒரு நல்ல ஒருங்கிணைந்த கூட்டுக்குழுவின் எடுத்துக்காட்டான பணிகள், ஏற்படவிருக்கும் இயற்கைச் சீற்றத்திற்குச் சரிசமமாக ஈடுகொடுக்கத் தவறவே இல்லை.
இதிலும் ‘அரசியல்‘ செய்து அறுவடைப் பார்க்க, முனையும் அற்ப அரசியல் படமெடுத்தாடினாலும், அதன் பாச்சா பலிக்கவில்லை.
அதுபோல, சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் அமைந்துள்ள ‘‘சாம்சங்’’ ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் கடந்த 37 நாள்களாக நீடித்து வந்தது. நேற்று (15.10.2024) ஒரு தீர்வு கண்டு அது முடிவிற்கு வந்திருப்பது, சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராட்டவேண்டிய – நிம்மதிக்கு வழிவகுத்த நல்ல செய்தி.
இதுபற்றி சி.அய்.டி.யு. (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்) மாநில தலைவர் தோழர் ஏ.சவுந்திரராஜன் அவர்கள் விடுத்துள்ள செய்தியும், நமது முதலமைச்சரின், அமைச்சரின், சி.அய்.டி.யு. நிர்வாகிகள், தொழிலாளர்கள் பாராட்டும், வரவேற்கத்தக்கதாகும்.
வெளிநாட்டுத் தொழில் முதலீட்டாளர்கள், கம்பெனிகள் தமிழ்நாட்டினை நோக்கி வந்து, இங்கே தொழில்வளம் பெருக வாய்ப்புத் தருவதற்கு மூல முக்கிய காரணம், தமிழ்நாடு ஜாதி, மதக்கலவரங்கள் அற்ற, அமைதிப் பூங்காவாக இந்த ‘திராவிட மாடல்‘ ஆட்சியில் திகழ்கிறது என்பதாலேயே! நமது திராவிடர் இயக்கம் என்றுமே தொழிலாளர் இயக்கம்தான் – பொது உரிமையையும், பொதுவுடைமைக் கொள்கையையும் போற்றியே அந்த அகலப் பாதையில் அடிபிறழாமல் நடைபெறும் இயக்கம். பொதுவுடைமை இயக்கங்களும் (இடதுசாரிகள்) திராவிடமும் இரண்டும் கொள்கைத் தோழமை இணை தண்டவாளங்கள்.
புதியதோர் சமூகம் வருணபேதம் – வர்க்கம் பேதமிலா ஒரு புரட்சிகர மாற்றம் நிலவிடும் சமூகமே அவற்றின் இலக்கு! என்றாலும், ஆட்சி நடத்தும்போது – பொதுத் துறை – தனியார்த் துறை – கூட்டுத் துறை போன்றவை இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத நிலை உள்ளதால், தனித்தொழில் முதலீட்டுத் தொழிற்சாலைக்காரர்களை இருகரம் நீட்டி, வரவேற்று, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கதவுகளைத் திறந்து வைக்கவேண்டியது அரசின் காலக் கட்டாயமாகும்.
அதில் தொழில் முனைவோர் நலமும் முக்கிய கவனத்திற்கு அரசால் கொள்ளப்படவேண்டிய தவிர்க்க முடியாத அம்சம் என்றாலும், தொழிலாளர் நலமும் முதன்மையானது அல்லவா?
எனவே, கோரிக்கைகள் வைப்பது தவிர்க்க இயலாதவை. அவற்றிற்குத் தகுந்த தீர்வு காண்பதும் இன்றியமையாக் கடமை முத்தரப்புக்குமே!
‘சாம்சங்’ ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் – தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான அணுகுமுறையும்!
இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டு, உடன்பாட்டை – முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஈடுபட்ட அமைச்சர் பெருமக்கள், எ.வ.வேலு, சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் போன்றோர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் – நிர்வாகத் தரப்பு அதிகாரிகள் அனைவருக்கும் மக்கள் மன்றத்தின் மகத்தான பாராட்டுகளும், மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகளும்!
பேசித் தீர்க்க முடியாத பிரச்சினைகளே உலகத்தில் இல்லை! மனமிருந்தால் மார்க்கம் தானே ஏற்படும் என்பதற்கு மகத்தான எடுத்துக்காட்டு இது!
அரசும் இம்மாதிரி பிரச்சினைகளில் ‘‘கடிதோச்சி மெல்ல எறிதல்’’ என்பதைக் கடைப்பிடித்து, எல்லோருக்கும் வெற்றியே – Win Win Solution என்ற தீர்வைக் கண்டுள்ளார்கள்.
முத்தரப்பினருக்கும் பாராட்டு!
தொழிலாளர்கள் வாதாடவேண்டிய நேரத்தில் போராட்டம் நடத்திடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, போராடினார்கள் என்பதற்காக அவர்களைப் புறந்தள்ளுவதோ, பழி தீர்ப்பதோ நல்ல பலனைத் தராது. முதலாளி – தொழிலாளி – அரசு ஆகியவை, நாட்டு நலன் – பொதுநலன் என்ற பொதுக் கண்ணோட்டத்திற்கு முன்னுரிமை தந்து, பிரச்சினைகள் எவ்வளவுதான் மலைபோல் வந்தாலும், பனிபோல் கரைய வைக்க பரபஸ்பர ஒத்துழைப்பு ஒருங்கிணைப்பு ஆகியவை நல்ல பயன்தரும் என்பதற்கு இது ஒரு நல்ல முன்னுதாரணம். அனைவருக்கும் நமது பாராட்டும், வாழ்த்துகளும்! இவ்வாறு அறிவித்துள்ளார்