ஊழல் தடுப்பு சட்டம் என்பது தாசில்தார் போன்ற கீழ் அதிகாரிகளுக்கு எதிராக வேகமாக செயல்படும் என்றும் அதேநேரம் அமைச்சர் போன்ற உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிராக வேகம் குறைந்துவிடும் என முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்தமுறை விசாரணை வந்தபோது, முறைகேடு வழக்கு தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றம் இன்னும் கோப்புக்கு எடுக்கவில்லை எனவும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கில் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுக்காதது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, எம்.பி.- எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
அதேபோல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற தாமதம் ஏற்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிபுத் துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணை வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஊழல் தடுப்பு சட்டம் என்பது தாசில்தார் போன்ற கீழ் அதிகாரிகளுக்கு எதிராக வேகமாக செயல்படும் என்றும் அதேநேரம் அமைச்சர் போன்ற உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிராக வேகம் குறைந்துவிடும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 1 ஆம் தேதி ஒத்திவைத்த அவர் அன்று காலதாமதத்திற்கான விளக்கத்தையும் சேர்த்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர்! ரூ.20 லட்சம் நிவாரணம்…