குடியேற்றம், வெளிநாட்டவர் மசோதாவை மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்தச் சட்டம், அவர் முன்னர் கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்துக்கே எதிரானது என்பதுதான் உண்மை. அமித்ஷா சட்டத்துக்கு எதிராக அமித்ஷாவே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார். இந்த முரண்பாடுகளை மொத்தமாகக் கொண்டதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசு.
கடந்த மார்ச் 27 ஆம் தேதி அன்று மக்களவையில் குடியேற்றம், வெளிநாட்டவர் மசோதா ஒன்று நிறைவேறி இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களை முறைப்படுத்துவதற்கான சட்டமாக இது கொண்டு வரப்படுகிறது. குடியேற்றம், வெளிநாட்டவர் இந்தியா வருகை, தங்குதல், சொந்த நாட்டுக்குத் திரும்புதல் ஆகியவற்றை முறைப்படுத்துதல் தொடர்பான முன்வரைவு இது. மார்ச் 11 ஆம் தேதி இது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் இதனை நிறைவேற்றி விட்டார்கள்.
இந்த சட்டத்தின்படி, வெளிநாட்டவர் வருகை, தங்குதல், புறப்பாடு ஆகிய அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டது. ‘இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள 90 ஆயிரம் இலங்கைத் தமிழரை இது பாதிக்கும்’ என்று தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி குற்றம் சாட்டினார். ‘நியாயமான காரணங்களுக்காக சொந்த நாட்டையும் உடைமைகளையும் விட்டு தப்பிவந்து தஞ்சம் கோரும் மக்களைப் பற்றி இந்தச் சட்டம் கவலைப்படவில்லை’ என்பதையும் உணர்த்தினார். “ஆளும் கட்சியின் கொள்கைகளுடன் உடன்படாத வெளிநாட்டவர் வருகையைத் தடுக்க இதனைக் கொண்டு வந்துள்ளீர்கள்” என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
“வர்த்தகம், கல்வி, முதலீடு நோக்கத்துக்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர் எப்போதும் வரவேற்கப்படுவர். ஆனால் இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் பேசி இருக்கிறார். “இந்தியாவுக்கு வருகை தரும் ஒவ்வொரு வெளிநாட்டவரின் தகவலைப் பெறுவதையும், அத்தகவல் முழுமையாகக் கண்காணிக்கப்படுவதையும், இந்த மசோதா உறுதி செய்யும். குடியேற்றம் என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு பிரச்சினை களுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று பேசினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
‘இந்தியா என்பது எவர் வேண்டுமானாலும் வந்து, இலவசமாகத் தங்கும் தர்ம சாலை அல்ல’ என்று கொந்தளித்துப் பேசி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இதே அமித்ஷா அவர்கள், குடியுரிமைச் சட்டம் என்ற கருணைமிக்க சட்டத்தை வடித்துக் கொடுத்தாரே? அதன் நோக்கம் என்ன? ‘இந்தியா என்பது தர்மசாலைதான், வாங்கோ, வந்து தங்கிக்கோங்கோ’ என்பதுதானே அந்த சட்டத்தின் நோக்கம்?
இசுலாமிய மக்களையும், இலங்கைத் தமிழர்களையும் நீக்கி விட்டு கருணை பொங்க ஒரு சட்டத்தை அன்றைக்கு நிறைவேற்றினீர்களே? அப்போது, ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கான நாடு இந்தியா’ என்று சொல்லவில்லையா?
ஒன்றிய அரசின் குடியுரிமைச் சட்டமானது இந்தியாவுக்குள் யார்எல்லாம் வரலாம், வந்தால் யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படும் என்று வரையறுத்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்றும், அந்த நாட்டைச் சேர்ந்த இசுலாமியர்கள் நீங்கலாக மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்றும் சொன்னார்கள்.
பாகிஸ்தானில் இருந்து, வங்க தேசத்தில் இருந்து, ஆப்கானிஸ்தானத்தில் இருந்து இசுலாமியர் நீங்கலான மற்ற மதத்தவர்கள் வரலாம் என்றால் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர்கள் வரலாமா? என்றால் வரக்கூடாது என்பதைத் தடை செய்த சட்டம் அது. இலங்கைத் தமிழர்க்கு மாபெரும் துரோகம் இழைத்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம்என்றால் இலங்கையைச் சேர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.மற்ற அண்டை நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் வரலாம் என்றால் இலங்கையில் இருக்கும் தமிழர்களை இந்துக்களாக பா.ஜ.க. அரசு அங்கீகரிக்கவில்லை.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கம் ஆகிய நாடுகளை மட்டும் குறிப்பிட்டு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பதன் நோக்கம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாட்டில் உள்நாட்டு குழப்பம் ஏற்படுத்துவதற்குத்தான். முஸ்லீம்களால் தொல்லைக்குள்ளாக்கப்படும் மற்ற மதத்தவரைக் காப்பாற்றுவது இச்சட்டத்தின் நோக்கம் என்றால், பவுத்த சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி பா.ஜ.க. அரசு கவலைப்படவில்லை.
இப்படி பல்வேறு சதிகளின் அடிப்படையில் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஈழத்தில் இருப்பவர்கள் இனத்தால் தமிழர்களாக இருந்தாலும் அவர்களது சமய நம்பிக்கை இந்து – – சைவம் சார்ந்ததுதான். அவர்களை திட்டமிட்டு புறக்கணித்திருப்பது இந்துக்களாகவே இருந்தாலும் ‘இந்து தமிழர்கள்’ வேண்டாம் என்ற வஞ்சகம்தான்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் நீங்கலாக யாரும் வரலாம் என்று சொல்வதற்கு ஒரு சட்டம். ‘இந்தியா தர்ம சாலை அல்ல’ என்று சொல்வதற்கு இன்னொரு சட்டம். அமித்ஷாவுக்குத்தான் எத்தனை முகங்கள்?