ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி-4 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு பிப்ரவரி – 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி- 31ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க பாஜக சார்பில் 14 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளாதாக தெரிகிறது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளராக ஏ.பி.முருகானந்தம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பாஜக தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்கவும் ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் பாஜக குழு அமைத்துள்ளது. அதில் வேதானந்தம், சரஸ்வதி எம்எல்ஏ, பழனிசாமி என 14 பாஜக நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இதனிடையே பாஜக முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம், “ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடச் சவால் விடுகிறேன். அப்படிப் போட்டியிட்டால் நான் உங்களை எதிர்த்து நிற்பேன் என்றும் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள். நீங்கள் தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம்” என சவால் விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.