முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மற்றும் வருமான விவரங்கள் மறைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், அதே தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சக்திவேல் பெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேர்தல் வேட்புமனுவில் எடப்பாடி பழனிசாமி தனது சொத்து விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்றும், நிறுவனங்களில் இருந்து அவரது மனைவிக்கு கிடைத்த வருமானம் தொடர்பான தகவல்களும் மறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், 2021ஆம் ஆண்டு தேர்தல் வேட்புமனுவில் இந்து கூட்டுக் குடும்ப சொத்தாக குறிப்பிடப்பட்டிருந்த 3900 சதுர அடி வீடு, தற்போதைய வேட்புமனுவில் மனைவியின் பெயரில் மாற்றப்பட்டிருப்பதை தெரிவிக்கவில்லை என்றும், நெடுங்குளம் கிராமத்தில் வாங்கப்பட்ட விவசாய நிலத்திற்கான நிதி ஆதாரங்கள் குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை ஒப்பிட்டுப் பார்த்தால் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும், உண்மை தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் கூறியுள்ளார். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
”100% குதிரை பேரம்” – தவெக மீது அதிமுக எம்.பி.இன்பதுரை கடும் குற்றச்சாட்டு…
