அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்கள், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பது 100 சதவீதம் குதிரை பேரம் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை கடுமையாக விமர்சித்துள்ளாா்.
அதிமுகவில் நீடித்து வரும் உள்கட்சி மோதல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சம்பவம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை அதிமுக எம்.பி. இன்பதுரை கடுமையாக விமர்சித்து, “இது முழுக்க முழுக்க குதிரை பேரம்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர். பின்னர் அந்த ராஜினாமாக்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதி காலியாக இருந்த நிலையில், தற்போது மேலும் மூன்று தொகுதிகள் காலியாகியுள்ளன. இதனால் சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 234-இல் இருந்து 230 ஆக குறைந்துள்ளது.

ராஜினாமா செய்த உடனேயே மூன்று பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்தனர். தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யையும் சந்தித்து பேசிய அவர்கள், பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். கட்சியின் உறுப்பினர் அட்டைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சில வாரங்களிலேயே ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இடைத்தேர்தலில் அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக போட்டியிட அவர்கள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம் அணிகளுக்கு இடையே மோதல் நீடித்து வரும் சூழலில், இந்த ராஜினாமாக்கள் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, எடப்பாடி பழனிசாமி அணியில் 27 எம்.எல்.ஏக்களும், எஸ்.பி. வேலுமணி அணியில் 17 எம்.எல்.ஏக்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக எம்.பி. இன்பதுரை, “ராஜினாமா அறிவிப்பு வெளியாகும் முன்பே, மூன்று எம்.எல்.ஏக்களும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து, உடனடியாக கட்சியில் இணைக்கப்பட்டு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. இது அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல்கள். இது 100 சதவீத குதிரை பேரம்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!
