ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி-4 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு பிப்ரவரி – 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி- 31ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க பாஜக சார்பில் 14 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஜி.கே.வாசன் உடன் அதிமுக நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்று ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் வாசனிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன்,”ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை நாங்கள் போட்டியிட்டோம். இம்முறை அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ஓரிரு நாளில் கூட்டணி கட்சிகளுடன் கலந்துபேசி வேட்பாளரை அறிவிப்போம். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா வேட்பாளர் யுவராஜ் போட்டியிட்டார். அரசுக்கு எதிரான வாக்குகள் அதிகரித்துவருவதால் அதனை சிதறாமல் பெறுவதே எங்கள் கூட்டணியின் நோக்கம்” என்றார்.