”எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று குறிப்பிடும்போது, நாங்கள் என்ன ஐ.ஏ.எஸ் ஆபீசர்களா? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
மேகதாதுவில் எந்த கொம்பனாலும் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன்,”காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரையிலும் சென்றிருக்கிறோம். பிரச்னையை நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுதும் பேசிக்கொண்டு தான் இருந்தீர்கள். நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது.

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லவில்லை; சட்டத்திற்கு புறம்பாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லவில்லை. கனிம வளங்கள் கொள்ளை போகிறது என இனிமேல் யாரும் சொல்ல முடியாது; சிறிய கல் கூட நம்முடைய அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்ல முடியாது. இதுவரை 21 ஆயிரம் வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
நான் ஒரு விவசாயி,விவசாயி என்று எதெற்கெடுத்தாலும் தம்பட்டம் அடிக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களே,
நீங்கள் விவசாயி என்றால்,நாங்கள் என்ன ஐ.ஏ.எஸ்-ஆ…? வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி களமாடினார் என்றால், நாங்க என்ன பேண்ட், சர்ட் அணிந்தா வருகிறோம் என வினவினார்.
வெகுநேரம் நின்று பேசிக் கொண்டு இருந்த துரைமுருகனை அழைத்த சபாநாயகர் : அவையின் முன்னவரான உங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அமர்ந்து பதிலளிக்கும்படி விருப்பப்படுகிறார்.
அமைச்சர் துரைமுருகன் : ஆமாம், எனக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. நேற்றுகூட சளி, இருமல்.
சபாநாயகர் : நீங்கள் நிச்சயம் 100 ஆண்டுகாலம் நோய், நொடியில்லாமல் வாழ்வீர்கள்.
அமைச்சர் துரைமுருகன் : அதில் ஒரு சந்தேகமும் இல்லை” என்றபோது மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சட்டமன்றத்தில் குலுங்கி குலுங்கிச் சிரித்தனர்.