வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒரு கண்ணில் என மத்திய அரசு பாகுபாடு பார்த்து வருகிறது. தமிழ்நாடு செலுத்தும் வரியில் மாநிலங்களுக்கு பிரிப்பதில் தமிழ்நாட்டிற்கு 4.7% உத்தரபிரதேசத்திற்கு 17% கொடுப்பதாக பொன்னேரியில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக சார்பில் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகம் ஆகிய இருவர் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் 2026 தேர்தலில் ஆளும் சர்வாதிகார இடியமீன், முசோலினி அரசு வீட்டிற்கு அனுப்புவதற்காக கள ஆய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது என்றும், யாருக்குமே பாதுகாப்பில்லாமல் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்றார்.
மருத்துவர்கள் இல்லாத சூழல், டெங்கு கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது என்றார். மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு 1கோடி, இழப்பீடு செலுத்தி வரும் நிலையில் ஸ்டாலின் அரசு கடிதம் மட்டுமே எழுதி வருகிறது எனவும், அனைத்து தரப்பினராலும் வெருக்கப்படும் ஆட்சி திமுக ஆட்சி என்றார்.
திருமாவளவன் முதலமைச்சர் ஆசை குறித்த கேள்விக்கு ஆசையே அலை போலே நாம் எல்லாம் அதன் மேலே என்ற பாடலை பாடி அனைவருக்கும் ஆசை இருக்கும் எனவும் அப்துல் கலாம் கூறியது போல அனைவரும் கணவு காண உரிமை உண்டு எனவும், இதனை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். ஆளும் கூட்டணியில் இருந்து அதிமுக கூட்டணிக்கு வந்தால் இணைத்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, திமுக கூட்டணியில் புகைச்சல் உள்ளது எனவும், நெருப்பு இல்லாமல் புகையாது என்றும், 15 மாதங்கள் உள்ள நிலையில் பாஜகவை தவிர்த்து அதிமுக தலைமையை ஏற்று கொண்டு வரும் கட்சிகளை கூட்டணியில் இணைப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றார்.
எரிச்சல் பழனிசாமி என மா.சுப்ரமணியன் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு எங்களுக்கு எரிச்சல் கிடையாது எனவும், ஸ்டாலினுக்கு தான் நெஞ்செரிச்சல் என்றும், வேண்டுமென்றால் ஸ்டாலினுக்கு ஜெலுசில் ஒரு பண்டல் மாத்திரையை அனுப்பி வைப்பதாக ஜெயக்குமார் கூறினார். மத்தியில் 15ஆண்டுகள் கூட்டணியில் இருந்த போது காவிரி நீர், முல்லை பெரியாறு, கச்சத்தீவு, கல்வி பட்டியல் என அனைத்தையும் சீரழித்தது திமுக எனவும், கூட்டணியில் இருந்த போது செய்யாமல் இப்போது நிதிகுழுவிடம் திமுக மனு அளிப்பது ஏன் என்றார்.
தமிழ்நாடு செலுத்தும் வரியில் ரூ.100க்கு 59ரூ மத்திய அரசு எடுத்து கொண்டு, 41 ரூபாயை 100% என வைத்து அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுப்பதாகவும், அதில் தமிழ்நாட்டிற்கு 4.7% மட்டுமே கிடைப்பதாகவும், உத்தரபிரதேசத்திற்கு17% கொடுப்பதாகவும், வெண்ணெய் ஒரு கண்ணிலும் சுண்ணாம்பு ஒரு கண்ணிலும் வைப்பதாக கூறினார். மத்தியில் கூட்டணியில் இருந்த போது வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என ஸ்டாலின் ஏன் கூறவில்லை என்றார்.
படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கொள்கை என்றும், மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறிய ஸ்டாலின், ஆனால் கடைகளை அதிகப்படுத்தி இருக்கிறார், மனமகிழ் மன்றங்களை கொண்டு வந்துள்ளார் என குற்றம் சாட்டினார். 30000 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம், தற்போது 52000 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் குடிகாரர்களை அதிகமாக்கி மாநிலத்தை சீரழித்து வருகிறது திமுக அரசு என்றார்.
2026இல் இரண்டாவது இடத்தை பிடிக்கப் போகும் கட்சி எது? காலியாக போகும் கட்சிகள் எவை?