தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக வாங்கும் முடிவை, சூழ்நிலை பொருத்து முதலமைச்சர் அறிவிப்பார் என, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நடவடிக்கையால் 20 விழுக்காடு அளவு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பிளாஸ்டிக்கை பார்த்தாலே பொதுமக்களுக்கு கோபம் வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தொழில் வர்த்தக சபை சார்பில் நடைபெற்ற ‘மாசு உமிழ்வற்ற பெருநகருக்கான திட்டமிடல்’ எனும் ஒருநாள் கருத்தரங்கை அமைச்சர் சிவ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்கால பாதிப்பை தடுக்கும் நோக்கில், கடந்த மாதம், Cimate change mission எனப்படும் காலநிலை மாற்ற இயக்கம் என்ற திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார் என்றார். இத்திட்டத்திற்கென 500 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 73 கோடிக்கு அனுமதி தந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
தமிழ்நாட்டில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக மண்சார்ந்த பனை, புங்கை மற்றும் வேப்ப மரங்கள் நடவு செய்யப்படுவதாக கூறிய மெய்யநாதன், காப்புக்காடு, பறவைகள் சரணாலயம், மலைப்பகுதிகளின் அருகில் குவாரிகள் அமைக்க கூடாது என்ற சட்டத்தை மீறி செயல்படும் குவாரிகள் மூடப்படும் என எச்சரித்தார்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறையில் உள்ள வனப்பாதுகாவலர்களுக்கு சுற்றுச் சூழலை பாதிக்காத மின்சார வாகனங்களே வாங்கப்பட்ட உள்ளதாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு வாங்கும் புதிய பேருந்துகளை மின்சார பேருந்துகளாக வாங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
முன்னதாக விழாவில் உரையாற்றிய அமைச்சர் மெய்யநாதன்,
இந்திய கட்சிகளில், சுற்றுச் சூழல் அணி என பெயர் இருப்பது திமுகவில்தான் என்றார்.
ஆண்டுக்கு 10 கோடி மரங்களை நடவு செய்து, 9 சதவீதமாக உள்ள வனப்பரப்பை, அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சர் என்பதால் தன் பின்னால் பல கார்கள் அணிவகுப்பதில் உன்பாடில்லை என்று உரைத்த மெய்யநாதன், தமது காரில் பாதுகாவலர்களுடன் மட்டுமே தாம் செல்வது, இயற்கைக்கு செய்யும் கடமை என கூறினார்.
திமுக அரசு அமைந்த பிறகு 176 பிளாஸ்டிக் கம்பெனிகள் மூடப்பட்டு, 110 கோடி ரூபாய் அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், பிளாஸ்டிக் அழிய 4,500 ஆண்டுகள் வரை ஆகும் என்றார்.
மீண்டும் மஞ்சப் பை திட்டம் போன்ற அரசின் நடவடிக்கைகளால்,
20 விழுக்காடு அளவு பிளாஸ்டிக் பயன்பாடு தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளதென அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.