
இரண்டு தமிழர்கள் பிரதமராவதை திமுக கெடுத்தது/தடுத்தது என்ற குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா சென்னை வந்த போது நிர்வாகி கூட்டத்தில் பேசிய போது முன் வைத்திருக்கிறார் . அமித்ஷா குற்றச்சாட்டின் அந்தப் பின்னணி என்ன? உண்மை என்ன? என்பது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் டி. கே. எஸ் இளங்கோவன் விளக்கம் அளித்து இருக்கிறார் . தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் அவர் இதற்குரிய விளக்கத்தை அளித்திருக்கிறார்.

இரண்டு தமிழர்கள் என்றால் ஒருவர் காமராஜர். இன்னொருவர் மூப்பனார் என்று அமித்ஷா குறிப்பிடுகிறார். நேரு மறைந்த நேரம் அது. அப்போதைய சூழலில் காமராஜருக்கு அந்த வாய்ப்பு இருந்தது. ஆனால், அது நடக்காமல் போனதற்கு திமுக எப்படி காரணமாகும்? காமாராஜர் என்ன திமுகவிலா இருந்தார்? காமராஜர் பிரதமராக வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி அதற்கான வேலைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். அக்கட்சியினர் அதை செய்யாததற்கு திமுக எப்படி பொறுப்பாக முடியும்? காங்கிரசில் இருக்கும் காமராஜர் பிரதமர் ஆவதற்கு திமுக எப்படி பாடுபடும்? என்று கேட்கிறார் டிகேஎஸ் இளங்கோவன்.


காமராஜரை பற்றி அமித்ஷா பேசுவதற்கு கடுமையான பதிலடியும் கொடுத்திருக்கிறார் டிகேஎஸ் இளங்கோவன். காமராஜை பற்றி பேசுகிறார்கள். அவர் இருந்திருந்தால் காரி துப்பி இருப்பார். இப்போது இருக்கும் பாஜக அப்போது பாரதிய ஜனசங்கம். இந்த பாஜக சங்கிகள் அன்றைக்கு காமராஜை அவர் தங்கி இருந்த ஓட்டலில் புகுந்து அவர் இருந்த அறைக்குள் சென்று தாக்கி கொல்ல முயன்றார்கள். அப்படிப்பட்டவர்கள் காமராஜருக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அவர் இருந்திருந்தால் காரி துப்பி இருப்பார். அவர் இல்லை என்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசுகிறார்கள் என்று சொல்லும் டிகேஎஸ் இளங்கோவன், பசுவதை உள்ளிட்ட பாஜக சங்கிகளின் பல்வேறு விசயங்களை கடுமையாக எதிர்த்ததால் காமராஜை கொலை செய்ய முயன்றார்கள் என்கிறார்.

டிகேஎஸ் இளங்கோவன் சொன்னதற்கு சில வரலாற்று ஆதாரங்களும் உள்ளன. 1951ம் ஆண்டில் சியாமபிரசாத் முகர்ஜியால் துவங்கப்பட்டு, தீனதயாள் உபாத்தியாவினால் வழிநடத்தப்பட்ட பாரதிய ஜனசங்கம் கட்சிதான் 1980ம் ஆண்டில் வாஜ்பாய் தலைமை ஏற்று பாரதீய ஜனதாவாக மலர்ந்தது. டெல்லியில் நடந்த அந்த சம்பவத்திற்கு பின்னர், சேலத்தில் தனது பேருரையில், ’’குறிப்பாக அவர்களுக்கு, பயம் என்னைப் பற்றித்தான். இந்த காமாராஜ் தான் சோஷியலிஸ சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான். அவன்தான் அதிலே தீவிரமாக இருக்கின்றான் என்று நினைக்கிறார்கள். என் வீட்டுக்கு தீ வைக்கின்றார்கள். ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் காமராஜர்.

’’காமராஜர் அகஸ்மாத்தாய் எழுந்து புறக்கடை வழியாய் வெளியேறாமல் இருந்திருந்தால் இன்றைக்கு அவருக்கு 10ஆம் நாள் கருமாதி தானே நடக்கும்?’’ என்று 1966ம் ஆண்டில் நவம்பர் மாதம் கேட்டிருக்கிறார் தந்தை பெரியார். ’’சங்கராச்சாரியார்கள், சாமியார்கள், பார்ப்பன குண்டர்கள் டில்லியில் காமராசரைக் கொல்ல, அவர் தங்கியிருந்த வீட்டிற்கு நெருப்பு வைக்க முயற்சித்த அடாத செயலைக் கண்டிப்பதன் அறிகுறியாக 1966 ,நவம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையை பார்ப்பனரின் கொலை பாதகக் கண்டன நாளாக தமிழ் நாடு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அன்று கருப்புக்கொடி ஊர்வலம் நடத்தி, கூட்டம் போட்டு, சங்கராச்சாரி யார்கள், சாமியார்கள், குண்டர்களைக் கண்டித்துப் பேசி, யாவரும் ‘கத்தி’வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.’’என்றும் பேசியிருக்கிறார் பெரியார்.

’’முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு ஆர். எஸ். எஸ் இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தார். பாஜக கொண்டாடும் சர்தார் வல்லபாய் படேல் கூட ஆர்எஸ்எஸ் இயக்கம் வளர்வது நாட்டுக்கு ஆபத்து என்றார். இதனால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் . இப்படிப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் வளரக்கூடாது என்று தடை விதித்தார். காமராஜர் தூங்கிக் கொண்டிருந்த போது அவரை கொலை செய்ய முயற்சித்தவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர். மகாத்மா காந்தியடிகளை சுட்டுக் கொன்ற கும்பல் ஆர். எஸ். எஸ்.’’ என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த ஆண்டில் காமராஜர் நினைவு நாளில் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருந்தார். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரத்தில் இவ்வாறு அவர் ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
’’இப்போதும் பாஜக ஆட்சிக்கு வந்ததுமே அறிஞர்கள் பலரை கொன்றது. ஆனால், தமிழ்நாட்டில் அந்த கொலைகள் நடக்காதவாறு நாங்கள் பார்த்துக்கொள்வோம்’’ என்று சொன்ன டிகேஎஸ் இளங்கோவனிடம், மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு இருந்தும் அதை கெடுத்தது திமுகதானே? என்று நெறியாளர் கேட்க, ‘’அவர் வேறு கட்சிக்காரர். திமுக எப்படி தடுக்கும்’’ என்று மீண்டும் டிகேஎஸ் நழுவ, 1996ல் மூப்பனாரின் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது. அந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு இருந்தது. அப்போது அமோக வெற்றி கிடைத்தது. அந்த நேரத்தில் மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் கருணாநிதி அதை ஆதரிக்கவில்லையே? என்று மடக்க,

‘’அந்த நேரத்தில் மூப்பனார் அதை விரும்பவில்லை. நாங்கள் அதை கெடுக்கவில்லை’’ என்றவரிடம், மூப்பனார் விரும்பி இருந்தால் நாங்கள் ஆதரவு தெரிவித்து இருப்போம் என்று கருணாநிதி சொன்னது நொண்டிசாக்குதானே? ஒரு தமிழர் பிரதமர் ஆவதற்கு கருணாநிதி ஏன் முயற்சி எடுக்கவில்லை? என்ற நெறியாளரின் கேள்விக்கு, ‘’கருணாநிதி அவர்களுக்கு கூட அந்த வாய்ப்பு அப்போது வந்தது. அதற்கு அவர், ‘என் உயரம் எனக்குத்தெரியும்’ என்று சொல்லிவிட்டார். யார் யார் வேண்டாம் என்று மறுத்தார்களோ அந்த பட்டியலை பார்த்துதான் அமித்ஷா சொல்கிறார்’’ என்கிறார்.
மூப்பனாரை பிரதமர் ஆக்க ஒரு பேச்சுவார்த்தை நடதிருக்கிறது. அந்த பேச்சுவார்த்தையில், முப்பனார் ஒரு முறை கூட முதல்வர் ஆகவில்லை. அவருக்கு ஆங்கிலமும் தெரியாது. அவர் எப்படி பிரதமர் ஆக முடியும்? என்று ஒரு நிர்வாகி சொன்னாராமே? நம்ம கூடவே இருக்கும் ஒருவர் பிரதமராவா? அவருக்கு முதல்வராக இருக்கும் நான் சல்யூட் அடிக்க வேண்டுமா? என்று கருணாநிதி நினைத்தாரா? என்ற கேள்விக்கு, ‘’மூப்பனார் மறுத்துவிட்டார் என்பதுதான் எனக்கு தெரிந்த உண்மை’’என்கிறார் அழுத்தமாக.