”போக்சோ குற்றங்கள் நடப்பதை தமிழ்நாடு அரசு தடுக்க முடியாது விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த முடியும்” என சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நடந்த குற்றங்களுக்கு விரைவில் தண்டனை பெற்று தர முடியும். வீட்டிலேயே வளரும் ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு நடத்தும் ஸ்டேட் போர்டு பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையை போதும். நானும், என் மகளும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தோம். என்னை பொறுத்தவரை மூன்றாவது மொழி கட்டாய பாடமாக்குவது தமிழ்நாட்டிற்கு தேவையில்லாதது.
வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்கள் முன்பாகவே ஆத்தி சூடியையும், திருக்குறளையும் படித்து விட்டு வருவது கிடையாது. இங்கு வந்து தேவைக்கு ஏற்றார்போல் மொழியை பழகிக் கொள்கின்றனர். நாமும் அவர்களோடு பழகிக் கொள்கிறோம். அவர்களுக்கு மொழி தெரியவில்லை என்பதால் அவர்களை விரட்டியடிப்பதில்லை.
அதேபோல் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வட இந்தியாவிற்கு வேலைக்குச் சென்றால் அவரவர்களின் தேவைக்கேற்ப அங்கு உள்ள மொழிகளை கற்றுக் கொள்வார்கள். கட்டாயப் பாடமாக மூன்றாவது மொழியை கொண்டு வருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு முதலமைச்சரின் நிலைப்பாட்டை நான் முழுமையாக ஆதரிக்கின்றேன்.
மூன்றாவது மொழி எந்த மொழியை வேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியப்படாது. மூன்றாவது மொழி என்று கூறி இந்திதான் வரும். அனைத்து பள்ளிக்கும் இந்தி ஆசிரியரை வைக்க முடியாது. அதனால், ஒன்றிய அரசே, உங்களுக்கு தான் இந்திய ஆசிரியர் வைக்க முடியவில்லை. அதனால் நாங்கள் உத்தரபிரதேசத்தில் இருந்தும் பீகாரிலிருந்தும் இந்தியா ஆசிரியரை அனுப்புகிறோம் என்று கூறுவார்கள். இது தேவையில்லாத வேலை.
ஒரு மொழியை அழிக்க வேண்டும், கலாச்சாரத்தை அளிக்க வேண்டும் என்றால் இந்த வழியில் தான் அழிக்க முடியும். அதனால் தமிழ்நாட்டிற்கு கட்டாயம் மூன்றாவது மொழி தேவை கிடையாது. இருமொழிக் கொள்கையே போதும். ஆங்கிலமும், தமிழும் நன்றாக படித்து மாணவர்கள் தேர்ச்சி அடைந்தாலே போதும். யாராவது விருப்பப்பட்ட இந்தி மொழியை படிக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் படிப்பதற்கு நிறைய வழி இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.