“அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக கட்டாயப்படுத்தியதே கூட்டணி முறிவுக்கு காரணம்”
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதே கூட்டணி முறிவுக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. அண்ணாமலை ஓராண்டாகத் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா பற்றி பா.ஜ.க. விமர்சித்து வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆதிமுக தலைமை, 2 கோடி கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாஜக- அதிமுக கூட்டணி முறிவுக்கு 2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். அந்தியூர் அருகே குருவரெட்டியூரில் நடைபெற்ற அதிமுக பொதுகூட்டத்தில் உரையாற்றிய கே.சி. கருப்பணன், வேலைக்காரனாக இருந்தாலும் முதலாளியிடம் ஓரளவிற்கு தான் இறங்கி செல்ல முடியும் என சூசகமாக தெரிவித்தார்.


