Homeசெய்திகள்அரசியல்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது மஜத

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது மஜத

-

கர்நாடக சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் 93 தொகுதி வேட்பாளர்களின் முதல் பட்டியலை மதசார்பற்ற ஜனதாதளம் வெளியிட்டது.

கர்நாடக மாநிலத்தில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பொது தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநில சட்டபேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் என்பதாலும் ஆளும் பாஜக உட்பட அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தை ஆளும் பாஜக அரசு சார்பில் 224 சட்டபேரவை தொகுதியிலும் ஜனசங்கல்ப யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் சார்பில் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் கடந்த ஒரு மாதமாக பல மாவட்டங்களில் மாநாடுகள் நடத்தி வருகின்றனர். மஜத சார்பில் பஞ்சரத்ன என்ற யாத்திரையை முன்னாள் முதல்வர் குமாரசாமி நடந்தி வருகிறார். சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு விஷயத்தில் ஆளும் பாஜக அரசு இதுவரை எந்த பணியும் தொடங்காத நிலையில், காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் 93 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பெங்களூருவில் உள்ள மஜத தலைமை அலுவலகமான ஜே.பி.பவனில் கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராஹிம் முன்னிலையில் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி வெளியிட்டார். அதன் மூலம் தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்த முதல் கட்சி என்ற பெருமையை மஜத பெற்றுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் ராம்நகரம் மற்றும் சென்னபட்டன ஆகிய இரு தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி வெற்றி பெற்றார். அதில் ராம்நகரம் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

காலியாக இருந்த ராம்நகரம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அனிதாகுமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் எச்.டி.குமாரசாமி சென்னபட்டன மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராம்நகர் தொகுதியில் குமாரசாமி அவரது மனைவி அனிதா குமாரசாமி போட்டியிடப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டு அதற்கு மாறாக குமாரசாமி அவரது மகனும் நடிகருமான நிகில் குமாரசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நிகில் குமாரசாமி மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளரான சுமலதா அம்ரிஷ் இடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ