கரூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் காரில் சென்றுகொண்டிருந்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்ட திருவிகா என்பவர் கடத்தப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி,”கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலில் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது, தமிழக அரசியலின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது. ஜனநாயகம் என்ற பெயரில் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் வியாபாரமே தமிழக அரசியலில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.
ஒரு பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலுக்காக நீதிமன்றம் சென்று, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், பல நூற்றுக்கணக்கான காவலர்கள், அரசு அதிகாரிகள் என்று அரசு இயந்திரத்தை தங்களின் ‘எதிர்கால கொள்ளை’ திட்டத்திற்கு தீய சக்திகள் ஆட்படுத்தியுள்ளதை, அதே ஜனநாயகம் என்ற பெயரில் நீதி மன்றங்களும், அரசு இயந்திரமும், மக்களும் கை கட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது காலத்தின் அலங்கோலம். ஒரு முன்னாள் அமைச்சரின் வாகனத்தை வழிமறித்து, ஆசிட் வீசி, அதிலிருந்து ஒரு கவுன்சிலரை கடத்தி சென்று வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பாக கருதப்பட வேண்டிய உள்ளாட்சி பொறுப்புகளை அடைய இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன்? இந்த பதவிகளில் பல கோடிகளை கொள்ளையடிக்க உள்ள வாய்ப்புகளை தக்க வைக்க, அரசியலை தொழிலாக கருதி பிழைப்பு நடத்தும் அரசியல் மாஃபியாக்களின் போட்டியே இது போன்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு காரணம். மக்கள் பணத்தில் ஊழல் செய்வதே தமிழகத்தின் முதன்மை சட்ட விரோத தொழில் என்பதை கண்கூடாக உணர்த்துகின்ற நிகழ்வு இது. இந்த சட்ட விரோத செயலை செய்வதற்கு சட்டரீதியாக நீதிமன்றத்தை அணுகி, அரசு இயந்திரத்தின் மூலமே தேர்வாகி,மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் இழி நிலையை பார்த்து கொண்டிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு” எனக் குறிப்பிட்டுள்ளார்.