புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சமீபத்தில் அதிமுக மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
கூட்டணி குறித்த விவகாரத்தில் கிருஷ்ணசாமி தங்களை நேரடியாகச் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “கிருஷ்ணசாமி எங்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மாறாக, வேறொரு நபர் மூலமாகவே முதலில் 10 இடங்களைக் கேட்டார், பின்னர் 5 இடங்களைக் கேட்டார். தற்போதைய சூழலில் அவ்வளவு இடங்களை எங்களால் ஒதுக்க முடியாது என்று நாங்கள் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டோம்,” என்று விளக்கமளித்தார்.

சீட் ஒதுக்கீடு என்பது கட்சியின் செல்வாக்கு மற்றும் கடந்தகால வாக்குகளின் அடிப்படையிலேயே அமையும் என்று குறிப்பிட்ட அவர், கிருஷ்ணசாமியின் தேர்தல் வரலாற்றைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார். “கடந்த தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 33,000 வாக்குகளை மட்டுமே கிருஷ்ணசாமி வாங்கியிருக்கிறார். வாக்குகளின் அடிப்படையில்தான் சீட் கொடுக்க முடியும். வெறும் 33,000 வாக்குகள் வைத்துள்ள ஒரு கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்ய முடியாது,” என்று அவர் கூறினார்.
