அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்
ஒரத்தநாடு பேரூராட்சி தலைவரும் அமமுகவின் தெற்கு மாவட்ட செயலாளருமான சேகரை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்றுமுதல் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேகர், இன்று அல்லது நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.