எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க முடியுமா என ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அவருடைய ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம், கு.பகிருஷ்ணன், ஜே சி டி பிரபாகர், மனோஜ் பாண்டியன், புகழேந்தி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேடையில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “ஜெயலலிதாவுக்கு வழங்கிய நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்தை ரத்து செய்தவர்களை இந்த நாடு மன்னிக்குமா? எடப்பாடி பழனிச்சாமி உடன் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் காசுக்காக மட்டுமே இருக்கின்றனர். எந்த மணி நினைத்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. பொதுக்குழுவுக்கு தான் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களை தீட்டினர். ஈபிஎஸ்-க்கு தைரியம் இருந்தால் தனி கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க முடியுமா? டிடிவி தினகரனோடு இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தான் வாக்களித்திருந்தால் அன்றைக்கே அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதை எடப்பாடி பழனிச்சாமிதான் தடுத்து நிறுத்தினார். உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என சூளுரைத்தார்.