ஆறுமுகசாமி கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜெ.ஜெ கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திவரும் பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில்,ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஆறுமுகசாமி ஆணையம்,சில பரிந்துரைகளை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டதாகவும் அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக வி.கே.சசிகலா,டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடம் மீண்டும் விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை அந்த பரிந்துரைகள் மீது எந்த நடவடிக்கை இல்லை என்றும்,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் பி. முத்துக்குமார், ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதும் எடுக்காமல் இருப்பதும் அரசினுடைய தன்னிச்சையான அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.
இதே கருத்தை முன்னாள் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி குறிப்பிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.