பொன்.முத்துராமிலங்கம்

இன்று திராவிட இயக்க வளர்ச்சிப்போக்கின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இங்கு நடைபெறும் ஆட்சி, ‘திராவிட மாடல் ஆட்சி’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியும் வளமும், இந்திய ஒன்றியத்திலேயே வியத்தகு முன்னேற்றம் அடைந்திருக்கின்றது என்றால் அதற்கு முழுமுதற் காரணம், திராவிட இயக்கச் சிந்தனைகள் வழியாக மலர்ந்த திட்டங்களும் சட்டங்களும்தான் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

மகத்தான திராவிட இயக்க வளர்ச்சியில் தென் தமிழ்நாட்டின் பங்கும் பணியும் என்றும் நினைவுகொள்ளத்தக்க வரலாற்றுப் பதிவாக உள்ளது. தென் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான குரல் என்பது 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி, 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உச்சநிலையை அடைந்தது. அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற ஆயுதமேந்திய மக்கள் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் போர்க்களத்திலும் தூக்குமேடையிலும் படுகொலை செய்யப்பட்டனர் என்ற நிகழ்வுகள் இதயத்தை உறையவைக்கும் வரலாற்றுச் செய்திகளாகும். இந்தச் சூழ்நிலையில், தென் தமிழ்நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான சுதந்திர வேட்கை மேலோங்கியிருந்த காலகட்டம்.
எனவே, வடதமிழ்நாட்டில் நீதிக்கட்சியும், திராவிட இயக்கமும் வலுப்பெற்றுத் தீவிரமடைந்த காலத்திற்குச் சற்று காலத்தால் பின்தங்கித்தான், வளர்ச்சியும் எழுச்சியும் தென் தமிழ்நாட்டில் பெற்றது. 1918 ஆம் ஆண்டிலேயே பிராமணர் அல்லாதோர் மாநாடு, மதுரையில் நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டில் 13.10.1918ல் வரவேற்புரை நிகழ்த்திய வரவேற்புக் குழுத் தலைவர், உத்தமபாளையம் எம்.டி சுப்பிரமணிய முதலியார் (Justice Party Golden Souvenir Book – Page No 201) தன்னுடைய வரவேற்புரையில், இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு கண்டம் என்பதை வலியுறுத்தினார்.
நாட்டில் வாழும் அனைத்து மக்களும், தங்களின் உரிமைகளையும் சலுகைகளையும், பாரபட்சமின்றிப் பெற்றிட வேண்டுமெனில், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அத்தியாவசியம் என்பதை வலியுறுத்துவதோடு, கீழ்க்கண்ட 6 அம்ச கோரிக்கைகளையும் தன்னுடைய வரவேற்புரையில் வலியுறுத்தினார்.
கோரிக்கைகள்
- பொது மக்களிடம் வசூலிக்கப்படும் வரிகள் அனைத்தும், யாதொரு வேறுபாடும் இல்லாமல் எல்லா சாதியினருக்கும் பயன்படத்தக்க வகையில் இருக்க வேண்டும்.
- மேற்கண்ட மக்களின் வரித் தொகையிலிருந்து, மானியம் பெறும். எந்த ஒரு நிறுவனமானாலும் சாதி, மத, வேறுபாடு கருதாது அனைவருக்கும் பயன்படக்கூடியதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். அப்படிச் செயல்படாத நிறுவனங்களுக்கு மானியத்தொகை நிறுத்தப்பட வேண்டும்.
- மக்களிடம் வசூலிக்கப்படும் வரி வருவாய்த் தொகையை, அனைத்து மக்களுக்குமான சுகாதாரம், பிரதான கல்வி, விவசாயம், கைத்தொழில் படிப்பு ஆகிய சமூக முன்னேற்றத்திற்கான துறைகளுக்கே செலவு செய்யப்பட வேண்டும்.
- இந்துக்களில் அனைத்துச் சாதியினரும் பண்டைய கோயில்களில் பக்தியைச் செலுத்திட சென்றுவர எந்தத் தடையும் இருக்கலாகாது.
- பொது அறநிலையங்களின் மூலமாகவும் அரசாங்கத்தின் மூலமாகவும் வரும் வருவாயை ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும் பயன்படுத்தத்தக்க வகையில் இருக்கக் கூடாது.
- மருத்துவமனை, சிறை முதலிய இடங்களில் எவ்வித சாதிய வேறுபாடும் வேற்றுமை உணர்வும் காட்டக் கூடாது.
இப்படிப்பட்ட வரலாற்றுத் தொடர்ச்சியுடன் பிராமணரல்லாதவருக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு முடிவுகட்டும் இலட்சிய நோக்குடன் 1925ஆம் ஆண்டு, தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். அந்த இயக்கத்தின் முதல் மாநாடு 1929ல் செங்கல்பட்டிலும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது மாநாடு, 1930ல் ஈரோட்டிலும், பின்னர் மூன்றாவது மாநாடு 1931ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8, 9ஆம் தேதிகளில் விருதுநகரிலும் நடைபெற்றது.
திராவிட இயக்க வளர்ச்சிப்போக்கில் தென் தமிழ்நாட்டில் இந்த மாநாடு முக்கியமான இடத்தைப்பெறுகிறது. இந்த விருதுநகர் மூன்றாவது சுயமரியாதை மாநாடு குறித்த விவரங்களை திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்கள், தன்னுடைய ‘சுயமரியாதை இயக்க வரலாறு’ நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
பின்னர், 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. தந்தை பெரியாரின் இயல்பான நீண்ட உரைகள்மூலம் தென் தமிழ்நாட்டில் பகுத்தறிவுக்கான சிந்தனைகளும் சுயமரியாதைக் கருத்துகளும், தன்மான உணர்வும் மறுமலர்ச்சி பெற்றன. இதனைத் தொடர்ந்து 1949ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா, திராவிடர் கழகத்திலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தை அரசியல் இயக்கமாகத் தொடங்கினார்.
கழகம் தொடங்கிய 18 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஆட்சி பீடத்தில் அமரும் அளவிற்கு வளர்ச்சிபெற்றது. குறிப்பாக, தென்தமிழ்நாட்டில் சற்று தாமதமாகவே திராவிட முன்னேற்றக் கழகம் வளரத் தொடங்கியது எனினும், பலம் பொருந்திய இயக்கமாக, இராணுவக் கட்டுப்பாட்டுடன் வளர்ந்தது. மதுரை மாவட்டத்தில் மதுரை எஸ்.முத்து அவர்கள், மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்று கழகப் பணியாற்றிய பொழுது, துணிச்சலுடன் அரசியல் எதிரிகளைக் களத்தில் எதிர்கொண்டு, கழகத்தை வளர்த்தெடுத்தார்.
மதுரை கூடல் நகர் மாநாடு, (1977) திண்டுக்கல் மாநாடு (1984) நெல்லையில் நடைபெற்ற பொன்விழா மாநாடு, மதுரையில் நடைபெற்ற பவள விழா மாநாடு (1991) மதுரையில் நடைபெற்ற டெசோ மாநாடு, திண்டுக்கல்லில் நடைபெற்ற டெசோ ஊர்வலம், கருப்புக்கொடிப் போராட்டங்கள் மிசா கொடுமைகள், திருச்செந்தூர் வரையிலான முத்தமிழறிஞர் கலைஞரின் ‘நீதி கேட்டு நெடும்பயணம்’ என்று எத்தனையோ வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. மதுரை எஸ்.முத்து அவர்களைத் தொடர்ந்ததுதான், 1973ல் தொடங்கி, 1993 வரையில் ஒன்றுபட்ட மதுரை மாவட்ட கழகத்தின் செயலாளராக நான் பணியாற்றினேன்.
இதுபோல ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிறுகதை மன்னன் எஸ்.எஸ்.தென்னரசு அவர்கள், தன் கழகத்தை வீரம் செறிந்த பூமியில் வளர்த்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், மதுரை எஸ்.முத்து அவர்களையும் சிறுகதை மன்னன் எஸ்.எஸ். தென்னரசு அவர்களையும், மருது சகோதரர்கள் என்றுதான் பொதுக் கூட்டங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் விளிப்பார்கள். திருநெல்வேலியில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த பெருமைக்குரிய இரத்தினவேல் பாண்டியன் அவர்கள், கழகத்தின் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர். தூத்துக்குடிக்கென தனிப் பெருமையுண்டு. கே.வி.கே.சாமி மாவட்டம் என்பார்கள்.
அவரைத் தொடர்ந்து தூத்துக்குடி கிருஷ்ணன், சௌந்திரபாண்டியன், கலைஞரின் முரட்டு பக்தன் பெரியசாமி எனப் பட்டியல் தொடரும். இவர்களது பணி அளப்பரியதாகும். கன்னியாகுமரி மாவட்டம் தந்த கொள்கைத் தங்கம்தான், கழக அமைப்புச் செயலாளராகப் பணியாற்றிய நீலநாராயணன் நாடறிந்த நாடாளுமன்ற உறுப்பினர். கொஞ்சும் தமிழில் மேடையில் பேசும் ஆற்றல் கொண்ட நாஞ்சில் மனோகரன், ஜான், வழக்கறிஞர் மைக்கேல்ராஜ் ஆகியவர்களின் பணி, திராவிட இயக்க வரலாற்றில் அழியா இடம்பெற்றுள்ளது.
நான் மாவட்ட கழகச் செயலாளராகப் பொறுப்பேற்பதற்கு ஓராண்டுக்கு முன்னர்தான் எம்.ஜி. ராமச்சந்திரன் இயக்கத்திலிருந்து பிரிந்து, தனிக்கட்சி தொடங்கினார். அவர் தனிக்கட்சி தொடங்கியவுடன், திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில், நான் தி.மு.க.வின் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டேன். அன்றிருந்த சூழ்நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். இதனைத் தொடர்ந்துதான் நான் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு, 20 ஆண்டுக்காலம் ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் செயலாளராகப் பணியாற்றினேன்.
நான் மாவட்ட கழகச் செயலாளராகப் பணியாற்றிய காலம் கடுமையான போராட்டக் காலம். தமிழ்நாடு எல்லைக்கருகில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைக் கிராமமான வண்டிப்பெரியாரில் முத்தமிழறிஞர் கலைஞர் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதல் மற்றும் சோழவந்தான் அருகில் உள்ள மதுரை மாநகரச் செயலாளராகப் பணியாற்றிய கு.திருப்பதி அவர்களின் சொந்தக் கிராமமான மட்டப்பாறை – ராமராசபுரத்தில் கழகப் பாடகர்கள் கரிகாலன், ராணி மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல், அதனை எதிர்கொண்ட மாவட்டச் செயலாளர் எஸ்.முத்து அவர்களின் வீரதீர செயல்கள்.
இந்த அராஜகத்தை அரங்கேற்றம் செய்த மட்டப்பாறை வெங்கட்டராமய்யரின் மகன் ராகவன். அந்த நிகழ்ச்சியில் என் தலைமையில் சென்ற மாணவர் அணி – எதிர்கொண்ட விதம் ஆகியவற்றை விவரித்தால், பல நூறு பக்கங்கள் நீண்டுகொண்டு செல்லும்.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.கழகத்தின் தாக்கம்!
எனினும், சில நிகழ்வுகளை இங்கே குறிப்பிடுவது இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருக்கும் என்பதோடு, நெருக்கடிகளும், அரசியல் அதிகார கோடரியால் கழகத்தைத் தடுத்துவிட வேண்டும், பிளந்துவிட வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்ட அரசியல் எதிரிகளையும் துரோகிகளையும், கழகத்தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எப்படித் துணிச்சலுடன் எதிர்கொண்டார் என்பதை விளக்குவதன்மூலம், இளைஞர்கள் எதிர்காலத்தில் எங்கனம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்கான விளக்கமாகவும் வியூகமாகவும் அமையுமென நம்புகிறேன்.
1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் இயக்கத்திலிருந்து பிரிந்து, தனிக்கட்சியான அ.தி.மு.க.வை உருவாக்கிய காலகட்டம் என்பது மிகவும் சோதனையான காலகட்டமாகும்.
பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், 1975ஆம் ஆண்டு, அவசரநிலையை நடைமுறைப்படுத்தினார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் கிஞ்சிற்றும் தயக்கமின்றி அதை உடனடியாக எதிர்த்தார். ஆத்திரமடைந்த பிரதமர் இந்திரா காந்தி, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசைக் காரணமின்றி கலைத்தார். ஆட்சியைக் கலைத்ததோடு, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட கழகத்தினுடைய நிர்வாகிகளும் செயல் வீரர்களும் கைதுசெய்யப்பட்டு, ‘மிசா’ சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்தமிழ்நாட்டில் கழக அமைப்புச் செயலாளர் தென்னரசு, மாவட்ட கழகச் செயலாளரான பொன் முத்துராமலிங்கம் ஆகிய நான், சொ.காவேரிமணியம், கு.திருப்பதி, அக்னிராஜ், சுப. தங்கவேலன், காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமி, திண்டுக்கல் தம்பிதுரை, விக்ரமாதித்தராஜன், ஆழ்வார்புரம் ராமச்சந்திரன், சாத்தூர் பாலகிருஷ்ணன், ராமநாதபுரம் சேக் சுல்தான், மண்டபம் அகமதுதம்பி, ராமேஸ்வரம் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் வே.தங்கபாண்டியன், துரை எழில்விழியன், உலுத்திமடை சுந்தரராசன், ராஜபாளையம் ஆதிநாராயணன், கொடைக்கானல் மேத்தா, முதுகுளத்தூர் நடராசன், விருதுநகர் குட்டை ரத்தினம், திருச்சுழி பாலச்சாமி, சிவகங்கை வழக்கறிஞர் சண்முகம், பாண்டி, பரமக்குடி அரவாசன், அற்புதம், சொக்கலிங்கம், தேவகோட்டை காசிம், சிவகங்கை பாம்பே நாராயணன், திருஞானம், பழக்கடைப் பாண்டி, மானாமதுரை வாஹித் மற்றும் கழக முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ‘மிசா’ சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
விசாரணையின்றி, சிறைக் கொடுமைகளை அனுபவித்த தொண்டர்கள், ஓராண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, 1977ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்த சட்டமன்றத் தேர்தலில், எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து, அவசரகால பிரகடனம், திரும்பப் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1978 ஆம் ஆண்டு திருமதி இந்திரா காந்தி தமிழ்நாட்டுக்கு முதன்முதலாக வருகைதந்தார். மதுரை மாநகரத்திற்கு முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனையறிந்த முத்தமிழறிஞர் கலைஞர், ஜனநாயகத்தின் குரல்வளையை அவசரகால நிலைமைப் பிரகடனம் மூலம் நெறித்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வருகைதரும் இந்திரா காந்திக்கு பொன்.முத்துராமலிங்கம் தலைமையில் மதுரை மாநகரில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அறிவித்தார். முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய நாளன்று. நாங்கள் மதுரை மாநகர் தெற்குவாசல் காவல் நிலையம் அருகில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென முடிவுசெய்யப்பட்டு, அன்றைய காவல்துறை மாவட்ட ஆய்வாளரிடம் அனுமதியும் பெற்றுக்கொண்டோம்.
அன்று காலை, இந்திரா காந்தி சுமார் 10 மணி அளவில் விமான நிலையத்தில் இருந்து ஊர்வலமாகத் தெற்கு வாசல் வழியாக அழைத்துச் செல்லப்படுவார் என்ற காங்கிரஸ் கட்சியினுடைய ஏற்பாட்டினையொட்டி எங்களுடைய கருப்புக்கொடி போராட்ட ஏற்பாடுகளைத் தெற்கு வாசல் காவல் நிலையம் அருகில் செய்துவந்தோம். பல்லாயிரக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்வீரர்களும் செயல் வீராங்கனைகளும் தெற்கு வாசல் சந்திப்பில் கூடினர்.
பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் திரண்ட திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கையில் கருப்புக்கொடிகளுடன் ‘ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்த இந்திரா காந்தியே திரும்பிப்போ’ என்ற முழக்கத்தோடு ‘கலைஞர் வாழ்க’ என்ற முழக்கத்தையும் இணைத்து, விண்ணதிர முழக்கங்களைத் தொய்வின்றி எழுப்பினோம். இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்ற தெற்கு வாசல் வந்து சேர்வதற்கு முன்னர், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சிலர், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டக் கூட்டத்தினர் மீது சோடா புட்டிகளை வீசி, கலவரத்தைத் தொடங்கிவைத்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டத்தில் சோடா பாட்டில் வீசியதால், காயமடைந்த தி.மு.க.வின் செயல்வீரர்களும் செயல்வீராங்கனைகளும் ஆத்திரமடைந்து, சோடா புட்டிகள் வீசிய காங்கிரஸ்காரர்களைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், திருமதி இந்திரா காந்தி அம்மையார் திறந்த ஜீப்பில் அழைத்துவரப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பழ.நெடுமாறன் அவர்களும் திருமங்கலம் என்.எஸ்.வி. சித்தன் அவர்களும், சித்தையன்கோட்டை அப்துல் காதர் அவர்களும் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் வந்த ஜீப்பில் உடன் வந்தனர். ஜீப்பை சுற்றிவந்த காங்கிரஸ் தொண்டர்கள், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க தொண்டர்களைத் தாக்க முற்பட்டபொழுது, கலவரம் வெடித்தது. காவல் துறையினர் தடியடி நடத்தினர். திருமதி இந்திரா காந்தி சென்ற ஜீப் அவருக்காகப் போடப்பட்ட அலங்கார வளைவில் மோதியது. பின்னர், கலவரம் உச்சகட்டத்தை அடைந்தது. காவல் துறையினரின் தாக்குதலால், 200-க்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் காயமடைந்தனர்.
இந்தக் கலவரங்களுக்கு மத்தியில், திருமதி இந்திரா காந்தி அம்மையார் காவல் துறையின் கடுமையான பாதுகாப்போடு அழைத்துச்செல்லப்பட்டார். கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்த தெற்கு வாசல் பகுதி முழுமையும் கலவர பூமியாக மாறி, கோரமாக க் காட்சிதந்தது. இந்தச் சூழ்நிலையில், சுமார் மாலை 6 மணி அளவில் துப்பாக்கிகளும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் ஏந்திய பெரும் போலீஸ் ஆயுதப்படை என் வீட்டைச் சுற்றிவளைத்து என்னைக் கைதுசெய்தனர். இதே போன்று கழக அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.தென்னரசு அவர்களையும், மாநகர் செயலாளர் சொ.காவேரிமணியம் அவர்களையும் மற்றும் கழகத்தினுடைய முன்னோடிகளையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் எங்கள்மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டது. அது மட்டுமல்ல, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் முதல் எதிரியாகச் சேர்க்கப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் விடுவிக்கப்பட்டார். நாங்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டோம். அதன் பின்னர், மேல்முறையீட்டு மனுமூலம் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதுதான் இந்த கருப்புக்கொடி நிகழ்ச்சியினுடைய சுருக்கமான வரலாறு.
இதுபோன்ற மிகப்பெரிய போராட்டங்கள் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை இந்திய அளவில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மாற்றிக் காட்டிய பெருமை முத்தமிழறிஞர் கலைஞரையே சாரும். எனவே, நீண்ட வரலாற்று வழித்தடத்தை உள்ளடக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கம், தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சியாக இருப்பினும், இந்த இயக்கத்தின் பணி என்பது, காலச் சுழற்சியில் எல்லையற்றது. எண்ணற்ற கால மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழ் இனத்தின் தனித்தன்மைகளையும், உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பையும் தொடர்ந்து பாதுகாக்கும் அரணாகவும் அகழியாகவும் இருப்போம்.


