ஆ.கோபண்ணா

1885ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ், படிப்படியாக நாட்டின் விடுதலையைப் பெறுதல் என்கிற இலட்சியத்தை நோக்கித் தனது பயணத்தை மேற்கொண்டது.

சமூக நீதியை இலட்சியமாகக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சி, 1920 முதல் 1936 வரை சென்னை மாகாணத்தை ஆட்சி செய்துவந்தது. நாடெங்கும் விடுதலை வேட்கை மேலோங்கி இருந்த காலகட்டத்தில், 1936 தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஜஸ்டிஸ் கட்சியைத் தோற்கடித்து, பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.
1936 தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஜஸ்டிஸ் கட்சி மறைந்து, பெரியாரின் தலைமையில் சுயமரியாதை இயக்கமாக திராவிடர் கழகமாக பிற்காலத்தில், அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகமாக பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று, திராவிட இயக்கம் வளர்ந்தது. நீதிக்கட்சியின் மறு வடிவமாகவே திராவிட இயக்கத்தை அனைவரும் பார்த்தனர். இதில் நீதிக்கட்சியின் நீட்சியே, திராவிடர் கழகமும் தி.மு.க.வும்.
1940ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகக் காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், தமிழகக் காங்கிரசில் ‘காமராஜ் சகாப்தம்’ உருவாக ஆரம்பித்தது. தமிழக காங்கிரஸ் கட்சியினர் இராஜாஜி தலைமையில் ஒரு பிரிவினரும் சத்தியமூர்த்தி தலைமையில் ஒரு பிரிவினரும் செயல்பட்டுவந்தார்கள். இதில், இராஜாஜிக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை செயல்பட்டுவந்தது.
இந்தப் பின்னணியில், காமராஜர் அரசியலில் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்துவந்த நேரத்தில், பெரியாரும் அண்ணாவும் அவரை வலிய ஆதரித்துப் பிரச்சாரம் செய்தனர். அந்த வகையில், அண்ணா அவர்கள் “கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது!’ என்ற கட்டுரையைத் ‘திராவிட நாடு’ இதழில் எழுதினார்.
அதேபோல, 1946ல் காந்தியடிகள் தமிழகம் வருகை புரிந்த சமயத்தில் ஏற்பட்ட சர்ச்சையில், காமராஜரை ஆதரித்து அண்ணா அவர்கள் 19.02.1946 அன்று திராவிட நாடு இதழில், “காமராசரே! கவலையைக் கொஞ்சம் துடைத்துக்கொண்டு பாரும், ஊரெங்கும் தோன்றியுள்ள கருப்புச்சட்டைப் படையை! தமிழனின் கண்ணீரைத் துடைக்கும் பணியே அந்தக் கருஞ்சட்டைப் படைக்கு! கண்ணீர் துடைக்கப்படும்!” என்று எழுதியது, வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
1954 ஏப்ரல் 13 அன்று, தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் பொறுப்பேற்ற அன்றே அவரை ஆதரித்து, ‘விடுதலை’யில் தலையங்கம் எழுதியவர் தந்தை பெரியார். காமராஜர் ஆட்சிசெய்த ஒன்பதரை ஆண்டுக்காலமும் அவரைப் பெரியார் ஆதரித்தார்.
1955ல் குடியாத்தம் தேர்தலில் காமராஜர் போட்டியிட்டபோது, காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்காத நிலையில், தானே முன்வந்து தேர்தலில் காமராஜரைப் பெரியார் ஆதரித்தார்.
அதே போல, அண்ணாவும் ‘குணாளா..!, குலக்கொழுந்தே..!’ என்று வாஞ்சையோடு கட்டுரை எழுதினார். பெரியார், அண்ணா ஆகியோர் எந்த வகையில் பெருந்தலைவரை ஆதரித்தார்களோ, அதில் எள்ளளவும் குறையாமல் கலைஞரும் காமராஜரை ஆதரித்தார்.
தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் இருந்தபோது, 1955ல் இராமநாதபுரத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டபோது, உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டார். அதை அன்றைய எதிர்க்கட்சியின் தலைவராக இருந்த அண்ணா அவர்கள், 11-12-1955 திராவிட நாடு இதழில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

“சேரிகள், பரதவர் குடில்கள், பாட்டாளிகளின் குடிசைகள், உழவர் உழன்றுகிடக்கும் குச்சுகள், இவையாவும் நாசமாகிவிட்டன. அந்த உத்தமர்களிலே நூற்றுக்கணக்கானவர்கள் மாண்டுபோயினர். மீதம் இருப்பவர்களுக்கு வீடில்லை, வயலில்லை. உயிர் இருக்கிறது. உள்ளத்தில் திகைப்பின்றி வேறெதுவும் இல்லை.
ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அவர்கள், மத்தியில் இருக்கிறார். பொறுப்புணர்ந்த ஆட்சி முதல்வர் இருக்கவேண்டிய இடம். ஆம். அங்கு, பெரிய பெரிய அதிகாரிகள் புடைசூழ இருக்கிறார். பெரு நாசத்துக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
இதை எண்ணும்போது, கொந்தளிக்கும் கொடுங்கடலே! குடும்பங்களை அழித்த பேய்க்காற்றே! மக்களை அழிவிலே மூழ்கடித்த பெரு மழையே! அழிவினை இரக்கமின்றி எம்மீது ஏவினீர். கர்வம் கொள்ளற்க, அழிவு ஏவினீர். இதோ எமக்கு ஆறுதல் அளிக்க, எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரைக் காணுகிறார்; தனது கண்ணீரைச் சிந்துகிறார். அழிவுசூழ் இடங்களில் ஆறுதலை அள்ளித் தருகிறார்.
கோட்டையிலே அமர்ந்துகொண்டு உத்தரவு போடும் முதலமைச்சர் அல்ல இவர். ‘ஆண்டவன் கோபத்தாலே நேரிட்ட சோதனை’ என்று பேசிடும் பூசாரியும் அல்ல. ‘நமது ஆட்சியின்போது, இந்த அழிவு வந்துள்ளதே என்று உள்ளம் பதைத்துப் பறந்துவந்தார். எமக்கு வாழ்வளிக்க என்று மக்கள் எண்ணி வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறார்கள்.
தம்பி! சொல்லத்தானே வேண்டும். முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி சுண்டு நாம் பெருமைப்படுகிறோம்.
அளவு குறைவு, முறை குறையுடையது’ என்று நிபுணர்கள் பேசக் கூடும், நாலாறு மாதங்களுக்குப் பிறகு. ஆனால், முதலமைச்சரின் இதயம் தூய்மையானது. ஏழை எளியோர்பால் அவர் இது சமயம் காட்டிய அக்கறை தூய்மையானது என்பதை எவரும் எந்நாளும் மறந்திட மாட்டார்கள், மறந்திடவும் இயலாது!” என்று குறிப்பிட்டதை இன்றைக்கு நினைத்தாலும் அன்றைக்கு நிலவிய அரசியல் நாகரிகம் குறித்து பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியாது.
1959ல் சென்னை மாநகராட்சி மன்றம் தி.மு.க.வின் வசம் வந்தது. பெருந்தலைவர் காமராசர் தான் அப்போது தமிழக முதலமைச்சர். மாநகராட்சி மன்ற மேயர் தி.மு.க.காரர் ஆயிற்றே என்பதற்காக முதல்வர் காமராசர்; மாநகராட்சிப் பணியைப் புறக்கணித்ததில்லை.
மாநகராட்சியின் திட்டங்களுக்குத் தேவையான நிதியை வழங்கவும் அவர் தயங்கியதில்லை.
அந்த நேரத்தில், மாநகராட்சி சார்பாக சென்னையில் அண்ணா சிலையை நிறுவிட மாநகராட்சி மன்றம் ஏற்பாடுகளைச் செய்தது. ஆனால், அண்ணா அவர்கள், ‘தனக்குச் சிலை வேண்டாம்’ என்று கண்டிப்புடன் கூறினார். அப்படியானால். ‘காமராசருக்குச் சிலையை அமைத்திடுங்கள்’ என்று அ.பொ.அரசு. முனுசாமி மற்றும் மாநகராட்சி தி.மு.க. உறுப்பினர்களுக்கு அண்ணா கட்டளையிட்டார்.
சென்னை மாநகராட்சி சார்பாக ஏற்கெனவே உருவாக்கப்பட்டு தயாராக இருந்த அண்ணாவின் சிலையை வைக்காமல்; அதே இடத்தில் முதல்வர் காமராசர் சிலை 1961ல் அமைக்கப்பட்டது. பிரதமர் நேருவை அழைத்து, அந்தச் சிலை திறப்புவிழா விமரிசையாக நடத்தப்பட்டது.
‘உயிரோடு இருப்பவர்களின் சிலையைத் திறந்துவைப்பதில்லை’ என்ற உறுதியில் இருந்துவந்த பிரதமர் நேரு அவர்கள், அதனைத் தளர்த்திக்கொண்டு காமராசரின் சிலையைத் திறந்தார். இது, பெருந்தலைவர் காமராசரின் பெருமைக்கு மற்றுமொரு சான்றாகும்.
தி.மு.கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்டு. ஆனால், காமராஜர் மறைந்த உடனே ஓடோடி வந்து, மறைந்த தந்தைக்கு ஒரு மகன் செய்யவேண்டிய கடமைகள் என்னென்னவோ அவற்றையெல்லாம் செய்தவர் கலைஞர். சென்னை காந்தி மண்டபத்திற்கு அருகில், மறைந்த காமராஜருக்கு இறுதிச்சடங்குகள் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பிறகு,அங்கே நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டது.
விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த இல்லத்தைத் தமிழக அரசு வாங்கி, அரசு நினைவுச்சின்னமாக ஆக்கியது. கன்னியாகுமரியில் மணிமண்டபமும் திறந்துவைக்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாகத் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாட ஆணை பிறப்பித்து, அதற்கு நிதி ஒதுக்கியவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், 05.10.2000 அன்றைய முரசொலியில் எழுதிய கடிதத்தில், “காமராசர் அவர்கள் அப்போது முதலமைச்சரல்ல. நான் முதலமைச்சராக இருந்த காலம், அந்த நேரத்தில், பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு சற்று உடல்நலம் சரியில்லை, நடக்க முடியவில்லை. அந்த நேரத்தில், என் மகன் மு.க. ஸ்டாலினுக்குத் திருமணம். அழைப்பிதழை எடுத்துக்கொண்டு காமராசர் வீட்டிற்குச் சென்றேன். படுக்கையில் இருந்தவாறே அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டார்.
அழைப்பிதழ் கொடுத்திருக்கீங்க. ஆனால், என்னால் வர முடியாதே. என் உடல்நிலையைப் பார்த்தீங்களா?’ என்று கேட்டார்.
எப்படி இருந்தாலும் நீங்கள் வரவேண்டும். தாலி அணிவிக்கின்ற நேரத்திலாவது நீங்கள் வந்து, ஒரு வார்த்தை வாழ்த்திவிட்டுச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
‘தலைவர் அவர்களால் திருமண மேடை வரை நடந்து வர முடியாது. அவர் மேடைக்கு வர ஏதுவாக வழியமைத்துக் கொடுக்க முடியுமா?’ என அவருடன் இருந்தவர்கள் கேட்டார்கள்.
திருமண மண்டபம் நமக்குத் தெரிந்த மண்டபம் இல்லை. சென்னையிலே பழைய மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள பத்மாவதி திருமண மண்டபத்தில்தான் திருமணம் என்று சொன்னேன்.
‘அந்த மண்டபத்திற்குள் செல்வதென்றால் பந்தல் நடுவில் நுழைந்து செல்ல வேண்டும். தலைவர் இருக்கும் நிலையில் நடக்க முடியுமான்னு தெரியலையே?” என்றார்கள்.
அய்யா, உங்களுக்காக மணமேடை வரை கார் செல்ல ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் வந்தால் போதும் என்றேன்.
இப்படியாக என் மகன் திருமணத்திற்கு வருவதற்கு அய்யா அவர்கள் ஒப்புக்கொண்டார்.
திருமணத்தன்று, மணமேடை வரை கார் செல்வதற்கு வழி அமைத்து, வேறு எந்த காரும் உள்ளே நுழைய அனுமதிக்காமல், ஒரேயொரு கார்தான் மணமேடை வரை வந்தது. அதில் காமராசர் வந்தார். வாயார வாழ்த்தினார்; சென்றார்.
இப்படி ஒரு குடும்பப் பாச உணர்வு எனக்கும் அவருக்கும் எப்போதும் உண்டு” என்று குறிப்பிட்டதன் மூலம் தி.மு.க.வும் காங்கிரசும் வெவ்வேறு கொள்கை மாறுபட்ட இயக்கங்களாக இருந்தாலும் தமிழகம் நலன்சார்ந்து உழைத்த பெருந்தலைவர் காமராஜர் புகழ்பாடுவதில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் எந்தளவுக்கு மனமாச்சரியம் இன்றி கருத்துகளைக் கூறினார்கள் என்பது வரலாற்று ஏடுகளில் இன்றைக்கும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு மின்னிக்கொண்டிருக்கின்றன.
திராவிட இயக்கமும் – தேசிய இயக்கமும் அரசியல் ரீதியாகக் கடுமையாக மோதிக்கொண்டிருந்த காலகட்டத்தில், 1969ல் அண்ணா மறைவிற்குப் பிறகு, பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலைஞர், மனதார வாழ்த்தி, அரசியல் நாகரிகம் படைத்தார்.
1969ல் காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் 1971 சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் தி.மு.கழகத் தலைவர் மு.கருணாநிதி அவர்கள் கூட்டணி அமைத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
அதற்குப் பிறகு அமைந்த ஒன்றிய காங்கிரஸ் அரசோடு தி.மு.க அரசுக்கு நல்லிணக்கம் இருந்தது. இதற்குப் பிறகு 1980ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது. சென்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்திரா காந்தி அவர்களை மேடையில் வைத்துக்கொண்டு, கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று தமிழிலும், We want stable and strong Government at Centre, We don’t want Thamasha at Delhi என்று பேசிய சொற்கள் இன்றைக்கும் வரலாற்றில் கல்வெட்டுகளாகப் பதிந்திருக்கிறது.
எந்த நேரத்தில், எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதில் கலைஞருக்கு தொலைநோக்குப் பார்வை இருந்தது. அவர், அரசியலில் நீண்டகாலம் அசைக்க முடியாத சக்தியாக இருந்ததற்குக் காரணம், அவர் எடுத்த முடிவுகள்தான்.

அதே போல, 2004ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அன்னை சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தது. அன்று, சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அன்னை சோனியா காந்தி அவர்களை மேடையில் வைத்துக்கொண்டு கலைஞர் அவர்கள், “தியாகத் திருவிளக்கே, அன்னை சோனியா காந்தி அவர்களே, வருக! வருக…!” எனப் பேசியதை எவரும் மறந்திட இயலாது. அதையொட்டி நடைபெற்ற தேர்தலில், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் அன்னை சோனியா காந்தி அவர்களோடு இணைந்து பெரும் பங்காற்றியவர் கலைஞர் அவர்கள். இவர்கள் இருவரிடையே இருந்த நல்லிணக்கத்தின் காரணமாக 2009 மக்களவை தேர்தலிலும், மகத்தான வெற்றியைப் பெற்றது. அதற்குக் காரணம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எப்படி தொலைநோக்குப் பார்வையோடு முடிவுகளை எடுப்பாரோ, அதைப்போலவே தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்து, மகத்தான வெற்றிகளைப் பெற்றார்.
அதேபோல, 2024 மக்களவைத் தேர்தலிலும், புதுச்சேரியையும் சேர்த்து நாற்பதும் நமதே என்று கூறுகிற வகையில் 40 இடங்களில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பா.ஜ.க. காலூன்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை என இந்த அமைப்புகளோடு கூட்டணி அமைத்து, தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்துவிடலாம் என்ற கனவை மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது சமயோஜித அணுகுமுறையின் காரணமாகத் தகர்த்து, முறியடித்து வெற்றிபெற்று வருகிறார்.
கடந்த காலங்களில், கலைஞர் ஆட்சி செய்த காலம் வேறு. ஆனால், நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிற பாசிச ஆட்சியின் கீழ் ஒரு மாநில அரசு செயல்படுவது அவ்வளவு எளிதானதல்ல. பா.ஜ.க.வின் தமிழக விரோதப்போக்கை தோலுரித்துக் காட்டுகிற வகையில் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசியல் பேராண்மையோடு துணிவான கருத்து மோதலை நடத்திவருகிறார். இந்தியாவில் எந்த முதலமைச்சரும் பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலை எதிர்த்துப் பேசாத நிலையில், திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசியல் பேராண்மையோடு துணிவாகத் தமது கருத்துகளைப் பொதுவெளியில் கூறிவருகிறார். இதற்குக் காரணம், வகுப்புவாதத்திற்கு எதிரான முற்போக்குச் சிந்தனை கொண்ட கட்சிகள் தான் தி.மு.க. தலைமையில் செயல்பட்டுவருகின்றன.
கோவையில் நடைபெற்ற தி.மு.க. விழாவில் பங்கேற்க வந்த தலைவர் இராகுல் காந்தி அவர்கள், விமான நிலையத்திலிருந்து காரில் பயணிக்கிற போது, இனிப்புக் கடையைப் பார்த்து இறங்கி, சாலையின் நடுவே இருக்கிற தடுப்புச் சுவரைத் தாண்டி, கடைக்குச் சென்று பணத்தை அவரே கொடுத்து. இனிப்பு வாங்கி மேடையில் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கி, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்ட காட்சி, காணக் கண்கொள்ளாக் காட்சியாகும். இது, தி.மு.க. – காங்கிரஸ் கட்சி நண்பர்கள் என்றென்றும் மறக்க இயலாத ஓர் அற்புதமான நிகழ்வாகும். இதைத் தமிழக மக்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்தார்கள். கூட்டணி என்றால் இப்படித்தானே இருக்க வேண்டுமென்று கூறி புளகாங்கிதம் அடைந்தார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை தலைவர் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகிய இரு தலைவர்களிடையே இருக்கிற நல்லிணக்கத்தை மக்கள் விரும்புகிறார்கள். ஆதரிக்கிறார்கள்.

தொடர்ந்து, இக்கூட்டணி தொடர வேண்டுமென்று மனதார ஆசைப்படுகிறார்கள். அந்த நல்லிணக்கம்தான் தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளை வலிமைபெறச் செய்கிறது.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக, மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, அதனுடைய பலனை மக்களுக்கு நேரடியாகப் போய்ச்சேருகிற வகையில் மிகச் சிறப்பாக ஆட்சி செய்துவருகிறார். தமிழக மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாகச் செயல்பட்டுவருவதால், மக்களிடையே அமோக ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல் உறுதியாக இருக்கிறது.
இக்கூட்டணியை எதிர்த்து இதுவரை எந்தக் கூட்டணியும் முழுமையாக அமையவில்லை. அ.தி.மு.க.வை நிர்பந்தப்படுத்தி, பா.ஜ.க கூட்டணி சேர்ந்ததையடுத்து, இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க முன்வரவில்லை.
எனவே, இத்தகைய அரசியல் சூழலில் தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டணிக் கட்சிகளைத் தோழமையோடு அரவணைத்துச் செல்கிற காரணத்தால், இக்கூட்டணி கட்டுக்கோப்போடு செயல்பட்டுவருகிறது. இக்கூட்டணியில் இருக்கிற நல்லிணக்கம் வேறு எந்தக் கூட்டணியிலும் உருவாக வாய்ப்பில்லை. இந்தக் கட்டுக்கோப்பிற்குக் காரணம், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஒருமித்த கொள்கையும் சித்தாந்தமும்தான். இத்தகைய காரணங்களால், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில், மக்களின் பேராதரவோடு மீண்டும் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் நல்லாட்சி நிச்சயம் அமையப் போகிறது.
அதிமுக தன்னுடைய சுயத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – திருமாவளவன் விமர்சனம்


