spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க.வை ஏன் வீழ்த்த முடியவில்லை?

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வை ஏன் வீழ்த்த முடியவில்லை?

-

- Advertisement -

நக்கீரன் கோபால்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க.வை ஏன் வீழ்த்த முடியவில்லை?

அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து தற்போதைய முதல்வர், திராவிட மாடல் நாயகர் மு.க.ஸ்டாலின் காலம் வரை ‘தி.மு.க.வை வீழ்த்திவிடுவோம்’ என்று பலரும் கொக்கரிக்கிறார்கள்; சவால் விடுகிறார்கள். ஆனால், அவர்கள்தான் காலத்தில் கரைந்துபோனார்களே தவிர, தி.மு.க எப்போதும் வலிமையுடன் நிற்கிறது. தி.மு.க.வை வீழ்த்த முடியாததற்கு என்ன காரணம்? எது காரணம்? யார் காரணம்?

we-r-hiring

இந்த இயக்கத்தைத் தோற்றுவித்த அறிஞர் அண்ணாவின் கொள்கை, சித்தாந்தம்தான் காரணம், அந்த இரண்டிலிருந்தும் கொஞ்சமும் பின்வாங்காமல், அரசியல் பயணத்தை உறுதியுடன் தொடர்ந்த கலைஞரின் பேராற்றலும் பெரும் உழைப்பும், மதிநுட்பமும்தான் ஆகப்பெரிய காரணம்.

நான் அறிந்த அண்ணன் கலைஞர்

1988ல் தமிழ்நாட்டில் கவர்னராக இருந்த பி.சி.அலெக்சாண்டர் ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது, ஏப்ரல் 20ஆம் தேதி, நக்கீரன் வார இதழ் தொடங்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. ஜெ-அணி, ஜானகி அணி என்று மல்லுக்கட்டிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் தி.மு.க.வையும் தொண்டர்களையும் உயிர்ப்புடன் வைத்திருந்து, தமிழினம், மொழி, மாநில உரிமை, ஈழத் தமிழர் ஆதரவு போன்றவற்றில் உறுதியான நிலைப்பாட்டினை எடுத்து, கட்சியினருக்கு உத்வேகம் அளித்து, 1989ல் மீண்டும் முதல்வரானார் கலைஞர், எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, கலைஞரின் அயராத உழைப்பு, சுறுசுறுப்பு, இதெல்லாம் கட்சியின் தொண்டர்களுக்கும் உற்சாக டானிக்காக இருந்தது. எம்.ஜி.ஆரின் ஆட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான நகராட்சிகள், ஊராட்சிகளைக் கைப்பற்றியது. தி.மு.க. உடன்பிறப்புகள் உற்சாகமானார்கள்.

கோட்டையில் யார் கொடி பறந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் மன்றத்தில் தி.மு.க. கொடிதான் பட்டொளி வீசிப்பறந்தது. பறக்கவைத்து, எம்.ஜி.ஆரைப் பதறவைத்தவர் கலைஞர்.

மக்கள் நலன், மாநில நலன் சார்ந்தே கலைஞரின் அரசியல் பயணம் தொடர்ந்ததால், 89ல் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியான முன்னேற்றத் திட்டங்களைக் கொண்டுவந்து, தமிழ் மக்களையும் மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கவைத்தார்.

உண்மையான எதிர்க்கட்சி

இந்த நேரத்தில்தான், 1991ல் தமிழ் மண்ணில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைப்பழி தி.மு.க. மீது விழுந்தது. கட்சியின் சொத்துகள் சூறையாடப்பட்டன. கழகத்தின் முன்னோடிகள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. கழகத்தின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’, கருங்காலிகளால் கடும் தாக்குதலுக்குள்ளானது. அப்போது, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் செயல்பட்டுவந்த நக்கீரன் அலுவலகமும் தாக்கப்பட்டது.

ராஜீவ் மரணத்துக்குப் பிறகு 1991ல் நடந்த தேர்தலில், படுதோல்வியைச் சந்தித்தது தி.மு.க. கலைஞர் ஒருவர் மட்டும் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். ‘பொதுத் தேர்தலின்போது, சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எழும்பூர் தொகுதிக்கு சில மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டு, பரிதி இளம்வழுதி எம்.எல்.ஏ. வானார். ஆனால், கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் கலைஞர். ஒரே ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ. வாக சட்டமன்றத்தில் பரிதி செயல்பட்டார்.

‘தி.மு.க. வீழ்ந்துவிட்டது’ என அப்போதும் கொக்கரித்தார்கள், இன எதிரிகள்.

சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இருந்தது. எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரசின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் இருந்தார். ஆனால், மக்கள் மன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சியாகத் தி.மு.க. செயல்பட்டது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க.வை ஏன் வீழ்த்த முடியவில்லை?

நக்கீரனுக்கு ஆதரவு

1991ல் செல்வி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததிலிருந்தே நக்கீரனுக்கு எதிரான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டார். ‘வாட்டர்கேட் ஊழல் செய்தியை அம்பலப்படுத்தியதற்காக, அப்போது நக்கீரன் ஆசிரியராக இருந்த துரையும், நிர்வாக ஆசிரியராக இருந்த நானும் நிருபராக இருந்த காமராஜும் கைதுசெய்யப்பட்டோம். நக்கீரனுக்கு பேப்பர் சப்ளை செய்தவர்கள், பிரின்டிங் இங்க சப்ளை செய்தவர்கள் எல்லாம் ஆட்சியாளர்களால் மிரட்டப்பட்டனர். அடக்குமுறையின் உச்சமாக, நக்கீரன் பிரின்டராக இருந்த அய்யா கணேசன் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்ததும் சிறைக் கொடுமைகளின் தாக்கத்தால் மரணமடைந்தார், அய்யா கணேசன்.

ஜெயலலிதா ஆட்சியின் கொடுங்கோன்மையின் உச்சமாக நடந்த இந்த உயிர்ப் பலிக்கு நீதி கேட்டு, சென்னை சேத்துப்பட்டில் உள்ள உலகப் பல்கலைக்கழக மையத்தில் நக்கீரன் சார்பில் கண்டனக் கூட்டம் நடந்தது. அப்போது, தி.மு.க.வையும் விமர்சித்து நக்கீரனில் செய்தி வந்துகொண்டிருந்தபோதும், கண்டனக் கூட்டத்திற்குத் தலைமையேற்க சம்மதம் தெரிவித்தார். அண்ணன் கலைஞர்.

அவரின் தலைமையில் நடந்த அந்தக் கண்டனக் கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களான சி.பி.ஐ மாணிக்கம், சி.பி.எம். என்.சங்கரய்யா, காங்கிரஸிலிருந்து க.சுப்பு, ‘இந்து’ என்.ராம் ஆகியோர் கலந்துகொண்டு, ஜெயாவின் அராஜக ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். சட்டமன்றத்தில் கூட்டணிக் கட்சியே எதிர்க்கட்சியானதால், மக்கள் மன்றத்தில் வலிமையான எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் ஆற்றல், அண்ணன் கலைஞருக்கு மட்டுமே இருந்தது.

டான்சி ராணி எதிர்ப்பு

சட்டமன்றத்தில் தனது கட்சிக்கு ஒரு எம்எல்ஏ-தானே என சோர்ந்துவிடாமல், மக்கள் மன்றத்தில் ஜெயா ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள், தலைவிரித்தாடிய ஊழல்கள் ஆகியவற்றை தினம்தோறும் ‘முரசொலி’யில் எழுதி, உடன்பிறப்புகளை உற்சாகமாகவே வைத்திருந்தவர் கலைஞர். அப்போது, யாரைப் பார்த்தாலும் யாரிடம் பேசினாலும் ஜெயலலிதாவை ஜான்சிராணி, வீரமங்கை வேலுநாச்சியார் என ஜால்ரா போட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த ஜால்ரா சத்தத்திற்கிடையில்தான் சத்தமே இல்லாமல், சென்னை கிண்டியில் உள்ள அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தைத் தனது பெயரிலும் தனது உடன்பிறவா சகோதரி சசிகலா பெயரிலும் 1992ல் வாங்கினார். ஜெயலலிதா.

அந்த ஜான்சிராணியைத்தான் ‘டான்சி ராணி’ எனக் கலைஞர் அழைக்கத் தொடங்கினார். தி.மு.க. முன்னெடுத்த டான்சி வழக்கு, ஜெயாவை ரொம்பவே துளைத்தெடுத்தது. அதுபோலவே, சொத்துக் குவிப்பு வழக்கில், கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் தி.மு.க. சட்டப் போராட்டம் நடத்தி, ஜெயலலிதாவையும் சசிகலாவையும் கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா ஜெயிலுக்கு அனுப்பியது.

இப்படி ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆருக்கும் ஜெயலிதாவுக்கும் எப்போதும் சிம்ம சொப்பனமாக இருந்தது. தி.மு.க.தான். தி.மு.க. மட்டும்தான்.

1993ல் வைகோ தலைமையில் தி.மு.க.வின் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் கட்சியிலிருந்து வெளியேறியதால், தி.மு.க.வில் மிகப்பெரிய சூறாவளி சுழன்றடிக்க ஆரம்பித்தது. கருப்பு சிவப்புக் கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா அறிவாலயம் இதெல்லாமே தங்களுக்குத்தான் சொந்தம் என வைகோ அணியினர் அணிதிரண்டனர். தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் கிளம்பினார். வைகோ.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க.வை ஏன் வீழ்த்த முடியவில்லை?

கட்சியின் தலைமைப் போராளி கலைஞரும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் கிளம்பி, மாவட்ட நிர்வாகிகளையும் அடிமட்டத் தொண்டர்களையும் தன்பக்கம் தக்கவைத்தார். கட்சியையும் சின்னத்தையும் கொடியையும், அண்ணா அறிவாலயத்தையும் காப்பாற்ற, கட்சியின் பொதுக்குழுவை தஞ்சாவூர் குருதயாள் சர்மா கல்யாண மண்டபத்தில் கூட்ட ஏற்பாடுகளைச் செய்தார்.

பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களும் மாவட்டச் செயலாளர்களும், தங்கள் பக்கம் நிற்பதை பத்திரிகையாளர்கள் முன்பே, அவர்களை உறுதிமொழிப் பத்திரத்தில் ‘அஃபிடவிட்’ கையெழுத்திடச் செய்து; தனது மதிநுட்பத்தால் தி.மு.க.வைக் காத்தார்.

தஞ்சையில் பொதுக்குழுவைக் கூட்டி, பெரும்பான்மையான நிர்வாகிகளும் தொண்டர்களும் தி.மு.க. பக்கம்தான் உறுதியாக நிற்கிறார்கள் என்பதை அஃபிடவிட் ஆதாரத்துடன் நிரூபித்ததுடன் நின்றுவிடவில்லை கலைஞர், கழகத்திற்கு எதிராகச் சிறு சம்பவங்கள் நடந்தாலோ, செய்திகள் வந்தாலோ உற்றுக் கவனித்து, அதற்கு உடனே பதில் சொல்வார்.

அதற்கு ஒரு சம்பவத்தையும், நக்கீரனில் வந்த செய்தியையும் குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும். அப்போது, போது, தஞ்சை தஞ்சை மாவட்டச் செயலாளராக அண்ணன் கோசி.மணி இருந்தார். கலைஞரின் குறாவளி சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரலில், கும்பகோணத்தில் நடக்கும் கோ.சி. மணியின் இல்லத் திருமண நிகழ்ச்சியும் இருந்தது. இதற்காக, சுலைஞர் சென்னையிலிருந்து திருவாரூர் சென்று, சில மணி நேரம் ஓய்வுக்குப் பிறகு, குடவாசல் வழியாக கும்பகோணம் செல்வதாகப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குடவாசலில் கலைஞருக்கு எதிராக வைகோ அணியினர் கருப்புக் கொடி காட்டப்போவதாக நக்கீரனில் ஒரு துணுக்குச் செய்திதான் வெளியானது. இத்தனைக்கும் அப்போது முரசொலி பிரின்டரில்தான் நக்கீரன் அச்சாகிக்கொண்டிருந்தது.

அதிகாலை 4 மணிக்கே தினசரிகளையும் வார இதழ்களையும் படிக்கும் பழக்கம் உள்ளவர் கலைஞர் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில், நக்கீரனையும் படித்துவிட்டு, காலை 8.30-க்கு நக்கீரன் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டார் கலைஞர். காலையில் நக்கீரன் அலுவலகத்தை ஆசிரியர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த தம்பி கோவி. லெனின் தான் திறப்பார். அப்படி அவர் திறந்து ஒழுங்குப் பணிகளைச் செய்துகொண்டிருந்தபோது, தொலைபேசி மணி அடித்ததும் எடுத்து, “வணக்கம் நக்கீரன் சொல்லுங்க” என்றிருக்கிறார்.

“ஆசிரியர் கோபால் அல்லது இணை ஆசிரியர் இருக்காரா?”

“அவுங்க ரெண்டுபேரும் பத்து மணிக்குத்தான் வருவாங்க, நீங்க யாரு”

“நான் கருணாநிதி பேசுறேன்” என்றதும் படப்பாகி, வியர்த்துக் கொட்டியிருக்கிறது தம்பி கோவி.லெனினுக்கு.

“அய்யா சொல்லுங்கய்யா. அவங்க வந்ததும் சொல்லிடுறேன்.”

ஒண்ணுமில்ல, இன்னைக்குக் காலையில வந்த நக்கீரன்ல பெட்டிச் செய்தி ஒண்ணு வந்திருக்கு. அதுல 6ஆம் தேதி, நான் கும்பகோணம் போகும் வழியில் குடவாசலில் எனக்கு சுருப்புக்கொடி காட்டப்போறதா வந்திருக்கு. நான் உடனே எங்க மாவட்டத்துக்கிட்ட ‘கோ.சி.மணி 6ஆம் தேதியன்னைக்கா நான் வர்றேன்னு கேட்டேன்’. ‘இல்லண்ணே நீங்க 12ஆம் தேதிதான் வர்றீங்கன்னு சொன்னாரு. அதனால் கருப்புக் கொடி காட்டப்போற உங்க ஆளுங்ககிட்ட, 06ஆம் தேதி இல்ல 12-ஆம் தேதின்னு சொல்லிருங்க. ஏன்னா, 06ஆம் தேதி வந்து ஏமாந்துரக்கூடாதுல்ல?’ கலைஞர் இப்படிச் சொல்லி முடித்ததும், சப்த நாடியும் ஒடுங்கிப்போயிருந்த தம்பி, எனக்கு அவசரமாகத் தகவல் தெரிவித்தார். நானும் கலைஞரிடம் பேசி விளக்கம் அளித்தேன்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க.வை ஏன் வீழ்த்த முடியவில்லை?

பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ள பத்திரிகைளில், ஒரே ஒரு துணுக்குச் செய்திதான். அதற்குக்கூட எந்தளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் கலைஞர் என்பதை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கும். கலைஞரின் மதிநுட்பம், கட்சியைத் தனது உயிராக நேசித்த தன்மைக்கு இது சின்ன உதாரணம்தான்.

1991ல் ஒரே ஒரு சீட்டில் வெற்றி. 1996ல் அமோக வெற்றி. பர்கூரில் டான்சி ராணியைத் தோற்கடித்த வரலாற்று வெற்றி. இப்படித் தேர்தல்களில் வெற்றி – தோல்வி மாறி மாறி வந்தாலும், தனது அரசியல் பயணத்தில் சுணக்கம் காட்டியதே இல்லை கலைஞர்.

1993ல் கட்சிக்கு சோதனை வந்தபோது, கலைஞருக்கு உறுதுணையாக இளைஞரணியைப் புத்துயிர்ப்புடன் வழிநடத்தி, கட்சி அறிவிக்கும் போராட்டங்களை முன்னெடுத்தவர், அப்போதைய இளைஞரணிச் செயலாளரும் தற்போதைய முதல்வருமான அண்ணன் மு.க.ஸ்டாலின்.

1999ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு முன்பாக, குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்பதை பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் வலியுறுத்தி செயல்படுத்தினார், கலைஞர். அதன்படி, பிரச்சினைக்குரிய ராமர் கோயில் கட்டும் பணிகளைத் தொடங்கக்கூடாது என்பது கலைஞரின் அதிமுக்கியக் கோரிக்கை.

கலைஞர் போட்ட இந்த மூக்கணாங்கயிற்றால்தான், ‘ராமர் கோயில் விவகாரத்தில், கோர்ட் தீர்ப்பு வரும்வரை எந்த முன்னெடுப்பும் கூடாது என்பதை சங்பரிவாரங்களிடம் அழுத்தமாகச் சொன்னார், வாஜ்பாய். ஒன்றிய அமைச்சரவையில் தி.மு.க. இருந்தவரை, ராமர் கோயில் கட்டுவதைக் கிடப்பில் போட்டது, பா.ஜ.க. அதற்கடுத்து நடந்த அரசியல் மாற்றங்களால் பொடா என்னும் கொடிய அடக்குமுறை சட்டத்தைக் கொண்டுவந்தது பா.ஜ.க. அதே பாஜக ஆட்சியைக் கவிழ்த்து பா.ஜ.க.வின் தலைவர் – ஆட்சியின் பிரதமர் வாஜ்பாய் அவர்களைக் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார் செல்வி ஜெயலலிதா.

அப்படிப்பட்ட ஜெயலலிதா, பா.ஜ.க அரசு கொண்டுவந்த கொடிய பொடா சட்டத்தை அண்ணன் வைகோ, அண்ணன் நெடுமாறன், அண்ணன் சுபவீ ஆகியோர்மீது பாய்ச்சினார். என்மீதும் அந்தச் சட்டம் பாய்ந்தது. 252 நாட்கள் கொடும் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு வெளியே வந்தேன்.

அப்போது, பொடா சட்டத்தைக் கண்டித்தும் எனது விடுதலையை வலியுறுத்தியும், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் 2003ல் கலைஞர் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கண்டனக் கூட்டம் நடந்தது. காங்கிரஸ், சி.பி.ஐ. சி.பி.எம். ம.தி.மு.க. போன்ற கட்சிகள் அந்தக் கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டன.

2004 நாடாளுமன்றத் தேர்தலில், இந்தக் கட்சிகள் கூட்டணி அமைத்து, 40-க்கு 40 தொகுதிகளையும் வென்றன என்பது வரலாறு. இதுதான் தி.மு.க.வின் கொள்கை வலிமை.

தி.மு.க.வை வீழ்த்த புதிய புதிய எதிரிகள் புறப்பட்டு வந்துகொண்டே இருக்கிறார்கள். புதிய எதிரிகளையும் வீழ்த்தும் பேராற்றல் தி.மு.க.வுக்கு உண்டு. அண்ணா, கலைஞர் வழியில் கொள்கை வலிமைமிக்க தலைவராக அண்ணன் ஸ்டாலின் இருக்கிறார்.

மாநிலத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் முதன்மையானது – உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!

MUST READ