வாலாசா வல்லவன்


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்களின் நிர்வாக வசதிக்காகப் பல்வேறு மாகாணங்களை உருவாக்கினர். அந்த மாகாணங்கள் மொழியை அடிப்படையாகக்கொண்டு அமையவில்லை.
சென்னை மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகாவின் ஒரு பகுதி, ஒரியாவின் ஒரு சிறு பகுதி இணைந்த பகுதிகள் அடங்கி இருந்தன.
அனைத்திந்திய காங்கிரசுக் கட்சி 1920ல் மொழி அடிப்படையில் கட்சியைக் கட்டி அமைத்தது. தமிழ்நாடு காங்கிரசு, ஆந்திரக் காங்கிரசு, கேரளக் காங்கிரசு என்று இந்தியா முழுவதும் மொழி அடிப்படையில் கட்சியை அமைத்தது.
தமிழ் பேசும் பகுதிகள் சிலவற்றை காங்கிரசு கட்சி தமிழ்நாட்டின் வடக்கே ஆந்திர காங்கிரசிலும்,தெற்கே கேரள காங்கிரசிலும் இணைத்திருந்தது. சென்னை தலைநகரை தமிழ்நாடு காங்கிரசுக்கும் ஆந்திர காங்கிரசுக்கும் பொதுத் தலைநகராக்கியது. பிற்காலத்தில் சென்னை, ஆந்திரர்கள் உரிமை கொண்டாடுவதற்கு அதுவும் ஒரு காரணம் ஆகும்.
சென்னை மாகாணத்தில் இணைந்திருந்த ஆந்திரர்கள், தங்களுக்குத் தனி மாநிலம் வேண்டுமென நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்து வந்தனர். 1946 முதல் தமிழ்நாட்டின் வடக்கெல்லை, தெற்கெல்லை போராட்டங்கள் தொடங்கின.
இந்தியாவில் மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பதற்காக இந்திய அரசால் 1948ல் அமைக்கப்பட்டது தார் ஆணையம் ஆகும். 10.12.1948ல் அறிக்கை அளித்த தார் ஆணையம், இப்போதைக்கு மொழிவழி மாநிலப் பிரிவினை தேவையற்றது என்று கூறியது. மொழிவழி மாநிலப் பிரிவினை, இந்திய ஒற்றுமையைச் சிதைக்கும் என்று கூறியது. எப்போதாவது மாநிலங்கள் பிரிக்கப்படும்போது, 70 விழுக்காடு மக்கள் ஒரு மொழியைப் பேசினால், அந்தப் பகுதியை அந்த மொழி பேசும் மாநிலத்தில் சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
1948ல் ஜெய்ப்பூரில் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்குழு, மொழிவழி மாநிலங்களை அமைக்க ஆய்வுசெய்யுமாறு காங்கிரசில் இருந்த மூவர் குழுவை அமைத்தது. ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், பட்டாபி சீதாராமையா ஆகியோரை நியமித்தது. அக்குழுவிற்கு ஜெ.வி.பி.குழு என்று பெயர், 01.04.1949ல் காங்கிரஸ் தலைமைக்கு அக்குழு அறிக்கையை அளித்தது.
அந்தக் குழுவிற்கும் மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பதற்கு விருப்பம் இல்லையெனினும் ஆந்திர மக்களின் போராட்டங்களைக் காரணம் காட்டி ஆந்திராவை மட்டும் பிரித்தளிக்கலாம்; ஆனால், சென்னையை ஆந்திரர்கள் கேட்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதித்தது (ஜெ.வி.பி.குழு அறிக்கை, பக்.14).
ஆந்திர மாநிலப் பிரிவினையை வலியுறுத்தி, பொட்டி ஸ்ரீராமுலு சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். 19.10.1952ல் தொடங்கி 15.12.1952 வரை 57 நாள்கள் சென்னை மயிலாப்பூரில் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார். இதனால், ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. வேறு வழியின்றி, தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு அவர்கள் 19.12.1952ல் நாடாளுமன்றத்தில் பிரச்சினைக்கு வாய்ப்பில்லாத 12 மாவட்டங்களை உள்ளடக்கிய தனி ஆந்திர மாநிலம் அமைக்கப்படும். என்று அறிவித்தார். அதற்காக, நீதிபதி வாஞ்சு தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.
30.12.1952ல் பணியைத் தொடங்கிய நீதிபதி வாஞ்சு 07.02.1953ல் இந்திய அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில்…
‘சென்னை, ஆந்திராவின் தற்காலிகத் தலைநகராக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கலாம். ஆந்திரர்களுக்கு சென்னையின்மீது எவ்வித உரிமையும் இல்லை. விருந்தாளிகளைப் போல அல்லது வாடகைதாரர்களைப் போல அவர்கள் இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்கள் சென்னையில் இருக்கக் கூடாது. அதற்குள் ஆந்திரர்கள் தங்கள் மாநிலத்தில் புதிய தலைநகரை உருவாக்கிக்கொள்ள வேண்டும்’ (நீதிபதி வாஞ்சு அறிக்கை, பக்கம் 5) என்று பரிந்துரைத்தார்.
மேலும், ஆந்திர அரசின் அனைத்து அலுவலகங்களையும் உடனடியாக மாற்றிக்கொள்வதில் சிரமம் இருக்கும். சென்னையிலேயே ஆந்திர உயர் நீதிமன்றம் தற்காலிகமாக ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று பரிந்துரை செய்தார் (அறிக்கை பக்கம் 8)
சென்னை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் மக்கள்தொகை அடிப்படையில்’ 36 விழுக்காடு இடங்களை 25 ஆண்டுகளுக்கு ஆத்திர மாணவர்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும். அந்த இடங்களுக்கான பெயர்ப் பட்டியலை ஆந்திர அரசு கொடுக்கும் என்று பரிந்துரை செய்தார். (அறிக்கை பக்கம் 122
சென்னை நகருக்கு ஈடாக ரூ.2.3 கோடியை புதிய ஆந்திர அரசுக்கு சென்னை மாகாண அரசு கொடுக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்தார். (அறிக்கை, பக்கம் 16)
இக்குழு, பெல்லாரி மாவட்டத்தைக் கர்நாடகாவுடன் சேர்க்கப் பரிந்துரைத்தது (பக்கம் 2). மற்ற 11 மாவட்டங்களைக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைத்துக்கொள்ள வழிவகுத்தது.
நீதிபதி வாஞ்சு குழுவின் அறிக்கையைக் கண்டு தமிழ்நாடே கொதித்தெழுந்தது. வாஞ்சுவின் அறிக்கை வஞ்சகம் நிறைந்தது என்று அண்ணா ‘திராவிட நாடு’ இதழில் எழுதினார் (திராவிட நாடு, 22.2.1953). திராவிட நாடு திராவிடருக்கே. சென்னை தமிழருக்கே என்று அண்ணா, திராவிட நாடு இதழில் ஏற்கெனவே எழுதி இருந்தார் (திராவிட நாடு, 14.1.1953).

வாஞ்சி அறிக்கையைக் கண்டித்து பெரியார் 22.3.1953 அன்று தமிழ்நாடு முழுவதும் கடையடைப்புப் போராட்டத்தையும் பொதுக் கூட்டங்களையும் நடத்தினார்.
தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியும் சென்னை தமிழ்நாட்டுக்கே உரிமை என்று கூறி, மேயர் செங்கல்வராயன் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டத்தை 13.2.1953 நடத்தியது. அறிஞர் அண்ணா அவர்கள் சென்னை, தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்பதை மேயரிடம் வலியுறுத்தினார். 16.2.1953 அன்று, சென்னை கடற்கரையில் அனைத்துக்கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. வடக்கெல்லை போராட்டத்துக்கு ஆதரவாக, தி.மு.க. தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
தி.மு.க.வின் வடஆர்க்காடு மாவட்டச் செயலாளராக இருந்த ஏ.எல். சி.கிருட்டிணசாமி தலைமையில் இருநூறு தி.மு.க. தொண்டர்கள் 16.4.1953 அன்று அரக்கோணத்திலிருந்து கால்நடையாக முழக்கங்களை எழுப்பிச் சென்று திருத்தணியில் மறியல்செய்தனர். கே.விநாயகம் அவர்களை வரவேற்றுப் பேசினார்.
23.4.1953 அன்று அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, அரங்கண்ணல், இராசகோபால் ஆகிய நால்வரும் திருத்தணிக்கு நேரில் சென்று, அறப்போரில் ஈடுபட்டுவரும் தோழர்களைப் பாராட்டிவிட்டு, வடக்கெல்லை போராட்டத் தளபதி கே.விநாயகம் அவர்களைச் சந்தித்து, தி.மு.க.வின் ஆதரவினைத் தெரிவித்துவிட்டு வந்தனர் (திராவிட நாடு 3.5.1953).
13.5.1953 அன்று, தி.மு.க. வடஆர்க்காடு மாவட்டச் செயலாளர் ஏ.எல்.சி. கிருட்டிணசாமி தலைமையிலும் கே. விநாயகம் தலைமையிலும் திருத்தணி நீதிமன்றம் முன் மறியல் செய்தனர். அப்போது, காவல் துறை தாக்குதலில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சம்பந்தம் அவர்களின் மண்டை உடைந்தது. இந்தச் செய்தி, தினத்தந்தி நாளேட்டில் 14.5.1953 அன்று படத்துடன் வெளியிடப்பட்டது.
தமிழ் பேசும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்க்க வலியுறுத்தி, ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க 21.6.1953ல் திருத்தணியில் காலை 9.30 மணிக்கு பம்பாய் எக்ஸ்பிரஸ் வண்டியை நிறுத்திய தோழர்களில் ஏ.ரஷீத், ந.முனுசாமி, சம்பந்தன், சித்தூர் கேசவன் ஆகிய தி.மு.க.வினர் பங்கேற்று, 15 நாள்கள் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்கண்ட செய்தியைத் தி.மு.க. வடஆர்க்காடு மாவட்டச் செயலாளர் ஏ.எல்.சி. கிருட்டிணசாமி (நம் நாடு இதழில் 12.2.1954ல்) தெரிவித்துள்ளார்.
சித்தூர் தி.மு.க. மாவட்ட மாநாடு 10, 11-7-1954ஆம் நாள்களில் பொதட்டூர் பேட்டையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் அண்ணா அவர்கள் தமிழ் பேசும் பகுதிகளை தில்லி அரசு ஆந்திராவில் இணைத்துவிட்டு, தமிழர் தெலுங்கர்களுக்குப் பகையை மூட்டுகிறது என்பதை விளக்கினார். தில்லியை எதிர்க்காத ம.பொ.சி, ஆந்திர முதல்வர் பிரகாசத்தை எதிர்ப்பதை விமர்சித்தார்.
அம்மாநாட்டில் வடக்கெல்லை தொடர்பாக மூன்று தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
- சித்தூர் பிரச்சினை சம்பந்தமாக வீணான மனமாச்சரியங்களும், தமிழர்-ஆந்திரர் குரோத உணர்ச்சியும் மூளாத வகையில் மொழிவழி அரசு கோட்பாட்டுக்கு மதிப்பளித்து, ஒரு சமரசம் காண, சென்னை அரசின் முதலமைச்சர் காமராசர் அவர்களும், ஆந்திர அரசின் முதலமைச்சர் பிரகாசம் அவர்களும் சந்தித்துப் பேசுதல் வேண்டும் என்று இம்மாநாடு வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.
- தமிழர் – ஆந்திரர் பிரச்சினையை நியாயமான முறையில் தீர்த்து வைக்கும் கையில், எல்லைக் கமிஷனை, வாக்களித்தபடி தில்லி அரசு அனுப்பிவைக்க வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துவதுடன் மேற்படி கமிஷனை அனுப்புவதில் தாமதம் ஏற்படுத்துவதுதான் வீணான தமிழர்-ஆந்திரர் துவேஷத்தை வளர்க்கிறது என்பதை வருத்தத்துடன் தில்லி ஆட்சி பீடத்தினருக்கு இம்மாநாடு அறிவுறுத்திக் கூறுகிறது.
- சித்தூர் மாவட்டத்தின் தமிழ்ப் பகுதிகளை ஆந்திர அரசினருக்கு உரிமையாக்கும் வகையில், டெல்லி ஆட்சிபீடத்தினர் செய்த சூழ்ச்சியை இனத்தால் ஒன்றுபட்ட ஆந்திர நாட்டு மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே, வேண்டுமென்றே வீண் குழப்பத்தை உண்டாக்கி வைத்திருக்கும் அநீதியை, அரசியல் நெறியற்ற தன்மையை இம்மாநாடு மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் சித்தூர் மாவட்ட தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் தமிழகத்தோடு சேர்க்கப்படுதல் வேண்டும் என்பதற்காகவும், அதற்கு ஆவண செய்யவும் திருச்சி பொதுக்குழுவில் தோழர் என்.வி. நடராசன் அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தனிக்குழுவை இம்மாநாடு முழுமனத்தோடு வரவேற்பதுடன், அத்திட்டம் வெற்றிபெற சித்தூர் மாவட்டத்திலுள்ள கிளைக் கழகங்கள் அனைத்தும் தீவிர பணியில் ஈடுபடவும் தயாராயிருக்கிறது என்பதைப் பொதுக்குழுவுக்கும், பொதுச் செயலாளருக்கும் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானங்களை முன்மொழிந்து வழிமொழிந்தவர்கள்: கே.ஏ.மதியழகன், நாகர்கோவில் வி.எம்.ஜான், சித்தூர் என்.கேசவன் (நம் நாடு 15.7.1954).
தமிழ்நாட்டின் வடக்கு எல்லை தொடர்பான சட்ட முன்வரைவை சென்னை மாகாண முதல்வர் இராசாசி 14.7.1953 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த சித்தூர், திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளை ஆந்திராவுக்கு சொந்தம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எல்லை கமிஷன் நியமிக்கப்பட வேண்டும் என்ற விதியையும் அவர் உருவாக்கவில்லை.
இராசாசியின் இச்செயலை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கோசல்ராமன் உள்பட பலர் கண்டித்திருந்தனர். தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி அவர்கள் 15.7.1953 அன்று சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர், ‘போராட்டம் நடக்கும்போது நானும் திருத்தணிக்குப் போயிருக்கிறேன். அங்கு பெருவாரியாகத் தமிழ் பேசுகிறார்கள். எந்தப் பகுதிகளில் தமிழ் பேசுகிறார்களோ அந்தப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். எங்கு தெலுங்கர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்தப் பகுதியை ஆந்திர ராஜ்ஜியத்துடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
‘ஆந்திரர்கள் புதிதாகத் தங்கள் ராஜ்ஜியத்திற்குத் தலைநகரம் ஏற்படுத்த வேண்டும். அதற்கான நஷ்டஈடு கோருகிறார்கள் என்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், சொத்தை ஜனத்தொகை வாரியாகப் பிரித்திருக்கிறார்கள். கடனையும் அப்படி பங்கிடாமல், தமிழர்களே கடனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதில் நியாயமில்லை. ஒரு குடும்பத்தில் சகோதரர்களுக்குப் பாகம் பிரிக்கின்றபோது, சொத்தையும் பிரிப்பார்கள். கடனையும் பிரிப்பார்கள். ஆனால், அப்படி இப்போது பிரிக்கவில்லை’ (சட்டமன்ற நடவடிக்கை பக்கம் 186 முதல் 190 வரை, 15.7.1953).
வாஞ்சு குழு பரிந்துரைத்த சென்னை நகருக்கு ஈடாக ஆந்திராவில் புதிய தலைநகரை உருவாக்க சென்னை அரசு ஆந்திர அரசுக்கு 2.30 கோடி கொடுக்க வேண்டும் என்று செய்த பரிந்துரையை இராசாசி இம்மசோதாவில் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு உறுப்பினர்கள் வெட்டுத் தீர்மானங்களைக் கொண்டு வந்து, ஆந்திர மாநிலத்திற்குப் புதிய தலைநகரை உருவாக்க இந்திய அரசுதான் 2.30 கோடியை தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்திய அரசுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் 20.6.1953 அன்று வடக்கெல்லை போராட்ட வீரர்கள் சுமார் 1000 பேர் பம்பாய் எக்ஸ்பிரசு இரயிலை நிறுத்தினர். இது ம.பொ.சி.க்குத் தெரியாது. அன்று மாலை திருத்தணி வந்த ம.பொ.சி, எங்கே போராட்டக் குழு தம் தலைமையை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்சி, மறுநாள் இரயில் நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தார்.
ஒன்பது பேரை அரக்கோணத்திற்கு அழைத்துச்சென்றார். இதில் தி.மு.கவைச் சேர்ந்த ரஷீத் உள்பட நால்வர் இருந்தனர். அரக்கோணத்திலிருந்து திருத்தணி வரும் வரை ஒன்பது முறை சங்கிலியைப் பிடித்து இழுத்து, இரயிலை நிறுத்தினார். இவர்கள் 15 நாள் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அன்றைய பிரதமர் நேரு, ‘இரயிலை நிறுத்தி போராட்டம் செய்பவர்கள் காட்டுமிராண்டிகள். இரயில் நிறுத்தம் சிறுபிள்ளைத்தனமானது, பைத்தியக்காரத்தனமானது’ என்று கண்டித்தார்.
இதைக் கண்டித்து அண்ணா அவர்கள், 15.7.1953 அன்று பிரதமர் நேருவிற்குப் பாடம் புகட்டுவதற்காகத் தமிழ்நாடு முழுவதும் இரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். தமிழ்நாடு முழுவதும் அறுநூறு இடங்களில் இரயில் மறியல் நடத்தப்பட்டது. தூத்துக்குடியிலும் கள்ளக்குடியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அன்றே ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் கை, கால்களை இழந்தனர். பலருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிறகு, இறப்பு எண்ணிக்கை பதினொன்றாகியது.
21.07.1953 அன்று சட்டமன்றத்தில் இதுகுறித்த ஒத்திவைப்புத் தீர்மானத்தின்மீது பேசிய தி.மு.க. உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி அவர்கள், ‘என் நெஞ்சம் குமுறுகிறது. மக்களின் உயிர்களைத் துச்சமாக மதித்து, நாய்களைப் போல் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டு, தெருவில் இழுத்தெறியப்படும் இந்த இராம ராஜ்ஜியத்தில் மனத்திற்கு மிகவும் வேதனையைத் தரக்கூடிய இப்படிப்பட்ட செய்கையைத் தவிர, வேறு எதையும் காணமுடியாதுதான். வெள்ளைக்காரன்தான் கொடுமை மிக்கவர்கள் என்று எண்ணினோம். அன்று, வெறிபிடித்த டயர் தன் துப்பாக்கியில் ரவை இருக்கும் வரையிலும் சுட்டுத் தீர்த்தான் என்ற செய்தியை நாம் கேட்டிருக்கிறோம்.
ஆனால், இன்று டால்மியாபுரத்தில் சுட்டதைப் போல அறுபத்து நான்கு ரவுண்டுகள் சுட்டான் என்று கிடையாது. இந்த காருண்யா, அஹிம்சா மூர்த்திகளோ சாத்வீகத்தில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இந்த இராம ராஜ்ஜியத்து ஆட்சியாளர்களோ நிராயுதபாணியான கூட்டத்தினர்மீது 64 ரவுண்டுகள் சுட்டிருக்கிறார்கள். ஈவு இரக்கமுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் உடல் உள்ளம் எல்லாம் இதைக் கேட்டு சிலிர்க்கவில்லையா என்று கேட்கிறேன்’ என்றார். போராட்டம் நடப்பதற்கு முன்பே அறிஞர் அண்ணாவையும் கலைஞர் கருணாநிதியையும் சிறையில் அடைத்திருந்தனர்.
தில்லி நாடாளுமன்றத்திலும் ஆந்திரப் பிரிவினை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 13.8.1953 முதல் 27.8.1953 வரை விவாதங்கள் நடைபெற்றது. திருக்குறளார் வி.முனுசாமி, வெங்கட்ராமன், எஸ்.வி.இராமசாமி, கக்கன் உள்ளிட்ட ஆறு பேர் பேசினர்.
‘சென்னை சட்டசபையில் வெட்டுத் தீர்மானம் மூலம் நீக்கப்பட்ட ஆந்திராவுக்கு 2.3 கோடியை சென்னை மாநிலம் ஏன் தரவேண்டும்? நீங்கள்தானே புதிய மாநிலம் உருவாக்கினீர்கள்; நீங்கள்தான் அந்தப் பணத்தை ஆந்திராவுக்குத் தரவேண்டும்’ என்று வலியுறுத்தினர். ஆந்திரா பிரிந்த மீதம் உள்ள சென்னை மாநிலத்திற்குத் திராவிட நாடு அல்லது தமிழ்நாடு என்று பெயரிட வேண்டும் என்று தி.மு.க. ஆதரவில் திண்டிவனம் தொகுதியில் வெற்றிபெற்ற திருக்குறள் முனுசாமி கூறினார். மேலும், சென்னைக்கு நஷ்டஈடு கொடுக்க முடியாது என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை புறந்தள்ளி, இப்போது ஆந்திர அரசுக்கு 2.30 கோடி சென்னை மாநில அரசு வழங்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார் (நாடாளுமன்ற விவாத குறிப்புகள் 18.8.1953, பக்கங்கள் 1029-1034).
பிரதமர் நேரு எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லை கமிஷன் அமைக்கவும் உறுதி அளிக்கவில்லை. பிரச்சினைக்கு வாய்ப்பில்லாத 12 மாவட்டங்களைக் கொண்ட ஆந்திரா அமையும் என்ற நேருவின் அறிவிப்பு, தமிழ்ப் பகுதிகள் ஆந்திராவிற்குப் போகக் காரணமாக இருந்தன.
நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, ஒன்றிய அரசு எல்லைக் குழுவை அமைத்தது. 1.4.1960ல் படாஸ்கர் தலைமையில் எல்லைக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் திருத்தணி உள்ளிட்ட சில பகுதிகள் தமிழகத்திற்குக் கிடைத்தன.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் மொழிவழி மாநிலமாக மறுசீரமைக்க இந்திய அரசு நீதிபதி பசல் அலி தலைமையில் 29.12.1953 அன்று ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவில் கே.எம்.பணிக்கர் என்ற மலையாளியும் குன்சுரு என்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவரும் உறுப்பினர்களாக இருந்தனர்.
அந்தக் குழுவினர் இந்திய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கட்சிகளின் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, 30.09.1955 அன்று தங்கள் பரிந்துரையை இந்திய அரசுக்கு அளித்தது.
தி.மு.க.வின் சார்பில் 13.5.1954 அன்று காலை 11 மணிக்கு அந்தக் குழுவினரிடம் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக தி.மு.க.வின் துணைச் செயலாளர்கள் இரா.நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன் சட்ட திட்டக்குழுச் செயலர் ஈ.வெ.கி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர் ஏ. கோவிந்தசாமி ஆகியோர் சென்று தி.மு.க. நிலைப்பாட்டை அச்சிட்ட ஆவணமாக அளித்தனர். அவ்வறிக்கையின் முதன்மையான பகுதி வருமாறு:
‘மொழிவழிப் பிரிவினைக் கோரிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட மொழியின் பாதுகாப்புக்காக மட்டுமல்ல. ஆனால், ஒரு பொதுவான தாய்மொழியின் மூலம் உறவு கொண்ட ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம், தங்கள் இயற்கையான, தேசிய அவாக்களை நிறைவேற்றிக்கொள்ள ஒரே அரசியல் அமைப்பின்மூலம் சேர்ந்து வாழ்தல் வேண்டும் என்ற உண்மையை இந்த கமிஷன் குறித்துக்கொள்ளுதல் வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகம் வேண்டுகிறது. சுருங்கச் சொல்லின், குறிப்பிடத் தகுந்த வேற்றுமைகளையுடைய இரு சாராருக்கிடையில் ஒரு சாரார் மற்றொரு சாரார்மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்கு இது பலமான வாதமாகும்.
மொழிவழிப் பிரிவினையைத் திராவிட முன்னேற்றக் கழகம் பாராட்டுகிறது; அதற்காகப் போராடுகிறது; மொழிவழிப் பிரிவினை தனது நீண்ட பயணத்தின் முதற்படி என்று கருதுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், சென்னை மாகாணம் தமிழ், தெலுங்கு, மலையாளம், சுன்னடம் ஆகிய நான்கு மொழிவழிப் பிரிவுகளை உடையது. ஆகவே, இந்த நான்கு மொழிவழிப் பிரிவுகளை அமைப்பதுதான் உடனடித் தேவை என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக்காட்ட விரும்புகிறது. இதைச் செய்யும்பொழுது, எந்த ஒரு மொழிப் பிரிவும், மற்றொரு மொழிப் பிரிவின் நிலப்பரப்பை அபகரித்துக்கொள்ளாதவாறு அதிகாரத்திலுள்ளோர் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
தொல்லையும் நெருக்கடியும் நிறைந்த நேரத்தில் மத்திய சர்க்கார் ஆந்திர ராஜ்ஜிய அமைப்புக்கு அனுமதி அளித்தபோதிலும் மொழிவழிப் பிரிவினையின் அடிப்படைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதுடன், தமிழகத்துக்கு உரிமைப்படி சேரவேண்டிய நிலப்பகுதிகளை ஆந்திரத்துடன் இணைந்திருப்பது காணத் திராவிட முன்னேற்றக் கழகம் வருந்துகிறது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் பகுதிகள், எந்த நியாயப்படி பார்த்தாலும், ஆந்திர இராஜ்ஜியத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தமிழ்நாட்டுடன் இணைக்கப்படவேண்டியதாகும்.
அதுபோலவே, இன்றைய தினம் திருவிதாங்கூர்-கொச்சி இராஜ்ஜியத்துட துடன் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ் பேசும் பகுதியாகிய நாஞ்சில் நாடு பிரிக்கப்பட்டு, தமிழ்நாட்டுடன் இணைக்கப்படுதல் வேண்டும். அத்துடன்கூட, சென்னை இராஜ்ஜி யத்தில் உள்ள பெரும்பான்மையாக மலையாள மொழி பேசும் பகுதிகளைக் கேரள நாட்டுடன் சேர அனுமதிக்கப்பட வேண்டும்.
விசால ஆந்திரம், சம்யுக்தி கருநாடகம், அய்க்கிய கேரளம், தமிழகம் என்ற பெயரில் உலவும் கோரிக்கைகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் முழு மனதுடன் வரவேற்பதுடன், ஆதரவும் அளித்துவருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், மொழிவழிப் பிரிவினை அமைப்பு அவசியம் என்று கூறுவதுடன், இந்த நான்கு மொழிப் பகுதிகளிடையே வேறு எந்த மொழிப் பகுதிகளும் பாராட்ட முடியாத அளவு ஓர் உறவு முறை இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறது; ஏனெனில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை; இந்த மொழி பேசும் மக்களிடையே ஓர் இன உறவு உள்ளது. சுயநிர்ணய அடிப்படையில் இந்த நான்கு மொழிவழி இராஜ்ஜியங்களின் கூட்டாட்சியே திராவிட நாடு ஆகும்.
இந்தக் கூட்டாட்சி, சுதந்திரக் குடியரசு நாடாக விளங்கும்… அதிகாரங்கள் பரவலாக்கப்படுதல் வேண்டும். மொழிவழிப் பிரிவினை வேண்டும் என்ற இரண்டின் சேர்க்கையே திராவிட நாடு கோரிக்கையாகும். எந்தக் காரணத்தை வைத்துப் பார்த்தாலும் அல்லது எல்லாக் காரணங்களை வைத்துப் பார்த்தாலும் திராவிட நாடு சுதந்தர ஜனநாயகக் குடி அரசாக விளங்குவதற்கு உரிமையுடையது என்பது புலப்படும்.
சுருங்கக் கூறின்,
- திராவிட முன்னேற்றக் கழகம், மொழிவழிப் பிரிவினையை வற்புறுத்துகிறது.
- திராவிட முன்னேற்றக் கழகம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப் பகுதிகளும், நாஞ்சில் மாவட்டமும் தமிழகத்துடன் இணைக்கப்படுதல் வேண்டுமென வலியுறுத்துகிறது.
- திராவிட முன்னேற்றக் கழகம் பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் போன்ற இடங்களிலுள்ள பிரெஞ்சு ஆதிக்கம் அகற்றப்படுதல் வேண்டும் என வலியுறுத்துகிறது.
- திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் பகுதிகள் அடங்கிய திராவிட நாட்டைச் சுதந்திர நாட்டுக் கூட்டாட்சிக்காக நிறுவுதல் வேண்டும் எனக் கூறுகிறது (நம் நாடு, 15.05.1954).
தெற்கெல்லைப் போராட்டத்தின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு, தமிழ் பேசும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிவரும் தமிழர்களை அறிஞர் அண்ணா அவர்களும் மதியழகன் அவர்களும் 30.9.1954 அன்று நாகர்கோவில் சென்று நிலைமைகளைக் கண்டறிந்தனர். மார்சல் நேசமணி சிறையில் இருந்ததால் போராட்டக் குழுவின் துணைச் செயலர் குஞ்சன் நாடார் அவர்களைச் சந்தித்தனர். நாகர்கோவில் தி.மு.க. செயலாளர் ஜான் உடனிருந்தார்.
அண்ணா அங்கு உரையாற்றினார். திருவிதாங்கூர் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தார். இதற்கெல்லாம் மூலகாரணம் இந்திய அரசுதான் என்பதை விளக்கினார். 6.3.1954 அன்று. தி.மு.க.வின் ஒரு நாள் அடையாள மறியல் போராட்டம் மதியழகன் தலைமையில் நடைபெறும் என்று அறிவித்தார்.
317.1954 அன்று நாகர்கோவில் நகராட்சி மைதானத்தில் ஜான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய கே.ஏ. மதியழகன் அவர்கள், ‘நேருவுக்கு தமிழருக்குத்தான் புத்திமதி கூற நேரம் இருந்ததே தவிர, பட்டம் தாணுவைக் கண்டிக்க வார்த்தைகள் அகப்படவில்லையா?’ என்றார். ‘பட்டம் தானுவையே கேட்கிறேன்.
நீங்கள் ஏவி இருக்கிற அடக்குமுறை எந்த ஜனநாயகத்திலே சேர்ந்தது? தலைவர்களை சிறையிலே அடைப்பதானால், தொண்டர்களைத் தடிகொண்டு தாக்குவதனால், எங்கேயாவது உரிமை உணர்ச்சி தடைப்பட்டது என்பதற்கு உதாரணம் உண்டா?’ என்றார். மேலும் அவர் கூறுகையில், சிறைச்சாலை நமக்கு ஒன்றும் புதிதல்ல! நாமே நாடு என்ற பெரும் சிறைச்சாலையிலே இருக்கின்றோம். அங்கேயும் சென்று வரவேண்டும் என்று வீரர்கள் கிளம்ப வேண்டும் என்று 6.8.1954 அன்று தி.மு.க. நடத்த உள்ள அடையாள மறியலுக்குத் தொண்டர்களை அறைகூவி அழைத்தார் (நம் நாடு 4.8.1954).
அறிஞர் அண்ணா அவர்கள் நாகர்கோவில் தி.மு.க.வின் கொள்கையை தெளிவுபடுத்தினார். தமிழ்ப் பகுதிகள் பிறரிடம் சிக்க அனுமதியோம்!
‘திராவிட நாடு திராவிடர்க்கே என்றால் மலையாள நாடு மலையாளிகளுக்கே! தமிழ்நாடு தமிழருக்கே! ஆந்திர நாடு ஆந்திரருக்கே! கன்னட நாடு கன்னடியருக்கே! என்றுதான் பொருள்; ஒருவர் நாடு மற்றவருக்கு என்று பொருள் அல்ல! ஆனால், இப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கவேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.
தேவிகுளம், பீர்மேடு பிறர் கையில் சிக்கிச் சீரழிவதை நாம் எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.
மாநில புனரமைப்புக் குழுவை அமைத்த நேரு, அதில் கே.என். பணிக்கரை உறுப்பினராக்கி இருக்கிறார். பணிக்கரோ மலையாளி! நாஞ்சில் நாடு மலையாளிகளுக்கே சொந்தம் என்பவர்!’
அடுத்த நாள், காரைக்குடி காந்தி சதுக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அண்ணா, ‘நேருவின் அரசியல் அறிவு எப்படி இருக்கின்றதென்று பாருங்கள்! வெள்ளைக்காரன் சைமன் குழுவை அனுப்பியதற்கும் நேரு பணிக்கரை உறுப்பினராக்கியதற்கும் என்ன வேறுபாடு என்று கேட்கிறேன்’ என்றார். மேலும் அவர் கூறுகையில்,
‘மொழிவழி மாகாணம் பிரிவதை தி.மு.க. எதிர்க்கவில்லை; ஆனால், நிலப் பிரிவினைத் தகராறுக்காகப் பட்டம் தாணுப்பிள்ளையிடமோ, பிரகாசத்திடமோ சண்டையிட்டால் மட்டும் பயனில்லை. இப்பிரிவினையை சமரசமாகத் தீர்த்துவைக்கும் பொறுப்பும் தகுதியும், உரிமையும் உடையவர்கள் மத்திய அரசாங்கத்தார்தான். அவர்களே பொறுப்பைத் தட்டிக்கழிப்பதால், நாம் போராடவேண்டியது நேரு அரசாங்கத்திடம்தான்! என்று அண்ணா விளக்கினார் (நம் நாடு, 5.8.1954).
6.8.1954 அன்று, தி.மு.க.வினர் நாகர்கோவிலிலிருந்து 79 பேர். செங்கோட்டையிலிருந்து 31 பேர் ஆகமொத்தம் நீதிமன்றம் முன்பு 110 பேர் மறியல் செய்தனர். அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர்.
பத்துப் பத்து பேராகத் தொடர் மறியல் நடத்தினர். முதல் குழுவிற்கு ஒரு வார சிறை, ரூபாய் 50 அபராதம். கட்டத் தவறினால், நான்கு வார சிறைத் தண்டனை. இரண்டாவது குழுவிற்கு ஒரு வார சிறைத் தண்டனை. ரூபாய் 200 அபராதம். கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறைத் தண்டனை. மற்ற 59 பேருக்கு அன்று மாலையே விடுதலை.
முதல் குழுவினருக்கு ஒரு மாதம் சிறையும், இரண்டாம் குழுவினருக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனையும் விதித்தனர். மற்றவர்கள் அன்றே விடுதலை செய்யப்பட்டனர்.
செங்கோட்டையில் கைதுசெய்யப்பட்ட 31 தி.மு.க. தோழர்கள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று தோழர்கள் தவிர மற்ற 28 தோழர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாளை திரு கொச்சி தமிழர்களின் விடுதலை நாளாக அறிவித்து, தெற்கெல்லைப் போராட்டக் குழு தமிழர் பகுதிகளில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருவிதாங்கூரை ஆட்சி செய்துவந்த பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் பட்டம் தானுப்பிள்ளை தமிழர்கள்மீது அடக்குமுறையை ஏவினார். காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 11 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் தங்கள் கை, கால்களை இழந்தனர். இந்த அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து, 12, 13.8.1954 தேதிகளில் நம் நாடு நாளிதழிலும், விடுதலை ஏட்டிலும் கடுமையான கண்டனங்கள் தெரிவித்து, தலையங்கம் எழுதப்பட்டன.
செங்கற்பட்டு மாவட்ட தி.மு.க. மாநாடு காஞ்சிபுரத்தில் 20, 21.8.1954 நாள்களில் நடைபெற்றது.
11 தமிழர்களைச் சுட்டுக்கொன்ற பட்டம் தாணுப் பிள்ளைக்குக் கண்டனம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொச்சி தமிழர் உரிமைப் போரில் ஈடுபட்டுத் தொண்டாற்றிய அறப்போர் வீரர்கள்மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிட்டு, 11 உயிர்களைப் பலிகொண்டும், நூற்றுக்கணக்கான தோழர்களைச் சிறைப்படுத்தியதுடன் சிறைப்பட்ட அறப்போராட்ட வீரர்களைச் சிறைச்சாலைக்குள்ளும் அடித்துத் துன்புறுத்திவருவதுடன், அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர்களின் குடும்பத்தினருக்குத் தொல்லை விளைவித்தும் குறிப்பாக, நாகர்கோவில் தி.மு.க. அலுவலகத்தைச் ந்தைச் சோதனையிட்டு, ஏதேச்சதிரகார கிரகார ஆட்சி நடத்திவரும் பட்டம் தாணுவின் சர்க்காரை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது (நம் நாடு, 24.8.1954).
இப்போராட்டத்தின் காரணமாகத் தமிழர் அறப்போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்தியாவில் மொழிவழி மாநிலங்களை மறுகட்டமைப்பு செய்வதற்காக, இந்திய அரசால் அமைக்கப்பட்ட பசல் அலி தலைமையிலான குழுவின் பரிந்துரை 30.9.1955ல் பரிந்துரை அளித்தது.
இப்பரிந்துரை மொத்தம் 267 பக்கங்களைக் கொண்டது. பக்கம் 81-84 வரை சென்னை மாநிலத்தைப் பற்றியது. பக்கம் 85 முதல் 89 வரை கேரள மாநிலம் பற்றியது. பக்கம் 90 முதல் 100 வரை கர்நாடக மாநிலம் பற்றியது. தமிழகத்தின் வடக்கு எல்லையைத் தமிழ்நாடு அரசும் ஆந்திரா அரசும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தது. அந்தக் குழு சென்னை வந்தபோது, தமிழ்நாட்டு முதல்வர் இராசாசியும் ஆந்திர முதல்வர் பிரகாசமும் தாங்களே பேசித் தீர்த்துக்கொள்வதாகக் கூறியிருந்தனர்.
அப்பரிந்துரையில் திரு கொச்சி பகுதியில் இருந்த தமிழர் பகுதிகளில் 1. அகத்தீசுவரம், 2. தோவாலை, 3. மூலகுளம், 4. விளவங்கோடு 5. செங்கோட்டை ஆகிய வட்டங்களைத் தமிழகத்துடன் இணைக்கப் பரிந்துரை செய்தது. தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த 1. தேவிகுளம், 2. பீர்மேடு, 3. நெய்யாற்றங்கரை, 4. சித்தூர் ஆகிய பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்காமல் கேரளாவில் இணைத்தது. கொல்லேகால் பகுதியை கர்நாடகத்துடன் இணைத்தது.
இது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் தமிழர்கள் 72 சதவிகிதத்திற்கு மேல் இருந்தும் அதை கேரளத்துடன் இணைக்க அக்குழுவினர் கையாண்ட சூழ்ச்சி, அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டில் இருந்து வேலைக்குச் சென்று, தமிழ்நாட்டிற்குத் திரும்பிவிடுகின்றனர் என்று வரையறை செய்திருந்தனர். இந்தக் கொடுஞ்செயலை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கண்டித்தன.
பசல் அலி குழுவினரின் அறிக்கை குறித்து தி.மு.க.வின் பொதுச் செயலாளர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள், 14.10.1954 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதன் முதன்மையான பகுதிகளை இங்கே தருகிறேன்.
அவை பசல் அலி குழுவின் அறிக்கைப்படி புதிய தமிழகத்தில் தமிழ் பேசும் பகுதிகள் முழுவதும் சேர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. திரு கொச்சி அரசிலுள்ள ஒன்பது தமிழ் தாலுகாக்களில் ஐந்தைத்தான் புதிய தமிழகத்தோடு சேர்க்க, குழு சிபாரிசு செய்திருக்கிறது அகத்தீசுவரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை ஆகும். தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களிலும் நெய்யாற்றங்கரை தாலுகாவின் பெரும் பகுதியிலும், சித்தூர் தாலுகாவிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தும் அங்கெல்லாம் நடைபெற்ற தேர்தல்களில் தமிழர்களையே தேர்ந்தெடுத்து, அவை தமிழ்ப் பகுதிகள்தாம் என்பதை விளக்கியிருந்தும், பசில் குழு அவற்றைக் கேரளத்தோடு சேர்க்க முற்பட்டிருப்பது கண்டனத்துக்குரியதாகும்; கொள்ளேகாலம் பெரும்பான்மையான கன்னடியர்களால் நிறைந்திருக்கிறது – என்று தாலுகாரீதியில் கணக்கிட்டு, அதனைக் கன்னடத்தோடு சேர்க்க முற்படும் பசல் குழு, தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, சித்தூர் ஆகிய தாலுகாக்களைத் தமிழகத்தோடு சேர்க்காமலிருப்பது என்ன முறையின்பாற்பட்டதோ தெரியவில்லை.
புதிய மாநில அமைப்பில், தமிழ் பேசும் மக்கள் அடங்கிய பகுதியைச் சென்னை மாநிலம் என்று அழைக்கப்படுவதை யாரும் விரும்பவில்லை; விரும்ப மாட்டார்கள். எனவே, அதனைத் தமிழகம் என்றோ அல்லது தமிழ்நாடு என்றோ அழைக்க வேண்டும். அந்தப்படிக்கு பசல் குழுவின் அறிக்கை திருத்தப்பட வேண்டும். மாநிலத்தில் அரசாங்க அலுவல் பதவிகளில் பாதி அளவு வெளிமாநிலத்தாருக்கு ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் என்று அறிக்கை கூறுவதையும், உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு வெளிமாநிலத்தவருக்கு ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்று அறிக்கை கூறுவதையும் திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக மறுக்கிறது. மாநில அரசாங்கப் பதவிகளைப் பொறுத்து முழுச் சலுகைகளும், அந்தந்த மாநிலத்தவருக்கே அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசாங்க அலுவல்களைப் பொறுத்து மாநிலங்களுக்குச் சம வாய்ப்பு அளிக்கப்பட்ட வேண்டும்.
மொழிவழி மாநிலங்களை எல்லை கமிஷன்களின் உதவியோடு அமைக்க, பசல் குழு சிபாரிசு செய்திருக்குமேயானால், இப்பொழுது இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பு நிலைகள் ஏற்பட வழி பிறந்திருக்காது. தென்னகத்தில் மொழிவழி மாநில அமைப்புக்கான நியாயமான அடிப்படை கிளர்ச்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்கி பயன் காணமுயலும் (நம் நாடு 17.10.1955).
தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்தி சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஆ.கசபதி நாயகர், எம்.எல்.சி. தலைமையில் 8.1.1956 அன்று திரு கொச்சி, மலபார், ஆந்திரா தமிழ்ப் பகுதிகள் இணைப்பு குறித்து தமிழ்ப் பகுதிகள் இணைப்புக்குழு சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பி.டி. இராசன், டாக்டர் மு.வ.இரா.நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஏ.இரத்தினம், டி.சண்முகம்., ஜி.இராசமன்னார், எஸ்.சி.அந்தோணிப் பிள்ளை, எஸ்.எச்.பிளாசர் மற்றும் பலர் உரையாற்றினர்.
தி.மு.க.வின் பொதுச் செயலாளர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் திரு கொச்சி தமிழ்ப் பகுதிகள் தாய்த் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்றவில்லையானால், கொந்தளிப்பு ஏற்படும்’ என்று பேசினார் (நம் நாடு 9.1.1956).
சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் 19.2.1956 மாலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் கலந்துகொண்டு கேரளம், ஆந்திரப் பகுதிகளில் உள்ள தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று பேசினார்.
20.2.1956 தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கடையடைப்பும் வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெற்றது. பல இடங்களில் காவல் துறையினர் போராட்டக்காரர்களைத் தாக்கினர்.
சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் நடந்தது என்ன?
மாநில மறுசீரமைப்புக் குழுவின் பின் அறிக்கையின்மீது தமிழ்நாடு சட்டமன்றத்தில் 21.11.1955 முதல் 24.11.1955 வரை நான்கு நாள்கள் விவாதங்கள் நடைபெற்றன.
தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட நான்கு தாலுகாக்கள் கேரளாவில் சேர்க்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, அந்தப் பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக உரையாற்றினர்.
உழைப்பாளர் கட்சியில் விக்கிரவாண்டித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு தி.மு.க.வில் இணைந்த ஏ.கோவிந்தசாமி அவர்கள், தி.மு.க.வின் நிலைப்பாட்டை விளக்கி சட்டமன்றத்தில் எடுத்துரைத்தார்.
தேவிகுளம், பீர்மேட்டில் தமிழர்கள் 70 விழுக்காட்டிற்குமேல் இருந்தும் அவர்களில் 30 விழுக்காட்டினர் தமிழ்நாட்டில் அன்றாடம் கூலி வேலைக்குச் சென்றுவருபவர்கள் (floating population) என்று மறுசீரமைப்பு ஆணையம் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டித்தார். அப்பகுதிகள் தமிழ்நாட்டிற்கு உரியது என்பதை எடுத்துரைத்தார். அன்று வாஞ்சி வந்தார் சித்தூர் தாலுகாவை, திருத்தணியை இழந்தோம். இன்றைக்கு சையது பசல் அலி வந்தார் – திருவாங்கூர் கொச்சி தமிழ்ப் பிரதேசங்களான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்துவிட்டு தவிக்கிறோம். இப்படியே போனால், தமிழர்களின் கதி என்ன என்பதை நாம் சிந்திக்கவேண்டி உள்ளாகியிருக்கிறது’ என்றார். (சட்டமன்ற விவாதக் குறிப்புகள் 23.11.1955, பக்கம் 293-296).
நான்கு நாள்கள் விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டிற்கே சொந்தம் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 122 வாக்குகள் கிடைத்தன. மலையாளிகள் 18 பேர் எதிர்த்து வாக்களித்தனர். தமிழ்நாட்டுப் பகுதி இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர் ஜீவா உள்பட 13 பேர் நடுநிலை வகித்தனர்.
மாநில அமைப்புக் குழுவின் அறிக்கையை நேரு நாடாளுமன்றத்தில் 16.12.1955 முதல் 23.12.1955 வரை விவாதத்திற்கு வைத்தார். மார்ஷல் நேசமணி, அவினாசிலிங்கம், டாக்டர். கிருஷ்ணசாமி, திருக்குறளார் முனுசாமி உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட தாலுகாக்கள் தமிழ்நாட்டிற்குச் சொந்தம் என்று கூறியதையும், தமிழ்நாடு சட்டமன்றம் அதற்கு ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தையும் புறக்கணித்து தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட நான்கு தாலுகாக்கள் கேரளாவுக்கே சொந்தம் என்று நேரு தீர்மானம் நிறைவேற்றினார்.

மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாடாளுமன்றத் தீர்மானத்தை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நேரு வலியுறுத்தினர். 28.3.1956 முதல் 31.3.1956 வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரசு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவர்கள் வாய் பேச முடியாமல் செய்யப்பட்டனர்.
அப்போதுதான் முதலமைச்சர் காமராசர் குளமாவது. மேடாவது எல்லாம் இந்தியாவில்தானே இருக்கப்போகிறது என்றார்.
1956 ஆகஸ்ட் மாதம் மொழிவழி மாநிலத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1956 நவம்பர் ஒன்றில் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ள தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்குச் சென்றன. நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகள் தமிழ்நாட்டிற்கு வந்தன. ஆந்திரப் பகுதியில் தமிழ்ப் பகுதிகளில் திருத்தணி உள்பட சில பகுதிகள் 1960ல் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.
தமிழகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தமிழ்ப் பகுதிகள் ஆந்திரா செல்வதற்கும், தெற்குப் பகுதிகள் கேரளா செல்வதற்கும் பண்டிதர் நேரு தலைமையிலான இந்திய அரசே காரணம். இந்த வரலாறு தெரியாதவர்கள். திராவிடம் பேசியதால்தான் நாம் நம் மண்ணை அண்டை மாநிலங்களில் இழந்தோம் எனப் பழி கூறுகின்றனர். தமிழகத்தின் எல்லைப் போராட்டங்களில் தி.மு.க.வின் பங்கு மகத்தானது.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மனித உரிமைகளின் இருட்காலம்: கழக வரலாற்றில் ஒரு புயற்காலம்!


