spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1957: முதல் தேர்தல்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1957: முதல் தேர்தல்!

-

- Advertisement -

சுப.வீரபாண்டியன்காலத்தின் நிறம் கறுப்பு சிவப்பு – 1957: முதல் தேர்தல்!1949ஆம் ஆண்டு, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தனியாக தி.மு.கழகம் என்னும் கட்சி தொடங்கப்பட்ட பிறகு, அது தாய்க் கழகத்திலிருந்து மூன்று கருத்தியல்களில் வேறுபட்டது.

  1. கடவுள்
  2. மொழி (தமிழ்)
  3. தேர்தல்

கடவுள் இல்லை… கடவுள் இல்லை. இல்லவே இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கோட்பாடு. ஆனால், ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று கூறியது தி.மு.கழகம்.

தனக்கு பாஷாபிமானமோ, தேசாபிமானமோ கிடையாது என்றுரைத்தார் மனிதாபிமானம் மட்டுமே கொண்டிருந்த தந்தை பெரியார். ஆனால், தன்னுடைய மொழிப்பற்றை அழுத்தமாக விளக்கிப் பேசியதோடு மட்டுமல்லாமல், பிறரிடத்திலும் அந்த உணர்வை ஊட்டினார் அறிஞர் அண்ணா.

we-r-hiring

தேர்தல்களில் ஒரு கட்சியை ஆதரித்தும், இன்னொரு கட்சியை எதிர்த்தும், திராவிடர் கழகம் பரப்புரை செய்துள்ளது என்றாலும் நேரடியாகத் தேர்தலில் பங்கேற்றதில்லை. தி.மு.கழகமும் தொடக்கத்தில் அதே நிலையைத்தான் மேற்கொண்டிருந்தது என்றாலும், கட்சி தொடங்கி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாகவே தேர்தலில் பங்கேற்றது.

நுணுகிப் பார்த்தால், இந்த மூன்று வேறுபாடுகளும் பாரதூரமானவை அல்ல என்பது புலப்படும். இருப்பினும் அந்த ஆய்வில் இப்போது இறங்காமல், தேர்தலைப் பற்றி மட்டும் நாம் இப்பதிவில் பார்க்கலாம்.

பெரியார்-அண்ணாவிற்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் 1945ஆம் ஆண்டு முதலே தொடங்கிவிட்டன. குறிப்பாக, இந்திய விடுதலை நாள் என்பது இன்பநாளா, துக்கநாளா என்பதில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகவே வந்து சேர்ந்தன. அதன் விளைவாக, 1948 மே மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் 18ஆவது மாநில மாநாட்டில் அண்ணா அவர்கள் கலந்துகொள்ளவில்லை. அந்த மாநாட்டின் மேடையிலேயே அண்ணாவிற்கு எதிராகச் சிலர் பேசினர். அண்ணாவிற்கு ஆதரவாகச் சிலர் மாநாட்டை விட்டு வெளியேறினர். எனவே, பிளவு என்பது பேசுபொருளாயிற்று.காலத்தின் நிறம் கறுப்பு சிவப்பு – 1957: முதல் தேர்தல்!

அதன் பிறகு, இருவருக்கிடையிலும் சில சமாதான முயற்சிகளைச் சிலர் மேற்கொண்டனர். ஓரளவிற்கு அது பயனளித்தது. அதனால், 1948 அக்டோபரில் ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் இருபெரும் தலைவர்களும் சேர்ந்து கலந்துகொண்டனர். அந்த மாநாடு திராவிடர் கழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று எனக் கூறலாம்.

“என் பெட்டிச் சாவியை என் தனயன் அண்ணாதுரையிடம் கொடுத்து விட்டேன்” என்று பெரியார் சொன்னது அந்த மாநாட்டில்தான். திரு. வி.க. அவர்கள் கலந்துகொண்டு அம்மாநாட்டில் திராவிட நாடு படத்தைத் திறந்துவைத்தார். பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் கலந்துகொண்ட கடைசி திராவிடர் கழக மாநாடும் அதுதான்.

அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசும்போதுதான் முதன்முதலாகத் தேர்தலில் பங்கேற்பது குறித்து தன் கருத்து ஒன்றை அவர் வெளியிடுகின்றார். அண்ணாவின் உரையில்,

“திராவிடர் கழகம் ஆட்சியைக் கைப்பற்றி அனுபவிக்க விரும்பும் அரசியல் லாப போராட்டக் கட்சி அல்ல. நாட்டுக்குப் புதிய வாழ்வை ஏற்படுத்தும் மிகப்பெரிய லட்சியத்தைக் கொண்டதாக இருக்கிறது. எனவேதான், சில்லறைகளில் சிந்தனையைச் செலவிட மறுக்கிறது.

ஆட்சிக்கு வருவதென்பதும் அவ்வளவு கடினமானதல்ல. கூட்டுத் தோழர்களின் கூட்டுறவைத் தேடிப் பிடிப்பதும் முடியாத காரியமல்ல. இவைகளின் மூலம் தேர்தலில் வெற்றிபெற்று, நாம் ஆளும் கட்சியாக மாறுவதும் நடைபெற முடியாத நிகழ்ச்சியல்ல.”

என்று கூறியிருக்கிறார். இந்த உரையைக் கூர்ந்து கவனித்துப் பார்க்கும் போது, கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியமைப்பது என்னும் நோக்கத்தையும், வழிமுறையையும் தெளிவாக அவர் குறிப்பிட்டிருப்பதை நாம் உணரலாம். ஆட்சிக்கு வந்தால்தான் அய்யாவின் கருத்துகளை நடைமுறைப்படுத்த முடியும் என்பது அண்ணாவின் எண்ணமாக இருந்திருக்கக்கூடும். எனினும், பெரியார் அதனை ஏற்க மாட்டார் என்பதையும் நம் கட்சியின் நோக்கம் சமூக சீர்திருத்தமே என்பதையும் அண்ணா அதே உரையின் பிற்பகுதியில் குறிப்பிடுகிறார்.

அந்த மாநாடு நடைபெற்று ஓராண்டு நிறைவு பெறுவதற்குள்ளாகவே கட்சி பிளவுபட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் புதிய கட்சி உருவாகிவிட்டது.

விடுதலை பெற்ற இந்தியாவில், 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.கழகம் பங்கேற்கவில்லை. திராவிட நாட்டை ஆதரித்தோருக்கு ஆதரவை மட்டுமே அளித்தது. ஆனால், அடுத்த நான்கு ஆண்டுகளில் நிலைமைகள் மாறின. ஆட்சி அதிகாரம் இல்லாமல் நம் சிந்தனைகளையும் திராவிடக் கருத்தியலையும், நாட்டு மக்களிடையே கொண்டுசெல்வது எளிதன்று என்னும் எண்ணம் கட்சியில் எழத் தொடங்கியது.

அந்தக் கட்டத்தில்தான் 1956 மே 17 தொடங்கி 20 வரையில் திருச்சியில் வள்ளுவர் நகரில் தி.மு.கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் முதல்நாள், திருச்சி சிந்தாமணியிலிருந்து கழகத்தின் பேரணி தொடங்கிற்று. அது ஒரு போரணி போல முழக்கங்களால் திருச்சியையே திரும்பிப்பார்க்க வைத்தது.காலத்தின் நிறம் கறுப்பு சிவப்பு – 1957: முதல் தேர்தல்!

அந்த மாநாட்டில்தான் அறிஞர் அண்ணா,“தம்பி வா! தலைமை யேற்க வா! உன் ஆணைக்கு நாங்கள் அடங்கி நடப்போம் வா!” என்று நாவலரை மாநாட்டுக்குத் தலைமையேற்க அழைத்தார்.

மாநாட்டில் உரையாற்றிய தலைவர்களில் சிலர், வரும் பொதுத் தேர்தலில் (1957) கழகம் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர். அதனை மறுத்தும் சிலர் பேசினர். இந்த இடத்தில், ஒரு வாக்கெடுப்பை நடத்தி, நாம் முடிவுக்கு வந்துவிடலாம் என்ற எண்ணம் கழகத்தில் ஏற்பட்டது. மாநட்டுக்கு வந்தவர்களிடம் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கருப்பு, சிவப்புப் பெட்டிகள் அங்கே கொண்டுவந்து வைக்கப்பட்டன. வேண்டாம் என்போர் கருப்புப் பெட்டியிலும், வேண்டும் என்போர் சிவப்புப் பெட்டியிலும் வாக்குச்சீட்டுகளைப் போடுங்கள் என்ற அறிவிப்பு வந்ததும், நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வாக்களித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக சிவப்புப் பெட்டி கனத்துக்கொண்டே வந்தது.

இறுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது, 56,942 பேர் பொதுத் தேர்தலில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். 4,203 பேர் மட்டுமே போட்டியிட வேண்டாம் என்று வாக்களித்திருந்தார்கள். எனவே, தேர்தலில் போட்டியிடுவது என்பது அந்த மாநாட்டில் உறுதியாயிற்று. எனவேதான் இன்றைக்கும் தி.மு.கழகத்தின் திருப்புமுனை திருச்சி என்று சொல்கின்றோம்.

அம்மாநாட்டில் அண்ணா அவர்கள் நிறைவுரை ஆற்றும்போது, “நீங்கள் இப்போது தீர்மானித்தீர்களே, நாம் எல்லோரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று! பொதுத் தேர்தலில் போட்டியிட நீங்கள் காட்டுகின்ற இந்த ஆர்வத்தைத் தேர்தல் காலத்தில் மேலும் வளர்ச்சியடையச் செய்து, நாம் வெற்றிபெறுவதற்கான சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தேர்தலில் போட்டியிடுவது என்பது வெறும் தீர்மானமாக இல்லாமல், அது செயல்வடிவம் பெற வேண்டும் என்று கழகத்தின் தலைமை விரும்பியது. அதன் பயனாக, 1956 டிசம்பர் 29ஆம் தேதி சேலத்தில் தி.மு.க.வின் பொதுக்குழு கூடியது. வரும் பொதுத் தேர்தலில் 150 இடங்களில் போட்டியிடுவது என்றும், 1957 ஜனவரி 15ஆம் தேதிக்குள் தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிடுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் என்.வி.நடராசன், ஈ.வெ.கி.சம்பத், மதியழகன், கலைஞர் மு.கருணாநிதி, கோவிந்தசாமி, எம்.பி.சுப்பிரமணியம், சத்தியவாணி முத்து அம்மையார் ஆகியோர் இடம் பெற்றனர்.

அதுவரையில் தேர்தல் அனுபவமே இல்லாத கட்சியாக இருந்தாலும், தேர்தல் நடைமுறைகளில் தேர்ந்த ஒரு கட்சியைப் போல தி.மு.க.வின் செயல்பாடுகள் அமைந்தன.

1957 ஜனவரியில் தேர்தலுக்கு நிதி திரட்டும் பணியைத் தி.மு.கழகம் தொடங்கிற்று. முதல் நிதியை மகளிர் அணி தந்தது என்பது ஒரு பெருமைக்குரிய செய்தி. 09.01.57 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற தி.மு.கழக பொதுக் கூட்டத்தில் 1,011 ரூபாயை மகளிர் அணி, அறிஞர் அண்ணாவிடம் வழங்கிற்று. அன்றைக்கு அதுவே ஒரு பெரிய நிதிதான்.

“மக்கள் உள்ளத்தைவிட சட்டசபை ஒன்றும் பெரிதில்லை. மக்கள் உள்ளத்தில் கழகத்தினர் பெற்றிருக்கும் உயரிய இடத்தைவிட, சட்டசபை உறுப்பினர் பதவி என்பது நிச்சயம் பெரியதும் இல்லை. பெருமைக்குரியதும் இல்லை” என்று தன் உரையைத் தொடங்கிய அண்ணா அவர்கள், சட்டமன்றத்திலும் வெற்றிபெற்று நாட்டில் நம் கருத்தைப் பரப்பிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தத் தயங்கவில்லை.

அதற்கு அடுத்த கட்டமாக, வேட்பாளர் பட்டியலைத் தி.மு.க. கழகம் அறிவித்தது. காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா, சேலத்தில் நாவலர், குளித்தலையில் கலைஞர், சென்னை எழும்பூரில் பேராசிரியர், திருக்கோஷ்டியூரில் கவிஞர் கண்ணதாசன், ஆயிரம்விளக்கில் ஆசைத்தம்பி, பேசின் பிரிட்ஜில் என்.வி.நடராசன், வளவனூரில் ஏ.கோவிந்தசாமி, நாகையில் நாகூர் அனீபா என்று வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

காலத்தின் நிறம் கறுப்பு சிவப்பு – 1957: முதல் தேர்தல்!

தேர்தல் அறிக்கையையும் தி.மு.கழகம் வெளியிட்டது. மாநிலங்களுக்கு அரசியல் சமத்துவம் வேண்டும், ஐந்தாண்டுத் திட்டங்களில் தென்னாடு புறக்கணிக்கப்படக் கூடாது, தாய்மொழி தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், பள்ளிக்கூடங்களிலிருந்து இந்தி கட்டாயப் பாடம் என்பது நீக்கப்பட வேண்டும், நிலவுடைமைக்கு வரம்பு கட்டும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், வேளாண்மைத் துறையில் கால்நடைப் பண்ணை, கோழிப்பண்ணை ஆகியவை விரிவு செய்யப்பட வேண்டும், மீன் உற்பத்தி பெருக்கப்பட வேண்டும், பத்தாம் வகுப்பு வரையில் எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும். என்பன போன்ற பல கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.

அறிஞர் அண்ணா அவர்கள் போட்டியிட்ட காஞ்சி உட்பட பல தொகுதிகளில் போட்டி கடுமையாக இருந்தது. அய்யா பெரியார் அவர்களை அழைத்துவந்து காங்கிரஸ் கட்சி, பல இடங்களில் தேர்தல் பரப்புரையை நடத்திற்று. தி.மு.க.விற்கு எதிரான இழிவான சொற்கள், சாக்கடை மொழிகள், மேடைகளிலும் சுவரொட்டிகளிலும் வலம்வந்தன. எல்லாவற்றையும் தாண்டி, குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பெற்றதோடு, தி.மு.கழகம் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 15 இடங்களில் வெற்றி வாகை சூடியது.

1957 மார்ச் 1, 4, 6, 8, 11 ஆகிய தேதிகளில், தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடைபெற்றன. காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றிபெற்றது. தி.மு.க. 15 இடங்களைக் கைப்பற்றியது. தமிழ்நாட்டில் மொத்தம் பதிவான 1,16,36,902 வாக்குகளில் 16,53,435 வாக்குகளை தி.மு.க. பெற்றது.

தேர்தல் களத்தில் அறிஞர், கலைஞர், பேராசிரியர் உள்ளிட்டோர் சட்டமன்றத் தேர்தலிலும், ஈ.வெ.கி.சம்பத், தர்மலிங்கம் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றார்கள். நாவலர் நெடுஞ்செழியன், கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்டோர் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது.

1957ஆம் ஆண்டு, தி.மு.கழகம் தேர்தலை மட்டும் சந்திக்கவில்லை. பல அனுபவங்களைச் சந்தித்தது. பல அறைகூவல்களை எதிர்கொண்டது. அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் வெற்றியைத் தன் நடைமுறையாக்கியது. தோல்விகளை அனுபவமாய்க் கொண்டது. அன்று தொடங்கி இன்று வரை எத்தனையோ தேர்தல்கள், எவ்வளவோ வெற்றி தோல்விகள்!

எல்லாவற்றையும் கடந்து, வீசும் புயலிலும் விளக்காக, அடித்த வெள்ளத்திலும் அணையாக நிலைத்து நிற்கிறது தி.மு.கழகம். கருப்பும், சிவப்பும் முரண் இல்லை. ஒன்றுக்கொன்று அரண் என்பதை மெய்ப்பித்திருக்கிறது தி.மு.கழகம்.

இன்றும் இனியும் தி.மு.கழகம் போராடும்!
தி.மு.கழகம் வெல்லும்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வின் எதிரிகள் யார்?

MUST READ